
இளையராஜாவின் இசையில் வந்திருக்கும் 1000வது படம் என்ற வரலாற்றுச் சிறப்பினைப் பெற்ற படம்.
சன்னாசி கரகாட்டக் குழு, அதன் பிரதான ஆட்டக்காரி சூறாவளி இல்லாமல் நொடிந்து போகிறது. சூறாவளிக்கு என்னானது என்பது தான் படத்தின் கதை.
சூறாவளி என்ற கதாபாத்திரத்தின் பெயருக்கு ஏற்ப வரலட்சுமி அசத்தியுள்ளார். முதல் பாதி படத்தைத் தனியொருவராகச் சுமக்கிறார். சன்னாசி மீது அவர் வைத்திருக்கும் காதல் பிரம்மிப்பூட்டுகிறது. அதை வரலட்சுமி மிக ஆர்ப்பாட்டமாக முன் வைக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல் இவர் தோன்றும் காட்சிகள் மட்டுமே!
படத்தின் நாயகனான சன்னாசியை விட அவரது தந்தையாக வரும் சாமி புலவர் ஈர்க்கிறார். சன்னாசியாக சசிகுமாரும், சாமி புலவராக G.M.குமாரும் நடித்துள்ளனர். கரகாட்டக் குழுவினர் எதிர்கொள்ளும் வறுமையை ஊறுகாய் போல் தொட்டுச் சென்றுள்ளார் பாலா. பாலாவின் படங்களுடைய தீவிரத்தன்மையை, படம் நெடுகே வரும் மெல்லிய எள்ளல்கள் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும். பரதேசியினைப் போலவே இப்படத்திலும் அத்தகைய எள்ளல்கள் இல்லாதது பெரும்குறை.
படம் முழுக்கவே திரைக்கதையில் ஒரு மெத்தனமும் கோர்வையின்மையும் அலட்சியமும் தெரிகிறது. கரகாட்டக் கலை (!?) அல்லது பொதுவில் நாட்டுப்புறக் கலை, எப்படி அணுகப்பட வேண்டுமென்ற அக்கறையை ஒரே ஒரு காட்சியில் கூட படம் பிரதிபலிக்கவில்லை. மலிவான கேமிரா கோணங்களால் வரலட்சுமியையும் ஆனந்தியையும் கலையையும் அசிங்கப்படுத்தியுள்ளார் பாலா.
நாயகி நாயகன் மீது வைத்துள்ள காதலையும், படத்தின் முடிவையும் பருத்தி வீரனில் இருந்து எடுத்துள்ள பாலா, வில்லனை மட்டும் தன் படங்களில் இருந்தே எடுத்துக் கொண்டுள்ளார். ஸ்டூடியோ 9 நிறுவனர் R.K.சுரேஷ் வில்லனாக மிரட்டியுள்ளார். ஆம், அவர் ஏற்றிருக்கும் கருப்பையா எனும் கதாபாத்திரத்தை அப்படிச் செதுக்கியுள்ளார் பாலா. அவதாரங்கள் நிகழ்த்தும் சம்ஹாரத்தின் வெற்றியும் சிறப்பும், அரக்கன் எந்தளவுக்கு ஈவிரக்கமற்றவனாக இருக்கிறானோ, அதன் பொருட்டே நிர்ணயிக்கப்படும். பாலாவின் குரல் வளை மோகத்துக்கு தீனி போடுமளவு கெட்டவன் கருப்பையா. ஆறு மாதங்களாகக் காணாத நாயகியை, அடுத்த ஃப்ரேமிலேயே நிறைமாத கர்ப்பிணியாகக் கண்டுபிடிக்க தமிழ்ப்பட நாயகனாலேயே முடியும். அதுவும் உயிர் போகுமளவு அடி வாங்கிய பின்னும், ஒன்றுமே நடவாத மாதிரி எழுந்து சண்டையிட தமிழ்ப்பட நாயகனால் மட்டுமே முடியும். அந்தச் சண்டையையும் வெறியுடனிட பாலாவின் வன்முறை மிகுந்த நாயகனாலேயே முடியும்.
பாலாவின் சம்ஹார இச்சையும், இளையராஜாவின் பக்தி ஆவேசமும், படத்தின் இறுதி இருபது நிமிடங்களில் நம்மை நரகத்துக்கே இட்டுச் செல்கின்றன.