நிறம் மாறாத நிறபேதமும், சில நிஜங்களும்..
கடந்த நவம்பர் மாதக்கடைசியில் வெளியான ஒரு தீர்ப்பு அமெரிக்க மண்ணில் கொந்தளிப்பான சூழலை உருவாக்கிவிட்டது. நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கலவரங்கள் என எங்கும் பதட்டம். எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதைப் போல ஊடகங்களும் தங்களால் முடிந்த வரை பிரச்சினையை ஊதிப் பெருக்க, அதிபர் ஒபாமாவே டிவியில் தோன்றி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு நிலவரம் கலவரமாயிருந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பிரச்சினை இதுதான்..
மிசௌரி மாகாணத்தில் உள்ள பெர்குசன் எனும் ஊரில், ஒரு கடையில் திருடியதாக சந்தேகிக்கப்பட்ட கருப்பின இளைஞன் ஒருவனைப் பிடிக்க போலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். சுட்ட அதிகாரி வில்சன் வெள்ளை இனத்தவர். வில்சன் தன்னுடைய வாக்கு மூலத்தில் அந்த இளைஞன் தன்னைத் தாக்கி தன் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, வேறு வழியில்லாமல் தற்காப்புக்க...