Search

நிறம் மாறாத நிறபேதமும், சில நிஜங்களும்..

Stop Racism

கடந்த நவம்பர் மாதக்கடைசியில் வெளியான ஒரு தீர்ப்பு அமெரிக்க மண்ணில் கொந்தளிப்பான சூழலை உருவாக்கிவிட்டது. நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கலவரங்கள் என எங்கும் பதட்டம். எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதைப் போல ஊடகங்களும் தங்களால் முடிந்த வரை பிரச்சினையை ஊதிப் பெருக்க, அதிபர் ஒபாமாவே டிவியில் தோன்றி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு நிலவரம் கலவரமாயிருந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிரச்சினை இதுதான்..

மிசௌரி மாகாணத்தில் உள்ள பெர்குசன் எனும் ஊரில், ஒரு கடையில் திருடியதாக சந்தேகிக்கப்பட்ட கருப்பின இளைஞன் ஒருவனைப் பிடிக்க போலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். சுட்ட அதிகாரி வில்சன் வெள்ளை இனத்தவர். வில்சன் தன்னுடைய வாக்கு மூலத்தில் அந்த இளைஞன் தன்னைத் தாக்கி தன் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, வேறு வழியில்லாமல் தற்காப்புக்காக அந்த இளைஞனைச் சுட நேர்ந்ததாகவும் கூறியிருந்தார். ஆனால் இச்சம்பவத்தை நேரில் பார்த்த வேறு சிலரோ அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், அந்த இளைஞன் தலைக்கு மேலே கையை உயர்த்தி வைத்துக் கொண்டிருந்த போது சுடப்பட்டதாக கூறி குட்டையைக் குழப்ப விவகாரம் நீதிமன்றம் போனது.

மிசௌரி மாகாணத்தின் சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்டவரின் சாட்சிகளை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்கிறார்கள். ஆனாலும் இந்த வழக்கில் வெள்ளை அதிகாரி வில்சனின் சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட்து. கிராண்ட் ஜூரர்களில் (Grand Jurors) பன்னிரெண்டு பேரும் தங்கள் முன் வைக்கப்பட்ட சாட்சியங்கள், ஃபோட்டோக்கள் , துப்பாக்கிக் குண்டு விழுந்த இடங்களை வைத்து போலீஸ் அதிகாரி மீது தவறில்லை எனத் தீர்ப்பளித்ததோடு, இந்தச் சம்பவத்தில் நிறவெறி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.

இந்த வழக்கின் ஆரம்பம் முதலே நீதி மன்ற நடவடிக்கைகள் வெள்ளை இன போலிஸ் அதிகாரியான வில்சனுக்கு சாதகமாகவே இருந்ததாகவும் ஒரு குற்றச் சாட்டு உள்ளது. பல்வேறு நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பூசி மொழுகியதைப் போல தீர்ப்பு வெளிவந்ததுதான் கருப்பின மக்களின் கொந்தளிப்புக்குக் காரணமானது. விளைவு கலவரங்கள், ஆர்ப்பாட்டங்கள், இதைப் பயன்படுத்திக் கொண்ட சில சமூக விரோதிகள் கடைகளில் கொள்ளையடித்த கொடுமையும் நடந்தேறியது.

நிற பேதம்

போராட்டத்தின் தீவிரத்தைப் பார்த்த அரசு, வேறு வழியில்லாமல் கறுப்பின மக்கள் அதிகம் வாழும் பெர்குசனில் வெள்ளை அமெரிக்க போலிஸார்தான் அதிகம் பணியில் இருக்கிறார்கள் என்பதால்.. ஒரு வேளை நிறபேதம் இந்தச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாமோ என்கிற கோணத்திலும் சிவில் உரிமை விசாரணைக்கு உத்தரவிட்டது. இப்போது அந்த வேலையை FBI மேற்கொண்டிருக்கிறது. இது வெறும் கண்துடைப்பா அல்லது உண்மை வெளிச்சத்துக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

சமீபத்தில் கூட இதே போல இன்னொரு சம்பவம் நடந்தேறியது. அனுமதியின்றி சிகரெட் விற்ற குற்றத்திற்காக எரிக் கார்னர் என்றொரு கருப்பின இளைஞரை கைது செய்யும் முயற்சியில் அவர் மூச்சுத் திணறி இறந்து போனார். போலிஸார் அந்த இளைஞரை எத்தனை முரட்டுத்தனமாக கையாண்டனர் என்பதற்கு ஆதாரமாய் வீடியோவெல்லாம் இருந்தது. இந்த வழக்கிலும் போலீஸ்காரர்கள் தண்டனை எதுவுமின்றி விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்னதான் காவல்துறையினர் தங்களுடைய செயல்களுக்கு நியாயம் கற்பித்துப் பேசினாலும், தொடர்ச்சியாக கருப்பின மக்களுக்கு எதிரான காவல்துறையின் அத்துமீறல்கள் ஏதோ ஒரு வகையில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இந்த இரு நிகழ்ச்சிகளைப் பற்றி என் தோழியிடம் (அவரும் ஆஃப்ரிக்க அமெரிக்கர்) கேட்ட பொழுது பொங்கித் தீர்த்துவிட்டார். எத்தனை வருடங்கள் ஆனாலும், எத்தனை முன்னேறினாலும் கணிசமான வெள்ளையின மக்களின் அடி மனதில் இன்னும் நிறபேதம் இருக்கிறது என்றார். அவரின் பள்ளிக்காலங்களில் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார் என்பதை ஏற்கனவே பல முறை என்னிடம் சொல்லி இருக்கிறார். வருடங்கள் பல கடந்தும் இன்றும் இச்சம்பவங்கள் நடப்பது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று சில சம்பவங்களையும் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அவரது மகனும், அவன் நண்பனும் வீட்டுக்கருகில் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருக்கையில் இரண்டு போலிஸ்காரர்கள் வந்து ‘weed’ ஏதும் இருக்கிறதா என்று கேட்டு விட்டு, அவர்கள் பையைத் திறந்து காட்டச் சொல்லி இருக்கிறார்கள். ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்தவர்களை நிறுத்தி கேள்விகள் கேட்டு அனுப்பி இருக்கிறார்கள்.

வேலை முடித்து வீட்டுக்கு வந்த பிறகு வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்று தன் மகனிடம் சொல்லி இருப்பதாகவும், ஆன்லைனில் இருந்து சில சட்ட நடைமுறைத் தகவல்களை பிரிண்ட் செய்து மகனிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் கூறினார்.

சட்டப்படி சர்ச் வாரன்ட் இல்லாமல் யாருடைய பொருட்களையும் தொடக் கூட முடியாது எனும்போது இவர்கள் செய்வது அநியாயம். ஆனாலும், என்னச் செய்ய முடியும்? போலிஸில் சிலரே போதைப் பொருட்களை வாங்கி விற்பதும், பயன்படுத்துவதும் அதற்கு ஆஃப்ரிக்க அமெரிக்கர்களை மிரட்டுவதும் நடக்கிறது என்றார்.

அமெரிக்க கருப்பின அடக்குமுரைசமீபத்தில் அவரின் அக்கா மகள் தன் இரு வயது குழந்தையுடன் மெக் டொனல்ட்சில் சாப்பிடச் செல்ல, அங்கே வந்திருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி ’நிக்கர்’ என்று அந்தக் கறுப்பு பெண்மணியைப் பார்த்து விளிக்க, அவர் கையை ஓங்க, போலிஸ் வந்து இருவரையும் விலக்கி விட்டு அந்த வெள்ளைக்காரியை எச்சரித்து விட்டுச் சென்றிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியும் என் தோழியை மிகவும் பாதித்திருந்தது. மக்கள் இன்னும் மாறாமல் இருக்கிறார்கள். குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லவே பயமாக இருக்கிறது என்று சொன்னார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை கருப்பின மக்களின் வரலாறு என்பது 200 வருடங்களுக்கும் பழமையானது. 1865இல் அடிமைத்தனம் சட்டபூர்வமாக ஒழிக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில் அவர்கள் எத்தகைய அடக்குமுறைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள் என்பதை இப்போது நினைத்தாலும் குலை நடுங்கவைக்கும் கோரமான வரலாற்றை உடையவர்கள்.

1865க்குப் பிறகு கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில், அரசியல் பங்களிப்பு என சமூகத்தில் எல்லா கூறுகளிலும் கருப்பின மக்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். வெளித்தோற்றத்திற்கு எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்ததைப் போலத் தோன்றினாலும் கூட வெள்ளையின மக்களின் ஒரு பிரிவினர் இதனை ரசிக்கவில்லை என்பதுதான் உண்மை. கருப்பின மக்களின் முன்னேற்றத்தையும், சமூகக் கலப்பையும் அவர்கள் விரும்பவில்லை. அவர்களை பழைய நிலைக்கு தள்ள சரியான தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர் என்கிறது வரலாறு.

அமெரிக்காவின் 28 வது அதிபரான உட்ரோவில்சன் காலத்தில் (March 4, 1913 – March 4, 1921) அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகள்தான் இன்றைய அத்தனைப் பிரச்சினைகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டது என்கிறார்கள். உட்ரோ வில்சனின் நிர்வாகத்தில் இருந்த சில வெள்ளையின அடிப்படைவாதிகள் கருப்பின மக்களுக்கெதிரான பல்வேறு செயல்களைத் திட்டமிட்டு நிகழ்த்தினர் என்கிறார் வரலாறு ஆய்வாளரான Eric S. Yellin.

‘Racisim in the Nation’s Service’ எனும் தனது நூலில் கருப்பின மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பல்வேறு இனப் பிரிப்பு மற்றும் இன ஒழிப்பு நடவடிக்கைகளைப் பற்றி பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். வெள்ளை இன மக்களோடு கருப்பின மக்கள் கலந்துவிடாமல் இருக்கவும், அரசின் வேலைவாய்ப்புகளில் இருந்து அவர்களை ஒதுக்க என்னவெல்லாம் செய்தார்கள் என்பதைப் படிக்கும் போது ஒரு அரசாங்கமும், அதன் இயந்திரங்களும் இப்படியெல்லாம் கூடச் செய்திருப்பார்களா என்கிற கேள்வியை நமக்கு எழுப்புகிறது. தரமான கல்வி, தரமான குடியிருப்புகள், வங்கிக்கடன், பாதுகாப்பான வேலைகள் என எல்லா மட்டத்திலும் கருப்பின மக்களைப் புறக்கணிக்க திட்டமிட்டு செயல்பட்டதாகப் போகிறது அந்தப் புத்தகம்.

நிற பேதம்

கடந்த நூற்றி ஐம்பது ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் ஓர்அடிமை சமூகம் இது போன்ற திட்டமிட்ட புறக்கணிப்புகளைத் தாண்டி மேலே வருவது மிகவும் கடினம் என்பதை வரலாற்றில் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. என்னுடைய அமெரிக்க அனுபவத்தில் பெரும்பான்மை கருப்பின மக்கள் தரமான நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை எட்டிப் பிடிப்பதற்குக் கூடப் போராட வேண்டியிருக்கிறது என்பது கொஞ்சம் உண்மைதான்.
பல தகப்பன்மாரும் தாய்மாரும் தங்களுடைய கண் முன்னரே தங்களின் வாரிசுகள் தோற்றுப் போவதை பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதற்கு அரசையோ, வெள்ளையின நிறவாத ஆட்களை மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

கருப்பின மக்களின் இந்த நிலைமையைப் பற்றி வெள்ளையின சாமானியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் நமக்கு முக்கியம். இனி வரும் கருத்துக்கள் என்னுடைய வெள்ளையின தோழியரின் கருத்துகள். இதில் பலவற்றை என் கருப்பினத் தோழியும் ஏற்றுக் கொண்டிருப்பதை இங்கே சொல்லியாக வேண்டும்.

இயல்பில் கருப்பின மக்கள் ஆக்ரோஷமானவர்கள்; எளிதில் உணர்ச்சிவயப் படக்கூடியவர்கள்; பதட்டமான சூழலில் எதையும் செய்யத் தயங்காதவர்கள் என்ற பயமே வெள்ளை நிறத்தவர்களை கருப்பின மக்களுக்கு எதிரான முடிவுகளையும், நடவடிக்கைகளையும் எடுக்க வைக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை எளிதில் புறந்தள்ளி விடமுடியாது. விவேகமில்லாத வேகம் விழலுக்கு இறைத்த நீர்தானே!

மேலும் கருப்பின மக்கள் தங்களின் சமூக, குடும்ப ஒழுக்க மதிப்பீடுகளின் மீதான அக்கறையை காலவோட்டத்திற்கு ஏற்ப மேம்படுத்திக் கொள்ளவில்லை. இது இன்னொரு பலமான குற்றச் சாட்டு. ஏன் இத்தனை அசட்டையாக இருக்கிறார்கள் என பலமுறை எனக்கே தோன்றியதுண்டு.

Black violence இளம் வயது குழந்தைகள், பதின்மவயது சிறுவர்கள் அதீதமான வன்முறைச் சூழலுக்கு இரையாகின்றனர். தங்களுக்குள் அடித்துக் கொள்வது, பள்ளியில் ஆசிரியர்களை அடிப்பது, போதைப் பழக்கம், பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பிள்ளை பெற்றுக் கொள்வது. ஜெயிலுக்குப் போவது, வறுமையின் காரணமாக பெண்களைப் பெற்றவர்களே அவர்களை விபச்சாரத்தில் தள்ளி விடுவது, அதனால் பதின்ம வயது பெண்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம் என இப்படி நிறையவே சொல்லிக் கொண்டு போகலாம்.

குறை சொல்வது என் நோக்கமில்லை. எனக்குத் தெரிந்து தங்களின் முன்னிருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட கருப்பின மக்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்களிடம் அத்தகைய உத்வேகம் இல்லை என்பதுதான் என்னுடைய ஆதங்கமும் வருத்தமும்.

‘the hardest part of winning is choosing sides, some games you play.. some games play you’

– லதா