Shadow

நியூயார்க் இந்தியத் தூதரகம் – ஓர் அவஸ்தையான அனுபவம்

அப்பா இறந்துவிட்டார்.

உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போலிருந்தது அந்த தகவல்.

அப்பா

அந்தச் செய்தியின் தாக்கத்தை, அது தந்த உணர்வுகளை அதன் அடுத்தடுத்த கட்டத்தை உள்வாங்கவே முடியாமல் ஸ்தம்பித்த ஒரு நிலை. உடனே அம்மாவை, அக்காவை, தம்பிகளை, தங்கையைப் பார்த்தே ஆகவேண்டும் என்பது மட்டும் தோன்றியது. இச்சமயத்தில் அவர்களோடு நானிருக்க வேண்டும். அது மட்டுமே எங்கள் துயரத்தைத் தணிக்க முடியும். இப்படி ஏதேதோ தோன்றி மறைந்த துயர நிலை.

கணவரும் குழந்தைகளும் தேற்றினாலும், தீராத துயரநிலை. உடனடியாக நான் மட்டும் இந்தியா கிளம்புவது என்று முடிவெடுத்து பயண ஏற்பாட்டைத் துவக்கினால், எனக்கு விசா வாங்கவேண்டும் என்பது நினைவுக்கு வர, எதுவும் தோணாமல் நான் மட்டும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ரயிலில் நியூயார்க் போக முடிவெடுத்தேன். முதல் முறையாக கணவரின் துணையில்லாமல் நியூயார்க் பயணம்.

இந்தியத் தூதரகம் எங்கிருக்கிறது, அங்கே யாரைப் பார்க்க வேண்டும், என்ன நடைமுறை, அங்கிருந்து JFK விமான நிலையத்திற்கு எப்படிப் போவது என எதுவும் தெரியாமல், ஏதோ ஒரு அசட்டுத் தைரியத்தில் குழந்தைகளையும், கணவரையும் விட்டுவிட்டு கைப்பேசியின் துணையுடன் முருகன் விட்ட வழி என, அவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு அதிகாலையில் கிளம்பி விட்டேன். ரயில் நிலையம் வரை வந்த கணவரும், “எல்லாம் நல்ல படியா முடியும், ஒரு பிரச்னையும் இருக்காது. கவலைப்படாதே, அடிக்கடி பேசிக்கிட்டிரு” என்று சொல்லி ரயிலில் ஏற்றி விட்டார். அப்பாவுடனான என் சிறுவயது நிகழ்வுகளை அசை போட்டு அழுது கொண்டே ஒரு வழியாக எனக்கு மிகவும் பிடித்த நியூயார்க் நகரின் கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்து விட்டேன்.

NY Central Grand Station

குளிருமில்லாமல் அதிக வெயிலுமில்லாத காலை வேளை. வேலைக்குச் செல்ல பறந்தோடும் மக்கள் கூட்டம். எதையும் ரசிக்கும் மன நிலையில் அப்போது இல்லை. ஏற்கெனவே குறித்துக்கொண்டு வந்திருந்த முகவரிப்படி நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கும். கையில் இருக்கும் பெரிய சூட்கேசுடன் அது சாத்தியப்படாது. வாடகைக்காரை கூப்பிட அவன் சென்னை ஆட்டோக்காரன்போல ஊர் தெரியாத என்னைப் பல தெருக்களைச் சுற்றி அழைத்துக் கொண்டு போன மாதிரி எனக்குத் தோன்றியது. ஹிந்தி தெரியுமா என்ற கேள்வி வேறு!

மக்கள் குடியிருப்பு போன்ற ஏரியாவில் ஆறேழு பேர் தெருவில் நின்று கொண்டிருந்தார்கள். இவர்கள் ஏன் இங்கு நிற்கிறார்கள்? மணி அப்போதே ஒன்பதரைக்கு மேல். பெரிய கதவுகளுடன் இருந்தஒரு வீட்டில் (அலுவலகத்தில் ) இருந்து கனத்த உருவம் ஒன்று தன் வயிற்றைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு கோட் சூட்டுடன் வீதியில் வர, பளபள கறுப்புக் கண்ணாடியுடன் பெரிய கார்ஒன்று வர, ஓட்டுநர் வந்து கதவைத் திறக்க உள்ளே போய்க் குந்திக் கொண்டது அந்த உருவம். அவர் தான் தூதரக மேலதிகாரி என்றார்கள்.

ஒரு வழியாகப் பெட்டியை சுமந்து கொண்டு வரிசையில் போய் நின்றால், இதெல்லாம் எடுத்திக்கிட்டு உள்ளே போக முடியாது என்று ஒரு சட்டாம்பிள்ளை சொல்ல, நீயே பார்த்துக்கோ என்றுஅங்கேயே போட்டு விட்டு உள்ளே போனால், ஐயோகோ என்ன கொடுமை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பதில் துவங்கி ஏகப்பட்ட பெருமைகளைக் கொண்ட நம் நாட்டின் தூதரகம்எத்தனை அமர்க்களமாய் இருக்க வேண்டும். ஆனால் எப்படி இருந்தது தெரியுமா?

ஒரு பேஸ்மென்ட்டில்.

சரி, அது கூட ஒகே. ஆனால் அங்கே வருகிறவர்கள் தெருவில்தான் வரிசையில் நிற்க வேண்டும். ஏறத்தாழ நம்மூர் ரேஷன் கடையில் நிற்பது போல! குளிர், பனி, மழை பெய்யும் நாட்களில் ஒதுங்ககூட வசதி இல்லை. நமக்குத்தான் இதெல்லாம் பழகி விட்டதே. அதற்குள் பாஸ்போர்ட் புதுப்பிக்க வந்தவர்கள் கூட்டம் அதிகமாகி விட்டது!

உள்ளே இத்தூனுண்டு அலுவலகம். எங்கும் பேப்பர் குப்பைகள். குடிக்கத் தண்ணீர் ஒரு ஓரத்தில். அதைப் பார்த்தாலே வைரஸ் காய்ச்சல் வந்து விடும் சுத்தத்தில் இருந்தது . வரிசை இல்லை.ஒழுங்கு இல்லை. நம்மூரில் பழைய தபால் அலுவலகங்கள் இருக்குமே அது மாதிரி இரண்டு மணிக்கூண்டு. ஒருவர் மட்டுமே பாஸ்போர்ட்களைப் படிவங்களுடன் வாங்கிக் கொண்டிருக்க, முதல்ஷோவிற்கு டிக்கெட் வாங்க முண்டியடிக்கும் கூட்டம் போல்…ஒரே கூச்சல் குழப்பம், தள்ளு முள்ளு! என்னையும் இன்னொரு பெண்மணியும் தவிர வேறு மகளிர் கூட்டமும் இல்லை. வழக்கம்போல் ‘வெறிச்’ பார்வைகளைக் கடந்து கூண்டிற்குப் போனால், நீங்கள் முதலில் வேறொரு அலுவலகத்திற்குப் போய் ஏதோ ஒரு படிவத்தை முடித்து, அவர்கள் ஒகே என்று சொன்னால்தான் நாங்கள் விசா தர முடியும் என்று விட்டேத்தியாய் ஒரு பதில்.

“அட கட்டையில போறவனே இதெல்லாம் தெளிவா வலைப்பக்கத்தில் போட வேண்டியது தானே” என்று ஆத்திரப்பட்டவுடன், ஏடு ஜோசியம் பாக்குறவன் மாதிரி கொடகொடன்னு ஹிந்தியில ஏதோ உளறிக் கொட்ட, பள்ளியில் ஹிந்தி படிக்க விடாமல் செய்த சொட்டைத் தலை அரசியல் வியாதிகளை மனதிற்குள் கரித்துக் கொண்டே, அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்து “முஜேஹிந்தி நஹி மாலும்” என்றவுடன் ஒரு அசட்டு வழிசலுடன் அலுவலக முகவரி தந்தான். ஆத்திரமும், அழுகையுமாய் அனாதையாய் கிடந்த என் பெட்டியை தூக்கிக்கொண்டு அழுக்கேறிய படிக்கட்டுக்களில் ஏறி தெருமுனை வரை நடந்து போய், வாடகைக்காருக்காகக் காத்திருந்து இதற்குள் பசி வேறு!

ஒரு வழியாக அவர்கள் சொன்ன அலுவலகத்திற்குப் போனால், அங்கும் மாடிப்படிகள். பெட்டியை கீழே விட்டு விட்டு மேலே போய் விவரங்கள் சொல்ல, என்னத்தையோ சீரியஸா பார்க்குறமாதிரி ஒவர் சீன் காட்டிய அவர்கள், சாரி இது தூதரக அலுவலகம் தான் பார்க்கணும், நாங்க இல்ல. எனக்கு வந்த கோபத்திற்கு ஓங்கி மண்டையில் போட வேண்டும் போல் இருந்தது! அட்லீஸ்ட்முகம் கொடுத்து புரியற மாதிரியாவது பேசி தொலைச்சானே, என்று கோபத்துடன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு மீண்டும் வாடகைக்காரில் பழைய அலுவலகத்திற்கு திரும்பினேன்.

இனி இதெல்லாம் சரிபட்டு வராது என்று அல்பேனியில் இருக்கும் இந்திய அமைப்பின் தலைவரை தொடர்பு கொண்டேன். அவருக்கு தூதரக அதிகாரிகளிடம் நல்ல பழக்கம் என்பதுலேட்டாகத்தான் எனக்கு உறைத்தது. விஷயத்தை கேட்டவர், அடடா முதலிலேயே சொல்லி இருக்கலாமே என்றவர், உடனடியாக தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசுவதாய் கூறினார். விதியை நொந்து கொண்டே மீண்டும் அந்தப் பொந்துக்குள் பெட்டியுடன் இறங்க, அதற்குள் மணிக்கூண்டின் பின்னால் இருந்தவர், மேடம் என்று கூவ, அடப்பாவிகளா சற்று முன்னர் வரை பேசியதொணி என்ன, இவ்வளவு நேரம் அலைக்கழிச்சுட்டு இப்ப மேடமாமே!

‘சாரி, சாரி முதலிலேயே சொல்லி இருக்கலாமே!’ என்று முதுகு வளைஞ்சு கும்பிடாத குறையா, அதற்குள் ஃபோனும் வர, ‘எஸ் சார், எஸ் சார், வொர்க்கிங் ஆன் இட்’ என்றவுடன் .. சரி சரி நம் பிரச்னையைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்று புரிந்து கொண்டேன். அவசர அவசரமாக அவரே ஒரு படிவத்தை நிரப்பி, ‘ப்ளீஸ் சைன் திஸ் மேடம்’ என்று கேட்டு, ‘சப் சப்’ சீல் அடித்து, அவசரஅவசரமாக உள்ளே சென்று கையெழுத்தை வாங்கிக் கொண்டு, ‘சாரி ஃபார் யுவர் லாஸ். ஊர் போய் வந்தவுடன் உங்கள் இந்திய பாஸ்போர்ட்டை சரெண்டர் செய்து விடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

எழுந்து நின்று கொடுப்பதும், வாய் நிறைய சிரிப்பதும், மரியாதையாகப் பேசுவதும்.. அந்த அலுவலரின் உடல் மொழியே மாறியிருந்தது. இவர்களுக்கு இப்படி எல்லாம் கூட பேசிப் பழகத் தெரியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. உங்கள் ஆபீசரிடம் என் நன்றியைத் தெரிவித்து விடுங்கள் என்று சொல்லும் பொழுதே, அது வரை யார் கண்ணிலும் தட்டுப் படாமல் மறைந்திருந்த உதவி தூதரகஅதிகாரி நேரில் காட்சி அளிக்கவும், அவருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு கிளம்பினேன். வரிசையில் காத்திருந்தவர்களைத் தாண்டி, இவர்கள் வேகவேகமாக எனக்காக மெனக்கெடுத்ததைப் பார்த்து! என் மனதிற்குள் ஒரு நெருடல். அவர்கள் எல்லாம் கோபத்துடன் என்னைப் பார்ப்பது போல் ஒரு சின்ன உதறல். என்னைப் போல எத்தனை பேருக்கு என்னென்னஅவசரமோ? அவர்களுக்கெல்லாம் இவர்கள் இப்படி உதவுவார்களா?

அயல்நாட்டில் வசிக்கும் தன் மக்களின் அவசர அவசிய தேவைகளை கண்காணித்து உதவவும், அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு வந்து போக தேவையான விவரங்களை தந்து உதவத்தான் தூதரக அலுவகங்கள். நமக்கு ஏதாவது ஒன்று என்றால் ஓடோடி வந்து உதவத்தான் இந்தத் தூதரக அலுவலகங்கள் என்று நானாக ஒரு கற்பனை செய்து வைத்திருந்தேன். அது எத்தனை பெரியதவறு!

NY Central Grand Station

அழுக்கேறிய அலுவலக அமைப்பு. அலட்சியமான பதில்கள், அலைக்கழிக்க வைக்கும் நடைமுறைகள், என அந்த அலுவலகத்தில் நுழைந்த உடனே ஒரு இந்தியத் தன்மை தொற்றிக்கொண்டிருந்ததை உணரமுடிந்தது. அந்த இடமும், அங்கே வேலை பார்ப்பவர்களும் ஒரு பேச்சுக்கு கூட அயல்நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை தரவே இல்லை. இந்தியன் எங்குசென்றாலும் இந்தியனாகவே இருப்பான் போல!

அப்போதைய என் நிலைமையில் இதையெல்லாம் யோசிக்க முடியவில்லை. அப்போதைக்கு இந்தியா போக விசா கிடைத்ததே தெய்வச் செயலாகத் தெரிந்தது. நியூயார்க் நகர குளிர்காற்றைச் சுவாசித்துக் கொண்டே கணவரிடம் ஒரு புலம்பு புலம்பி விட்டு, அடுத்த கட்டமாக அங்கிருந்து JFK விமான நிலையம் எப்படிப் போவது என்ற அடுத்த பிரச்னையில் பசியும் பறந்து போய்விட்டது.எப்படி வழி தவறிப் போனாலும் இரவு ஒன்பதரைக்குள் சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் அடுத்த பயணம் ஆரம்பமாயிற்று!

ஒரு வழியாய் எல்லாம் முடித்து மீண்டும் அமெரிக்கா திரும்பிய உடன் முதல் வேலையாக OCI வாங்க விண்ணப்பித்து பாஸ்போர்ட்டை அனுப்பி அதை திரும்ப வாங்குவதற்குள் போதும்போதுமென்றானது தனிக் கதை. அங்கே ஆள் இருந்தால் மட்டுமே உடனே காரியம் நடக்கிறது. ஆள் இல்லாதவர்கள் நிலை?

– லதா