இன்னுமொரு படமென ஒதுக்க முடியாதவைகளே பாலாவின் படைப்பு. மீண்டும் அதை, முன்பை விட அழுத்தமாக உணர்த்துகிறது ‘பரதேசி’.
லட்சணமாய்ப் பார்த்துப் பழகிய நாயகன் முகத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு அழுக்குப்படுத்தி விடுவார் பாலா. அத்தகைய நாயகனின் பிம்பம் கொண்டு பார்வையாளர்கள் மீது முதல் தாக்கத்தினை ஏற்படுத்துவார். அந்த அழுக்கு முகம் கொண்ட நாயகர்கள், மற்ற தமிழ்ப்பட நாயகர்களைப் போல சராசரியானவர்களே. உதாரணம் ஷங்கரின் நாயகர்களுக்கு லஞ்சம் வாங்குவதும், பேரரசின் நாயகர்களுக்கு ரவுடியிசமும் பெருங்குற்றம். பாலாவின் நாயகர்களுக்குத் தங்களை ஆதரவளிப்பவர்களைக் கொன்றால் பெருங்குற்றம். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதே பெரும்பாலான தமிழ்ப்படங்கள் முன் வைக்கும் நீதி, நியாயம், தர்மம் இத்யாதி எல்லாம். சமீபத்திய விதிவிலக்கு: வத்திக்குச்சி.
“எது பாவம்?” என்று நிர்ணயிப்பதில் மட்டுமே இயக்குநர்கள் மாறுபடுகிறார்கள்.
நாயகர்களின் வாழ்விடமாக சாமானியர்களுக்குப் பரிச்சயம் இல்லாத இடத்தினைத் தேர்ந்தெடுப்பது தான் பாலா பார்வையாளர்கள் மீது ஏற்படுத்தும் இரண்டாவது தாக்கம். ஆக நாயகனின் அழுக்கு முகம், பரிச்சயமில்லாத நாயகனின் வாழ்விடம் என்ற இரண்டின் தேர்வினால், பாலா வித்தியாசமான படமெடுக்கும் இயக்குநராக அடையாளப் படுத்தப்படுகிறார் (அ) படுத்திக்கொள்கிறார். தான் பெற்ற அடையாளத்தை மேலும் அழுத்தமாகப் பதிய, படத்தின் காலகட்டத்தையும் கதைக்களனையும் ‘எரியும் பனிக்காடு’ என்னும் நாவலில் இருந்து இம்முறை எடுத்துக் கொண்டுள்ளார்.
ராசாவாக அதர்வா முரளி. படத்தின் வசனகர்த்தாவான ‘சாகித்ய அகாதெமி’ நாஞ்சில் நாடனின் இடலாக்குடி ராசா சிறுகதையின் வார்ப்பாக(!?) அமைந்துள்ள கதாபாத்திரம். ‘நீங்க நல்லவரா? கெட்டவரா?’ என வேலு நாயக்கரின் பேரனுக்கு வந்த அதே சந்தேகம் தான் அதர்வா குறித்து எழுகிறது. பரட்டையை அறையும் சப்பாணி போல, வேதிகா அதர்வாவை அறைகிறார். அப்பவும் நாயகனுக்குள் இருக்கும் நியாயஸ்தர் விழித்துக் கொள்ள மாட்டேங்கிறார். ஆனால், வேறு வழியில்லாமல் ஆங்கிலேயனின் அதிகாரத்துக்கு அடிபணியும் பெண்ணிடம் நியாயமாராக நடந்து கொள்கிறார் (ஒருவேளை ஒட்டுப்பொறுக்கி ஆக இருந்தாலும், பெண்ணைச் சொத்தாகப் பாவிக்கும் ஆணாதிக்கம் நிரம்பியவன் என்ற இயக்குநரின் நுண்ணிய சித்தரிப்பாக இருக்குமோ!?). கையில் வைத்திருக்கும் கழியால் கங்காணி அடிக்கும் பொழுது, “உங்களை நம்பி தான நியாயமாரே வந்தோம். எங்க குலச்சாமி நீங்க” எனப் பரிதாபமாகக் கேட்கிறார். அதே கங்காணி மயங்கி விழுபவனை யாருமற்ற இடத்தில் வீண் சுமை என இறக்க விடும் பொழுது, அதர்வாவோ வேறு எவரோ தனக்கு சம்பந்தம் இல்லாதது போல் நடந்து கொள்கின்றனர்.
அங்கம்மாவாக வேதிகா. ‘ஏய்.. கஞ்சா பொறுக்கி. பாட்டை மாத்துடா’ எனச் சொல்லும் பிதாமகன் லைலாவின் பாத்திரத்தில் வேதிகா சுமாராகச் செய்துள்ளார். மரகதமாக தன்ஷிகா. பிதாமகன் சங்கீதாவின் பாத்திரத்தில் தன்ஷிகா நிறைவாக நடித்துள்ளார். ந(அ)டித்துக் காட்டி நடிப்பை வாங்குதில் பாலா பயங்கர கில்லாடி. அவரது கதாபாத்திரங்களே அனைவருமே நிறைவாக நடித்துள்ளனர். எனினும் அதர்வாவின் பாட்டியாக வரும் கச்சம்மாள் மட்டும் நடிக்காமல் வாழ்ந்துள்ளார். கவிஞர் விக்கிரமாதித்யன் கள் குடித்து விட்டு இறந்து விடுகிறார். அந்த மரணம் அங்கு எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. சுப காரியம் தடங்கலாகி விடக் கூடாதென நல்லெண்ணம் காரணமாக சொல்லப்பட்டாலும், ‘என்ன கரன்ட் போயிடுச்சா?’ என 2013-இல் வாழ்பவர் அலட்சியமாகக் கேட்பது போல் ஒரு பொருட்டின்றிக் கேட்கிறார் கவிஞரின் மனைவியாக நடிப்பவர். என்ன கொடுமை இது!?
சாலூர் என்ற கிராமத்தில் பஞ்சம்(!?) என நாயகன் வேலை தேடிப் போகிறார். பென்ச்சில் உட்கார்ந்தால் நாயகனை அடிக்கிறார்கள். வேறு ஊரில் இருந்து வருவதால் தனக்கு அங்க உட்காரக் கூடாதெனத் தெரியாதென சொல்கிறார் அதர்வா. அந்த தேநீர்க்கடைக்காரர் காதில் பூ வைத்திருக்கிறாரா அல்லது படம் பார்ப்பவர்களா? அல்லது சாலூர் என்னும் கிராமம் சாதி அடக்குமுறையை அறியாத சொர்க்கபுரியா? விறகுகளை வெட்டியதும் கூலி கேட்கிறார் அதர்வா. தன் வாழ்நாளில் யாருக்கும் கூலியே கொடுத்தறியாத தொனியில் அந்த தேநீர்க்கடைக்காரர் பேசுகிறார். தேயிலைத் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் தண்ணீரைக் கூட மிருகம் போல் தான் குடிக்கின்றனர் மக்கள். ஏன் அப்படிக் குடிக்கணும்? இப்படிப் படம் முழுவதும் காரணக் காரியங்களின்றி விரவிக் கிடப்பது,
சோகம்… மேலும் சோகம்.. மேன்மேலும் சோகம்.
நம்பிக்கைக்கான சிறு கீற்றுக் கூடப் படத்தில் இல்லை. நாஞ்சில் நாடனின் வசனங்கள் தான் படத்தின் ஒரே ஆறுதல். தனது சிறுகதை சிதைக்கப்பட்டிருக்கு என்று உணர்ந்தும், படத்தில் தன் பங்களிப்பைச் செவ்வெனே செய்துள்ளார்.
படத்தி்ற்கான கதையைத் தன் விருப்பப்படி தீர்மானிக்கும் முழு உரிமையும் பாலாவிற்கு உண்டு. எனினும் ‘எரியும் பனிக்காடு’ புத்தகத்தின் ஏதோ ஒரு பக்கத்தையோ அல்லது ஓர் அத்தியாயத்தையோ படித்தால், அதில் ஆவணமாக ஓர் அரசியல் இழையோடும். அது இந்த முழுப்படத்திலுமே இல்லை. தலித் இலக்கியமும், பாட்டாளி வர்க்க இலக்கியமும் ஒன்றிணையும் புள்ளி ‘எரியும் பனிக்காடாக’ மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ‘ரெட் டீ (Red Tea)’ நாவல். முதலாளித்துவம் எப்படி சாதீய அமைப்பை உபயோகித்தது என்பதில் நாவல் தொடங்குகிறது.
“……. இங்கன நாய்க்கருகிட்டயும், தேவமாருகிட்டயும் நெலம் இருக்கு. ஆனா அவுங்க நம்மல என்ன பாடு படுத்துறானுவோ, அவுங்க வீட்டுப் பக்கம் கூட நம்மை விட மாட்டானுவோ. தண்ணித் தாகத்துல நாக்கு வறண்டு செத்தாலும் அவுங்க கெணத்துல இருந்து சொட்டுத் தண்ணி எடுக்க உட மாட்டானுவோ. இத்தனை வருசமா உங்கிட்ட வேலை வாங்குனவங்க இப்ப நீ பட்டினி கெடக்கட்டும்னு விட்டிட்டானுவல்ல. ஆனா வெள்ளைத் தொரைக அப்படி இல்ல. அன்பானவங்கல்லா. அதனால தான் சாமி அவங்களயும் அவங்க தொழிலயும் நல்லா வச்சிருக்கு. இங்கபாரு, நாய்க்கமாரும், தேவமாரும் நாயவிடக் கேவலமா நம்ம நடத்துறானுவ.
ஒண்ணு ரெண்டு பேரைத் தவிர, எல்லாரும் நம்ம ஜாதிக்காரங்க தான். எங்கேங்கிலகூட மேல் சாதிகாரங்க கொஞ்சம் பேரு இருக்குதாங்க. வெள்ளைத் தொரைங்களுக்கு நாமும், அவங்களும் ஒண்ணுதான். நான் நம்ம சாதிக்காரங்களை எப்படி நடத்துறேனோ, அப்படித்தான் அவங்களையும் நடத்துதேன்…..”
என கங்காணி ஒவ்வொரு ஆளுக்கும் தூபம் போட்டே பிடிப்பார். படத்தில் பணத்தைக் காட்டி ஆட்களை மடக்குவது போல் சித்தரித்தருப்பார் பாலா. இனி இப்படியொரு முயற்சி தமிழ்த் திரையுலகில் சாத்தியமா எனத் தெரியவில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில், நாவல் தரும் தாக்கத்தை பாலா அப்படியே படத்திற்குக் கடத்தியிருக்கக் கூடாதாயென்ற அங்கலாய்ப்பில் இருந்து மீள முடியவில்லை. வெள்ளைக்காரர்கள் போயே போய் விட்டனர். ஆனால் சாதி? இன்றளவும் சமுதாயத்தில் புரையோடியிருக்கிறது. ஆனால் படத்தில் அது பற்றி இல்லவே இல்லை.
தேயிலைத் தோட்டத்தில் கூலிகளைத் தங்க வைக்கும் லைன் வீடுகள் பற்றிய சித்தரிப்பு தெளிவாய் உள்ளது. படத்திலோ ஒவ்வொரு குடிசைக்கும் இடைவெளி உள்ளது. அதே போல் கங்காணி ஆண் ஒருவனைத் தனியாக வசிக்கும் பெண் ஒருத்தியின் வீடுகளில் அமர்த்த வாய்ப்பில்லை. அவள் கர்ப்பமாகி விட்டால் கங்காணிக்குத் தொல்லை. ஒரு அறை, ஒரு சமையலறை கொண்ட சின்ன வீட்டில் மூன்று குடும்பங்களை அடைப்பார்கள். தப்பிக்க முயன்றால் அடித்துக் கொன்றாலும் கொல்வார்களே தவிர கால் நரம்பை எல்லாம் வெட்டுவார்களா என்பது சந்தேகம் தான். கூலிக்கு அநாவசிய மருத்துவச் செலவு; காலை இழுத்து இழுத்து ஒரு கூலி மெதுவாக வேலை செய்தால் இங்கிலாந்தில் இருக்கும் முதலாளிகளுக்கு அது பெரிய இழப்பைத் தரும்; முக்கியமாக கங்காணிக்கு கமிஷன் குறையும். கடைசிக் காட்சியில் வருவது போல் பாறையில் அமர்ந்து சாவகாசமாய் நியாயம்லாம் கேட்க முடியாது. இரண்டு நிமிடம் சும்மா நின்றாலே கங்காணி தடியால் சாத்துவார்.
சரி நாவல் சுட்டிக் காட்டும் அரசியலைத்தான் பாலா பதியவில்லை என்றால் கூடப் பரவாயில்லை. ஆனால், ‘தென்னந்தியத் தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கம்’ என்பதைத் தொடங்க உதவி செய்து தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிய ‘ரெட் டீ’ நாவல் எழுதிய பி.எச்.டேனியலையே அசிங்கப்படுத்துவது போல மருத்துவர் பரிசுத்தம் கதாபாத்திரத்தினை அமைத்துள்ளார் பாலா. அவரது கிறிஸ்துவ மிஷனரி துவேஷ அரசியல் பதியப்பட வேண்டிய படமா இது!?
பரதேசி – அயல்நாட்டவன், பயணி, சுற்றித் திரியும் இரவலன், பிச்சைக்காரன், ஆண்டி, ஆதரவற்றவன்.
பரிசீலனையில் இருந்த ‘கல்லறைத் தோட்டம்’ என்ற தலைப்பு படத்திற்குக் கச்சிதமாய்ப் பொருந்தும். இப்ப இந்தத் தலைப்பிற்கு என்ன பொருள் என்று யோசித்தால், இரண்டு சாத்தியங்கள் உள்ளது. ஒன்று அயல்நாட்டவன் என வெள்ளைத்துரையைக் குறிப்பிடுவது அல்லது அதர்வாவை ஆதரவற்றவன் எனக் குறிப்பிடுவது. பாறையில் அதர்வா அமர்ந்திருப்பது போல் பிதாமகனில் விக்ரமும், நான் கடவுளில் ஆர்யாவும் ஒரு மேட்டில் அமர்ந்திருப்பார்கள். அப்படியே மேலிருந்து பாய்ந்து வில்லனின் தோளில் முட்டிப் போட்டு, அவன் குரல் வளையைக் கடிப்பார்கள். அதர்வாவை மேட்டில் பார்த்ததும், ‘செத்தான்டா வெள்ளைக்காரன்’ எனத் தோன்றியது. ஆனால் இந்தப் படத்தில் அதர்வாவிற்கு ஆதரவளிக்க எவரும் இல்லை என்பதால் வெள்ளைக்காரனும் படம் பார்ப்பவர்களும் தப்பித்தனர்.
பரதேசி – அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கும் நேர்மையற்ற படைப்பு.