Shadow

பிரதிபலிப்புகளும் புறத்தோற்றங்களும்

நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகத்தை சிலர் துன்பங்களும் சிக்கல்களும் நிறைந்ததெனக் கூறுவர். ஆனால் நலமும் கேடும் கலந்து காணப்படுவதே இவ்வுலகம் என்ற எண்ணம் பொதுவாக எல்லோருக்கும் உண்டு. உண்மை யாதெனில், நாம் வெளியுலகில் காணும் கேடுகள் எல்லாம் நமது எண்ண விருத்திகளின் பிரதிபலிப்புகளும் புறத்தோற்றங்களுமே. புண்பட்ட மனமுள்ளவர்களுக்கு கேடுகள் வரினும் அவை கெடுதி நிறைந்தவையாகத் தென்படுவதில்லை.

சிறு நேரத்து இன்பத்தை அடைவதற்கு பல துன்பங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. அவை இருக்குமளவுக்கு மனிதனுக்கு துன்பமும் இருக்கும். ஆசை அறுபடுமளவுக்கு அமைதி உண்டாகிறது. இந்திரியங்களை வெல்லாத வரை, மனதை அடக்கி ஆள இயலாதவரை, துன்பங்கள் குறைவதில்லை.

நாம் நம்மைப் பார்த்துக் கொள்வதெல்லாம் அழிந்து போகும் உடலின் கோணத்திலிருந்தேயொழிய, அழிவற்ற ஆத்மாவின் நோக்கில் அல்ல. ஆகையினால் தான் உடலோடு இணைந்த உணர்ச்சிகளிலிருந்து பிறந்த இன்பங்கள் நம்மை சிறிதுநேரம் மகிழ்விப்பதையும், துன்பங்கள் நம்மை வாட்டுவதையும் பெரிதுபடுத்தி வாழ்க்கை என்றால் இப்படித்தான் என்று நினைத்துவிடுகிறோம்.

நமது கரும பந்தத்திற்கு ஏற்ப நமது பயணம் நீடிக்கின்றது. கருமத்தைப் பெருக்கப் பெருக்க பிறப்புகளும் பெருகுகின்றன.
மெய்யான பேரின்பம் எதுவென்று விளங்காமல் வாழ்நாள் முழுவதும் உலக பந்தங்களில் உழன்றுவிட்டு, கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல, கடைசி காலத்தில் தான் இறைவனைத் தேடுகிறோம்.

“உடலின் சம்பந்தா சம்பந்தங்கள் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைக்கும் தான். பொய்யை மெய்யாக எண்ணி வீண் துயரம் கொள்ளாதே” என்று சங்கரர்குறிப்பிடுகிறார்.

எந்த உடலின் ஸ்பரிசங்களை அனுபவித்து, எந்த உடலை இரவு பகலாகப் பேணிப் போஜித்து, அதன் பால் அன்பைப் பொழிந்தாளோ, அந்த உடலிலிருந்து பிராணன் பிரிந்தவுடன் அதை “பிரேதம்” என்று குறிப்பிடுவாள் மனைவி. தற்செயலாக, உடலுக்கு உயிர் திரும்பி திடீரென்று உடல் எழுந்து உட்கார்ந்து விட்டாலோ, “ஐயோ பிசாசு” என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடுவாள்.

ஆகையால் வள்ளுவர் பெருமான்,

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
புற்றுக பற்று விடற்கு”

என்று அருளியது போல பற்றுக்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு சர்வேஸ்வரனின் கால்களை நாம் பற்றிக் கொண்டால் காலன் வரும்பொழுது வரட்டும் என்று இருந்து விடலாம்.

முற்றும்.

Leave a Reply