Shadow

திருநாள் விமர்சனம்

Thirunaal Tamil Review

யாருமற்ற அடியாளான பிளேடிற்கு சாக்கு மண்டி முதலாளி மகள் வித்யா மீது காதல் மலர்கிறது. அக்காதல் வெளியில் தெரிய வர, அனைவருக்கும் குழப்பமும் சங்கடமும் மேலிடுகிறது. அவர்கள் காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை.

தாதாவாக சரத் லோகிதஸ்வா மிரட்டியுள்ளார். ஆஜானுபாகுவான தோற்றமும், கூரிய பார்வையும் கொண்ட அவர் தோன்றும் முதல் ஃப்ரேமில் இருந்தே மனிதன் அசத்துகிறார். அவருடன் ஃப்ரேமில் யார் தோன்றினாலும் பொலிவிழந்து போகின்றனர். இவர் சரீரத்தால் மிரட்டினால், கரடு முரடான சாரீரத்தாலும் பெரிய விழிகளாலும் அச்சுறுத்துகிறார் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். இவர் முன் மீசையை முறுக்கிக் கொண்டு வண்டியில் உட்காரும் ‘நீயா? நானா?’ கோபிநாத், ஃப்ரேமில் நானில்லை என்பது போல் பொலிவிழுந்து காணப்படுகிறார். திறமையான காவல்துறை அதிகாரி எனக் காட்ட திரைத்துறைக்குத் தெரிந்த ஒரே வழி “என்கவுன்ட்டர்” மட்டும் தான் போலும். கோபிநாதிற்குப் பொருந்தா வேஷமாக அது அமைந்துள்ளது. திருந்தி வாழும் ஒருவனை, தாதாவுடன் கோர்த்து விடுவதின் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறார் இந்த ‘நல்ல’ போலீஸ்’ என்று தெரியவில்லை.

காதலிக்கப்படவும், காதலிக்கவும் வித்யாவாக நயன்தாரா. தாவணியிலும் சேலையிலும் கொள்ளை அழகோடு ஜொலிக்கிறார். “பழைய சோறு பச்ச மிளகா” என்ற பாடலினூடே பிளேடு – வித்யா காதல் மலர்வதாகக் காட்டுவது நன்றாக உள்ளது. அதுவும் மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில், பச்சைப் பசேல் என்ற வயல்வெளியின் நடுவில் காதல் மலர்வது மனதிற்கு நெருக்கமாய் உணர முடிகிறது. இப்படி ஒரு சூழலில், இருவர் மட்டும் பயணிக்கும் பொழுது தமிழ் சினிமாவில் காதல் மலராவிட்டால் தான் ஆச்சரியப்படணும்!!

அரை பிளேடை வாயில் போட்டுக் குதப்பி, எதிராளி முகத்தில் சில்லுச் சில்லாகத் துப்பும் அடியாளாக ஜீவா. அழுக்கான முகமும், விட்டேத்தியான பார்வையுமாக ஜீவா கதாபாத்திரத்துக்குப் பொருந்தினாலும், ஹீரோவாகக் கவராமல் அடக்கியே வாசிக்கிறார். ‘பழைய சோறு’ பாடலின் பொழுதும், அதற்கு முந்தைய சண்டைக் காட்சியிலும் தெரியும் ஜீவா, அதன் பின் காணாமல் போகிறார். குற்றவுணர்வோடும், ஒரு வித குழப்பமான மனநிலை கொண்ட பிளேடாகவே படம் நெடுகிலும் உள்ளார். அந்தக் கதாபாத்திரத்தின் மனநிலைக் குழப்பம், ராம்நாதின் திரைக்கதையிலும் பிரதிபலிப்பது துரதிர்ஷ்டவசமானது.

நயன்தாராவின் தந்தையாக வரும் ஜோ மல்லூரி தன் பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். முனிஸ்காந்த் சில காட்சிகளில் கிச்சுக்கிச்சு மூட்டினாலும், நகைச்சுவைக்குப் பெரிதாக உதவவில்லை. படத்தில் தேவையில்லாத ஓரிடத்தில் ‘திட்டாதே..’ என்றொரு ‘ஐட்டம் சாங்’ வருகிறது. ராமசந்திரன் துரைராஜ் சுஜிபாலாவை, ‘ஆடுடி தே***” எனச் சொல்கிறார். சரசமாக ஆடத் தொடங்கும் சுஜிபாலா, ‘எப்படி வேணா திட்டு, ஆனா அப்படி மட்டும் திட்டாதே!’ எனப் பொருள்படும்படி பாடுவார். படத்திற்குக் கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லையெனினும், மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது இப்பாடல். ஓர் ஐட்டம் சாங்கில், பெண் ஒருத்தி நாசூக்காக தன் மன உணர்வைப் பதியும்படி பாடலை அமைத்திருப்பது அருமை. ஸ்ரீ என தனது பெயரைச் சுருக்கிக் கொண்டுள்ளார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.

கதையில் தெளிவும், திரைக்கதையில் சுவாரசியமும் இல்லாததைக் கூடப் பொருத்துக் கொள்ளலாம். ஆனால் இறுதியில், ‘ஆயுதங்களை அழித்து வன்முறையை ஒழிக்கும் நாள் தான் திருநாள்’ என்ற இயக்குநரின் அறிவுரை தான் செம காமெடி. அதற்குத் தோதாக காட்சியோ, ஒரே ஒரு வசனமோ கூடப் படத்தில் இல்லை. இயக்குநரின் நல்லெண்ணம் திரைக்கதையிலும் பிரதிபலித்து இருந்தால், மிக நல்லதொரு என்டர்டெயினர் படமாக அமைந்திருக்கும் என்பது மட்டும் திண்ணம்.