கசாப்பிற்கு மரண தண்டனை கொடுப்பதால், நாட்டில் rarest of the rare குற்றங்கள் குறையும் என எச்சில் தெறிக்க தீர்க்கதரிசணம் சொன்னவர்களின் எச்சில் மண்ணில் விழும் முன் டெல்லியிலொரு கொடுமையான சம்பவம் நடந்து விட்டது. உடனே பெரும்பான்மையோரின் எதிர்வினை, “அவனைக் கொல்லணும்.. இல்லை கொன்றால் இறந்து விடுவான்.. நந்தா படத்தில் வருவது போல் அவன் பிறப்புறுப்பை அறுத்து விடணும்.. இம்மி இம்மியாகத் துடிக்க வைத்துக் கொல்லணும்” என்பதாக உள்ளது. ராம்சிங்கைக் கொன்றால்தான், இனி நாட்டில் இது போல் குற்றங்கள் நிகழாது என மக்கள் நம்புகின்றனர். புரையோடிய சமூகத்தில் குற்றங்களும் குறையப் போவதில்லை. மக்களின் வெகுவான ஆதரவோடு மரண தண்டனை அரசால் படு ஜோராக நிறைவேற்றப்படுவதும் நிற்கப் போவதில்லை.
கசாப் கொடியவன். ராம் சிங் வக்கிரம் பிடிச்சவன். அவர்களைக் கொல்வதே சரி என்பது பொது மக்களின் நியாயம். அரசும் இத்தகைய குற்றங்களை rarest of the rare என அறிவித்துள்ளது. ஆனால் சில லட்சங்களைத் திருடியதாக சந்தேகப்பட்டு, வேளச்சேரியில் நான்கு இளைஞர்களைக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் செய்த என்கவுன்ட்டர் எதில் சேர்த்தி? அதற்கும் மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. அந்தக் கொள்ளையும் rarest of the rare case-இல் வருகிறதா? என்வுன்ட்டர் என்ற பெயரில் காவல்துறை நடத்தும் கொலைகளுக்கும், மரண தண்டனை உண்டென உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது. ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்களை என்ன செய்ய முடியும்? மனித உயிர்களை விட லட்சங்கள் தான் முக்கியமெனப் புரையோடிய மக்கள் உள்ள சமூகத்தில் அதிகாரம் சுலபமாக எவரையும் பலி கொள்ளும்.
தோனி படத்து பிரகாஷ்ராஜ் தன் மகன் கோமாவிற்குப் போனதும் விழித்துக் கொள்வார்(!?). தன் மகன் எம்.பி.ஏ. படிக்கணும் என்ற அழுத்தத்தைத் தரும் அவர் மீது எந்தத் தவறும் இல்லை. ஆனால் தன் மகனை அடிக்க வைத்தது பள்ளியும், ஆசிரியர்களும், கல்வி முறையும் எனக் குற்றம் சாட்டுவர். தனது ஆசையையும், இயலாமையையும் மறைத்து சமூக மாற்றத்திற்காகப் போராடும் ஒருவராகத் தன்னை முன்னிறுத்துவார். இது போல் போராடும் குணம் உள்ளவர்கள் தான்.. கசாப்பிற்கும், ராம் சிங்கிற்கும் என்ன தண்டனை விதிக்க வேண்டுமென முதல் ஆளாகக் கருத்து சொல்கின்றனர்.
புளி மூட்டைகளை ஏற்றுவது போல அளவுக்கு அதிகமாகப் பிள்ளைகளை ஆட்டோவில் ஏற்றி விட்டு, “பத்திரமா பார்த்து ஓட்டுப்பா” எனப் பொறுப்புடன் பெற்றோர் நடந்து கொள்வர். அந்த ஆட்டோ கவிழ்ந்து ஏதாச்சும் விபத்து ஏற்பட்டு விட்டால், பொது மக்கள் ஆவேசமாகி ஆட்டோவைக் கொளுத்தி விடுவர். 24 x 7 செய்தி சேனலில், “இந்த மாதிரி நிறைய ஆட்டோ அளவுக்கதிகமாகப் பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு போகுது. அரசாங்கமும், போலீசும் இதை எப்படி அனுமதிக்கிறாங்கன்னு தெரில. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்” எனப் பெற்றோர் கண்ணீருடன் சொல்வர். அடுத்து எரியும் ஆட்டோ காட்டப்படும். பெற்ற பிள்ளையைப் பறி கொடுத்த பின் அவர்கள் எந்த நீதிக்காகப் போராடுகின்றனர் எனத் தெரியவில்லை. பணம், நேரம் என ஏதோ ஒரு சமரசத்திற்காக பெற்றோர்களே தினமும் ஆட்டோவில் பிள்ளைகளைச் சொருகி அனுப்புவார்கள். இத்தகைய பிரகாஷ்ராஜ்கள் தான், ஆட்டோ கவிழ்ந்தவுடன், பழியை மற்றவர் மேல் திருப்பி விட்டு விடும் சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள்.
காவல் துறையினர் அளித்த தகவலின் படி ராம்சிங்கின் வயது 33; அடிக்கடி குடிப்பவராம். குடி மனிதனை வக்கிரமாக்குகிறது என வாய் கிழியப் பேசுபவர்களும் எப்பொழுதாவது ஜாலிக்காகக் குடிப்பர். தோனி படத்து பிரகாஷ்ராஜ் போல (அவர் குடிப்பது அவர் மகன் + மகளுக்கும் தெரியும்). ஆனால் அவர் மகன் குடிப்பதை என்றேனும் நேரில் பார்த்து விட்டால், சும்மா ஜாலிக்காக குடிக்கிறான் என்று விட்டு விடுவாரா? ‘படிக்கிற வயதில் குடியா?’ என அடி பின்னிடுவார். அவரால் அது தான் செய்ய இயலும். ஏன் குடிக்கிறான் என யோசித்து அதைக் களைய வழி இருக்கா என யோசிக்க மாட்டார். இவர் கண்ணில் மாட்டினால் அடி உதையோடு போகும். ஆனால் அதே மகன் லாரி அடியில் சிக்கினால்… 24 x 7 செய்தி சேனலில், “எப்படி ஸ்கூல் பசங்களுக்குலாம் டாஸ்மாக்கில் சரக்கு தர்றாங்க? இந்த அரசாங்கமும், போலீசும் என்ன பண்றாங்க? எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது” என கண்ணீரோடு பேசுவார் பிரகாஷ் ராஜ். “நீயா நானா”விலும் அழுதபடி தோன்றுவார். அழுபவன் நல்லவனாக இருப்பான் என புது ட்ரெண்ட் உருவாகிறது. அவர் மகனுக்கு சரக்கு விற்கப்பட்ட அந்தக் கடையை “மட்டும்” அடித்து உடைப்பார்கள் instant ஆக அறச் சீற்றம் எழுந்தடங்கும் பொதுமக்கள். இதே பிரகாஷ்ராஜ்கள் டாஸ்மாக்கில் நிற்கும் பொழுது, அவர் மகன் வயதுடைய பையன் யாரேனும் முண்டியடித்து சரக்கு வாங்கினால், “இதெல்லாம் எங்க உருப்படப் போகுது?” என அருவருப்புடன் முகம் சுளிப்பர். அவர் மகன் நல்லாயிருக்கணும்; மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் கவலைப்படாத பிரகாஷ்ராஜ்கள்.
மணிகண்டன் என்னும் அந்த மாணவனின் பெற்றோர் சொல்லி அழுதது: “மிகவும் அமைதியான பையன், யாருடனும் அதிகம் பேச மாட்டான், பழக மாட்டான். அவன் இப்படிச் செய்திருப்பான் என்பதை நம்பவே முடியவில்லை.”
இப்படி நம்ப முடியாதவர்களால் தான் இந்தச் சமூகம் சூழப்பட்டுள்ளது. இந்த உதாரணங்கள் ஒரு துளி. எங்கோ பீகாரில் நடந்தவைகள் இல்லை. இங்கே, பச்சை தமிழகத்தில் நடந்தேறிய அவலங்கள். ராம்சிங்கின் பிறுப்புறுப்பை அறுத்தாலோ, அவனை துடிக்க வைத்து கொன்றாலோ.. இது போன்று தவறுகள் குறைந்து விடுமென நம்புவது முட்டாள்தனம். சமூகத்தில் குறிப்பாக பள்ளிப் பருவத்திலேயே இத்தகைய விஷ மனநிலை உருவாகத் தொடங்கி விடுகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக இரண்டினை சொல்லலாம். ஒன்று காட்சி ஊடகம் (சினிமா, டி.வி.), மற்றொன்று குடும்ப சூழல். அரசு மக்களின் விருப்பதிற்கிணங்க ராம்சிங்கைக் கொன்று பிரச்சனையை முடித்ததாக மார்தட்டிக் கொள்ளாமல்.. காட்சி ஊடகத்திற்கு அதி தீவிரமான தணிக்கையைக் கொண்டு வருவதோடு மட்டுமில்லாமல் அதைத் தொடர்ந்து கண்கானிக்கவும் வேண்டும்.
அடுத்து குடும்பச் சூழல். பிரபஞ்சன் தனது நாவல் ஒன்றில் அங்கலாய்த்துக் கொண்டது போல் மனிதர்கள் தீவுகளாக மாறி விலகிப் போகின்றனர். கூட்டுக் குடும்பம் என்ற இந்தியர்களின் பாரம்பரியம் சிதைந்து விட்டது. வேலைக்குப் போகும் பெற்றோர்கள். பிள்ளைகள் எது கேட்டாலும் வாங்கி தரும் பாசப் பிழியர்கள். அதற்கு பிரதியுபகாரமாக நல்ல மதிப்பெண்கள் மட்டும் தேவை. இங்கு முதலில் பெற்றோரின் மனநிலையைப் பார்ப்போம். வேலையில் ஆயிரம் பிக்கல், பிடுங்கல்கள். மேலதிகாரியின் டார்ச்சர். டென்ஷனுடன் ஆஃபிசிற்கு ஓடி, அதை இரட்டிப்பாக்கிக் கொண்டு வீடு திரும்புவர்கள். ஆஃபிஸ் போய் வரும் பயணமும் தலைவலி அளிக்க கூடியதாகவே உள்ளது. வீட்டிற்கு வந்தால் ஆய்ந்து ஓய்ந்து, அடுத்த நாளிற்கான திகிலோடு முடங்குகின்றனர். பெரியவர்களாகிய பெற்றோர்களுக்கே தமக்கு ஏற்படும் stress, depression, pressure மற்றும் anxiety-யைப் போக்கிக் கொள்ளும் வழி தெரியாமல் தடுமாறுகின்றனர். கணவன்/மனைவி, மேலதிகாரி என எந்தக் கோவத்தையும் வாகாக காட்ட முடிந்த ஒரே இடம் பிள்ளைகள். பள்ளியில் சக்கையாக பிழியப்பட்டு வந்தொடுங்கும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களால் கூடுதல் அழுத்தம் அளிக்கப்படுகிறது. இயல்பாக துள்ளி விளையாட வேண்டிய பருவத்தில், விளையாட்டையும் பாடமாக்கி பிரம்பின் கீழ் ஒழுங்குமுறையோடு மைதானத்தில் ட்ரில் எடுக்கப்படுகின்றனர். பெற்றோர்களுக்கும் சரி, பிள்ளைகளுக்கும் சரி மன அழுத்தங்களைப் போக்கிக் கொள்ள வாய்ப்பே கிடைப்பதில்லை. ஒரே பொழுதுபோக்கான சினிமா + டி.வி.யால்.. இரட்டிப்பு அழுத்தங்களின் அளவு பன்மடங்காய் பெருகுகிறது. ஓய்வு நேரங்களுக்காக ஏங்கும் மனதையும், அத்தகைய மதிப்புமிக்க நேரங்களை காட்சி ஊடகத்தில் செலவழிக்கும் குரூர பழக்கத்தையும் தான் இன்றைய குடும்ப சூழல் அளிக்கிறது. நம் சமூகம் வாழ்வைக் கொண்டாடுதல் என்றால் என்னவென்று தெரியாத சமூகமாக மாறி விட்டது. பெரியவர்களை மதித்தல் என்றால் என்னவென்று தெரியாத சமூகமாக மாறி விட்டது. இது இரண்டும், கூட்டுக் குடும்பமாக இருந்தால் இயல்பாய் நடந்தேறும் சங்கதிகள். பொருளாதார நெருக்கடி அந்த வாய்ப்பை கொடூரமாக நம்மிடம் பிடுங்கி விட்டது. அதை சரி செய்ய, பிள்ளைகளிடம் நிறைய நேரம் செலவழிக்க வேண்டியதாக உள்ளது. அதற்கு முதலில் பெற்றோர்கள் தங்களை மகிழ்ச்சியானவர்களாக வைத்து கொள்ள வேண்டும். வீட்டிற்கு வந்தும் முதலாளியை திட்டிக் கொண்டும், கணவன்/மனைவி உடன் காட்டமான வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்க கூடாது. சக மனிதர்களை நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். குடும்பத்திற்குள்ளேயே நேசத்தினைப் பெறாத எந்தக் குழந்தையும் ராம்சிங்காக மாற வாய்ப்புள்ளது. தயவு செய்து தோனி பிரகாஷ்ராஜ் போல் இருந்துவிட்டு, பழியினை எவர் மீதாவது போட்டு விடாதீர்கள்.
“வயது நாலு“ என்னும் S. ராமகிருஷ்ணின் கட்டுரை சுட்டிக் காட்டும் நிதர்சனத்தைக் கவனிக்கவும்.
~~பிள்ளைகளின் புத்தகப் பையை முதுகில் மாட்டிக் கொண்டு, ஒரே ஒரு நாள் அலுவலகம் சென்று பாருங்கள்