Shadow

பிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும்

யாரும் எதிர்பாராத சமயத்தில், திடீரென குழந்தை ‘தாத்தா’ என மழலையில் அழைத்து அவரைப் பரவசத்தில் ஆழ்த்தும். “இன்னொரு முறை அப்படிக் கூப்பிடுடா கொழந்த?” என தாத்தா ஆசையாகக் கேட்டால், அவரைக் கண்டுக்காமல் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடும் குழந்தை. அது குழந்தையின் வெட்கமா அல்லது போதுமென்ற குழந்தையின் ஞானமா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். அக்குழந்தையைப் போல்தான், எவரும் எதிர்பார்க்காத சமயத்தில் அனைவரையும் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ எனும் தன் புத்தகத்தால் பரவசத்துக்கு உள்ளாக்கினார் பாட்டையா. அவருக்கு ஏற்பட்ட இன்ஃபைனட் அனுபவங்களின் ஒரு சிறு துளிதான் அப்புத்தகம். ‘ஒரு துளி போதுமா பாட்டையா? கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கிற இந்தக் காலத்தில் ஏன் இந்தக் கஞ்சத்தனம்? தளும்பும் நினைவுக் கடலில் இருந்து ஒரு டம்ளராவது இறக்கிட வேணாமா?’ என பலர் கேட்டுப் பார்த்தனர். ஆனால் பாரதி மணியோ, “I am one book wonder-டா” என சால்ஜாப்பு சொல்லிச் சமாளிச்சிடுவார்.

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்

ஆனால் எப்படியோ வம்சி பதிப்பகத்தினர் பாட்டையாவின் விரதத்தைக் கலைத்து, அவரெழுதிய அனைத்துக் கட்டுரைகளையும், அவரைப் பற்றிய முக்கியமான கட்டுரைகளையும், “புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” எனத் தொகுத்துள்ளனர். “இந்தப் புத்தகத்தைப் படித்ததும் இப்படியொரு மனிதரைப் பற்றி இத்தனை நாளா தெரிஞ்சுக்காம விட்டுட்டோமேன்னு கவலையா இருந்தது” என்றார் இயக்குநர் சீனு ராமசாமி. அப்புத்தகத்தைப் படிப்பவர்கள் அனைவரும் அப்படித்தான் நினைப்பார்கள் என்பதற்கு நானும் கேரன்ட்டி!

எஸ்.ராமகிருஷ்ணன் பாரதி மணியைப் பற்றி சிறப்புரை வழங்கினார். அவர், “நான் முதன்முதலில் அவரை ஒரு ட்ரெயின்லதான் பார்த்தேன். ஒரு கூஜா வச்சிருந்தார். ஐஸ் நிரப்பிய கூஜாவில் விஸ்கி. உலகிலேயே கூஜாவில் விஸ்கி வச்சிருக்கும் ஒரே ஆள் இவராகத்தான் இருப்பார்.

‘யாராச்சும் காஃபின்னு நினைச்சுக் கேட்டா என்ன சார் பண்ணுவீங்க?’ என நான் கேட்டேன்.

‘கொடுக்க வேண்டியதுதான்’ என்றவர், ‘எங்கூர் காஃபி இப்படித்தான் இருக்கும்னு சொல்வேன்’ என்றார்.

அவர் எவ்வளவு கொண்டாட்டமான மனிதர் எனத் தெரிந்திருந்தாலும், அவர் அற்புதமாக எழுதுவார் என்பது உயிர்மையில் எழுதத் தொடங்கிய பின் தான் தெரியும். இந்தத் தொகுப்பிற்கு இந்தப் பெயர் பொருந்தலையோன்னு எனக்குத் தோணுது. ‘டெல்லி மணி முதல் பாரதி மணி வரை’ என்ற தலைப்புதான் சரியாக இருக்கும்னு தோணுச்சு. இந்தத் தொகுப்பின் சாராம்சமே அதுதான். அவரது டெல்லி நினைவுகள்தான் அவரது பெரும்பாலான கட்டுரைகளில் வருகிறது. டெல்லி எனும் நகரம் ஒரு சூதாட்டப் பலகையாகவே இருந்துள்ளது. அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு நகரமாகவே அது எப்பொழுதும் இருந்து வருகிறது. பாரதி மணி டெல்லியைப் பற்றிய நினைவுகளை மட்டும் எழுதவில்லை வரலாறையும் சேர்த்து எழுதியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சென்னை அத்தகைய அனுபவங்களை அவருக்கு வழங்கவில்லை என்றே தோன்றுகிறது.

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்

இந்தியாவெங்கும், எந்த இரயிலில் பயணித்தாலும், அதில் தரும் உணவு மிக மோசமானதாகவே இருக்கும். அதை விட கொடுமை உணவை அவர்கள் அலுமினிய ஃபாயிலில் தருவார்கள். இரயிலுக்குள் அலுமினியம் எப்படி வந்தது என நான் யோசிப்பேன். இதற்கான குறிப்பு, தேடிப் பார்த்தும் எங்கும் இல்லை. இவரது கட்டுரையில்தான் அதற்கு விடை கிடைத்தது. இந்தியாவில் அரசியல், அலுமினிய ஃபாயிலிலும் உள்ளதெனத் தெரிந்து கொள்ள முடிந்தது.

பாரதி மணி தன் வாழ்வைக் கொண்டாடுபவராக இருக்கிறார். கசமுசாயின் (!?) நாவல் ஒன்றுண்டு. அதில் வரும் ஜோர்பா (!?) எனும் பாத்திரம் வாழ்வைக் கொண்டாடித் தீர்ப்பவன். இன்றளவும் கொண்டாட்டத்திற்கான குறியீடாக அவன் உள்ளான். அப்படியொரு மனிதன் உண்மையிலேயே இருக்க முடியுமா என்று சந்தேகம் எழும். கண்டிப்பாக கற்பனையாகத்தான் இருக்கணும்னு நினைச்சேன். ஆனால், அப்படியொரு மனிதரால் வாழ்வைக் கொண்டாட முடியுமென இவரைப் பார்த்த பின் நம்புகிறேன்.

எனக்கு இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், க.நா.சு. போல் இவர் இருக்காரா அல்லது இவரைப் போல் க.நா.சு. இருந்தாரா என்பதே! நான் அவரை எப்படிப் பார்த்தேனோ அதே தோற்றத்தில்தான் பாரதி மணி இப்போ இருக்கிறார். பரவலாக நாம் கேள்விப்பட்ட அமிதாப் – க.நா.சு. நிகழ்வைப் பற்றி பாரதி மணியும் பகிர்ந்துள்ளார். தென்னிந்திய எழுத்தாளர் ஒருவரைச் சந்தித்தது குறித்து அமிதாப்பும் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார் (அது என்னவென்று அறிய கண்டிப்பாக புத்தகம் வாங்கிப் படியுங்கள்). உச்சத்தில் இருந்த நடிகன் ஒருவன் முன்னால், எழுத்தாளனானதான் உனக்கு எந்தவிதத்திலும் குறைஞ்சவனில்லை என்ற க.நா.சு. உணர்த்தியிருப்பார். க.நா.சு.வின் இலக்கிய வல்லமைக்கு சற்றும் குறைந்தவரில்லை அவரது மருமகனான பாரதி மணி.

மறதிதான் மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம்; அதுவே சில சமயம் சாபமும்கூட! மறதிக்கெதிரான போராட்டம்தான் கலை. தனக்கு மறப்பதற்குள் அதைப் பதிந்துவிடும் அவசரம் கலைஞர்களுக்கு உண்டு. இளைஞரான இவர் எதையும் மறக்கவே மாட்டேங்கிறார்” என்றார்.

இந்த வருடத்தோடு, பாரதி மணி நாடக மேடைகளில் ஏறி 70 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவர் இன்றும் நாடகத்தில் நடிப்பதையே பெரிதும் விரும்புகிறார். அதில் அவருக்குப் பிடித்த வேஷம் எழுத்தாளர் வேஷமாம். அன்றைய அவரது புத்தக வெளியீட்டு விழாவில், விழா நாயகனாக (‘ர்’ – வயதானவர்களுக்குத்தானே) சிறப்புற மேடையை அலங்கரித்தார் பாரதி மணி. “நான் எனது முந்தைய புத்தகமான ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புக்கை 300 காப்பிகள் வாங்கி வந்து வீட்டில் வச்சுட்டேன். எழுத்தாளர்க்கு 30% டிஸ்கவுன்ட் உண்டு. யாரைப் பார்த்தாலும் எலுமிச்சம் பழம் தரும் ‘தில்லானா மோகனாம்பாள்’ வைத்தி போல், ஒரு புக் கொடுத்துட்டு இருந்தேன். ஆனா இம்முறை தருமி போல் இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். புத்தகம் வாங்கியவர்களுக்கு இலவசமாக கையெழுத்தும் போட்டுத் தர்றேன். அதுக்கு அஞ்சாயிரம்லாம் வாங்க மாட்டேன்.

‘சாருவின் கையெழுத்தை அச்சு அசலாகப் போட்டுத் தருகிறேன்’ என மனுஷ்ய புத்திரன் தன் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் 2 நாள் முன் போட்டிருந்தார். நான் அவர்க்கு கமென்ட் பண்ணேன், ‘ஹமீத்! உங்களுக்கு விதித்தது இவர் கையெழுத்துத்தான்! ஆனால் நான் நேருஜி, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி கையெழுத்துக்களைப் போட்டால் அப்படியே இருக்கும். இந்திரா காந்திக்கு தன் தந்தையான நேருஜியின் கையெழுத்து தெரியும்’ என. சாஸ்திரியின் கையெழுத்து தெரியாது. அப்போலாம் கூகுள் இல்லை.. வெரிஃபை பண்ணிக்க. இந்திரா காந்தியிடம் அவரது கையெழுத்தைப் போட்டுக்காட்டியபோது, “Seshan, he can be booked under Forgeries Act!” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்! நான் கையெழுத்துப் போட்டுக் காட்டிய பேப்பரை கையோடு எடுத்துக் கொண்டு போய் கோப்புகளில் இருந்து சாஸ்திரியின் கையெழுத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார்.

பாரதி மணி

எனக்கு டெல்லி எல்லாம் தந்திருக்கு. நான் நாகர்கோவிலில் இருந்திருந்தால், பி.ஏ.வோ பி.எஸ்.சி.யோ படிச்சுட்டு கலெக்டர் ஆஃபீஸில் கிளார்க்காகச் சேர்ந்து செக்ஷன் ஆஃபீஸரா ரிட்டையராகி இருப்பேன். இந்த மேடை கிடைத்தது என் டெல்லி வாழ்க்கையால்தான். டெல்லி வாழ்க்கை தேதியோடே எனக்கு பசுமையாக ஞாபகமிருக்கு. ஆனா நேத்து என்ன நடந்ததுன்னு மறந்துடுறேன். இரண்டு வாரத்துக்கு முன் சென்னையில் விடாம மழை பெய்ததில்லையா? அப்படிப் பெய்தால்தான் எனக்குப் பிடிக்கும். விடாமல் 2 மணி நேரமாவது ஜோன்னு பெய்யணும். அன்னிக்கு 3 மணி நேரம் மழையில் நனைஞ்சேன். துணி எடுக்க கீழ் ஃப்ளாட் பொண்ணு, ‘அங்கிள் மழையில் நனையாதீங்க’ எனச் சொல்லிட்டுப் போனது. இன்னிக்கும் ஃப்ரீஸரில் இருந்து எடுத்த தண்ணிதான் என் தாகத்தைத் தணிக்கிறது. 3 மணி நேரம் கழித்து, ட்ரிஸ்ஸலாகி மழை விடுற சமயம் வந்து, ‘இன்னுமா மழையில் நனையுறீங்க? ஹாஸ்பிட்டலுக்குத்தான் போகணும்’ என்றாள். எனக்கு 77 வயதாகிறது. இதுவரை ஒருநாள் கூட ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனதில்லை.

ஏன்? அதான் என் கொடுப்பிணை. எனக்கு தினமும் ஏதாவது நல்லது நடக்கிறது. ரெண்டு நாள் முன், வீட்டில் ஜன்னல்கம்பியைப் பிடிச்சுட்டு நின்னுட்டிருந்தேன். நான் அப்போ ஜிப்பா போட்டிருந்தேன். ரெண்டு அணில், ஒன்றன் பின் ஒன்று ஒட்டினாற்போல் என் இடது கை ஜிப்பா வழியாக நுழைந்து, கழுத்தை ஒரு சுத்துச் சுத்தி, வலது கை வழியாகப் போகுது. வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்?

இப்ப நான் ஒன்-வே பயணத்துக்குத் தயாராயிட்டேன். Now I am in transit. ஃப்ளைட் வந்ததும் போயிடுவேன். என்ன சாதிக்க முடியுமோ அதைச் சாதிச்சுட்டேன். 3 மணி நேர பரீட்சையை, 2 மணி நேரத்தில் எழுதி முடிச்சுட்டு, என் பேப்பர் வாங்கப்படுவதற்காகக் காத்திருக்கேன். ஆனா மூணு மணி நேரம் உட்கார வச்சுட்டாங்க. இப்போ என்னைச் சுற்றி, தலையைச் சொறிந்தவாறும் யோசித்தவாறும் இருக்கும் மற்ற நபர்களைப் பார்த்துக் கொண்டிருக்கேன். ஆனா எப்படியும் பாஸாயிடுவேன். இவ்ளோ மனிதர்களின் அன்பைச் சம்பாதித்திருக்கேன். I am really a blessed soul” என்றார் பாரதி மணி உற்சாகம் குன்றாமல்!

பாட்டையாஅன்றைய நாளில் மாபெரும் நம்ப முடியாத விஷயம் ஒன்றும் நடந்தது. அதிசயம் ஆனால் உண்மை. சுமார் நான்கு மணி நேரம் அதை எப்படியோ மறந்திருந்துவிட்டார். நாடக மேடையில் கூட டிரஸ் சேஞ்ச் செய்யவேண்டிய சீன் கேப்பில், அதை மறக்கமாட்டார். விழா முடிந்து, அவரின் வாசகக் குழந்தைகளுக்கு 5000/- வாங்காமல் கையெழுத்து போட்டு ஆசிர்வதித்து (ஸ்ரீநிவாசப் பெருமாளோன்னோ!) அரங்கைவிட்டு வெளியில் வந்ததும், “எங்கடா அது? மனுஷன் உயிர் வாழ வேண்டாமா?” என அதை அவசரமாக கையில் எடுத்தார்.

இதுதான் வாழ்வைக் கொண்டாடித் தள்ளுவதோ!?

நிகழ்வு: வம்சி புத்தக வெளியீட்டு விழா
இடம்: புக் பாயின்ட், அண்ணாசாலை
நாள்: 07 – ஜனவரி – 2015

– தினேஷ் ராம்