Shadow

பீப் பாடலும் டூப் சீற்றமும்

நல்ல பொம்பள எவளுமிங்கு இல்லவே இல்ல..
கெட்ட ஆம்பள எவனுமிங்கில்ல..

குட் பொம்பள எவளுமிங்கில்ல..
ஃப்ராட் ஆம்பள எவனுமிங்கில்ல..

ஆளைப் பார்த்துத்தானே பொண்ணு தூண்டில் போடுவா..
அவளோட ஆச தீர,
உன்ன விலகி ஓடு வா

இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள படம் “நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க”. பாடலின் தொடக்க வரி, ‘சரக்கடிச்சும் தானே போதை ஏறல’. பாடியவர் கானா பாலா. எழுதியவர் யுகபாரதி. இசையமைத்தவர் ரிஷால் சாய்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மூன்று பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது. அதில் சரக்கு பாட்டும் ஒன்று. இதனைத் தொடர்ந்து பேச வந்த இயக்குநர் களஞ்சியம், யுகபாரதியின் பாடல் வரிகளை மிகவும் சிலாகித்தார். அவர் சிலாகித்தது எந்தப் பாடலை எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கு மேலே உள்ள பாடல் வரிகள்தான் ஓடிக் கொண்டிருந்தது. அதோடு நில்லாமல், சிலரால் தமிழ்த் திரையுலகமே தமிழ்ச் சமூகம் முன் தலை குனிந்துள்ளது என நரம்பு புடைக்க வருத்தப்பட்டார்.

சிம்புவின் மீதான நாலு பேரின் நாலா விதமான கோபமும், அதன் பின்னாலுள்ள பாசாங்கும் எரிச்சலடைய வைக்கின்றன. விடாமல் துரத்த வேறு செய்கிறது. சிம்புவின் பாடலில் எது அவர்களை கோபமடைய வைக்கிறது? பொருட்குற்றமா? சொற்குற்றமா? பொருட்குற்றமெனில், யுகபாரதியின் மேலேயுள்ள பாடல் முதற் கொண்டு தமிழில் வரும் பெரும்பாலான பாடல்கள் இத்தகைய அருவருப்பான குப்பைகளே!

சொற்குற்றமெனில் அதை விட பாசாங்கானது வேறொன்றுமிருக்காது. எந்தப் பள்ளியின் கழிப்பறைக்கும் வேண்டுமானால் சென்று பாருங்கள், படம் வரைந்து இடம் சுட்டி விளக்கியிருப்பார்கள். பேருந்துகளில், சாலையில், மைதானங்களில், போக்குவரத்து நெரிசல்களில், கல்லூரியில் என நீக்கமற நிறைந்த சொற்கள் அவை. கோவில் திருவிழாக்களின் பொழுது, கூத்து நடக்கும். 99% மகாபாரதக் கூத்துதான். இரவு பத்து மணிக்கு மேல் தொடங்கி, விடிய விடிய நடக்கும். துரியோதனனையும் பீமனையும் பஃபூன் பீப்பின்றி எரிச்சல்படுத்தும் பாங்கை குடும்பத்தோடு சிரித்து மகிழ்வார்கள். குடும்பத்தில் ஐந்து வயது வாண்டு முதல் தொண்டு கிழம் வரை அடக்கம். இடம் பிடிக்க வீட்டிலுள்ள சிறுவர்களிடம் தான் பாய் கொடுத்தனுப்புவார்கள். இதை நாகரீகச் சூழலின் எடுத்துக்காட்டாகப் பாவிக்கலாம். பஃபூனின் வரம்பு மீறிய பீப்-களால் தங்கள் வீட்டு சிறார்களும் விடலைகளும் கெட்டு போய் விடுவார்கள் என்ற பதற்றம் அங்கில்லை. மூடி மறைத்தாலும், இந்தச் சமூகம் எப்படியேனும் அதை எல்லாம் அவர்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுமென்ற புரிதலும் காரணமாக இருக்கலாம். அந்தக் கூத்தில் உபயோகப்படும் வார்த்தைகளை, அந்தக் குடும்பங்கள் அங்கேயே உதறி விடும். அந்தச் சிறுவர்கள் தங்களுக்குள் குசுகுசுவென்றும், விடலைகள் கொஞ்சம் சத்தமாகத் தங்களுக்குள்ளும், பெரியவர்கள் தங்களுக்குள்ளும் உபயோகித்துக் கொள்வார்கள். அவரவர் எல்லையை உணர்ந்தவர்களாக உள்ளனர் கூத்து பார்த்தவர்கள். கூத்தைக் கூத்தாகப் பார்த்துப் பழகிய நாகரீகச் சமூகத்திற்கு இன்று எதற்குப் பதற்றப்படுவதென்று தெரியாமல் அனைத்துக்கும் பதற்றப்படுகிறது.

பிறப்புறுப்புச் சொற்களைப் பயன்படுத்தவே கூடாதென்ற மனநிலை விக்டோரியன் ஒழுக்கவியல் நமக்களித்த கொடை. அதற்கும் முன்னான தமிழ்ச் சமூகத்திற்கு அத்தகைய பாசாங்கு இல்லை. அவர்கள் தங்கள் படைப்புகளில் எதையும் பேசும் முழுச் சுதந்திரத்தைப் பெற்றவர்களாக இருந்தனர். இன்றும் உண்டு சில கட்டுபாடுகளுடன். சமீபத்திய உதாரணம்: த்ரிஷா இல்லனா நயன்தாரா. அது A செர்ட்டிஃபிகேட் வாங்கிய மட்டமான ஒரு படம். அந்தப் படம், உலக வரலாற்றில் முதன் முறையாக தொலைக்காட்சிகளில் வரப் போவதே இல்லை. 18 வயதுக்கு மேலானவர்கள் மட்டுமே திரையரங்கில் பார்த்திருக்கக்கூடும் (கூட்டம் கூட்டமாய்ப் பார்த்த பள்ளி மாணவர்களைத் தடுக்காதது திரையரங்கத்தின் பிழை. படத்தை எடுத்தவர்களின் பிழையன்று). அந்தப் படம் இளைஞர்களைக் கெடுக்கிறதென குறை சொல்கின்றனர். 18 வயதாகியும், ஒருவன் இது போன்ற அரைகுறைப் படைப்புகளால் பாதிக்கப்படுகிறான் என்பது சமூகத்தின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. அதை சரி செய்யப் பார்க்காமல், படைப்பாளிக்கு எல்லை வகுக்கும் செயலைச் செய்வது பாசாங்கின்றி வேறென்ன? கூனிக் குறுக வேண்டிய பாசாங்கிற்காக கவலை கொள்ளாமல், அதை அறச் சீற்றமாக வெளிபடுத்துகிறார்கள். அவற்றில் ஆகச் சிறந்த போலி அறச்சீற்றமாக, படைப்பாளிகளின் குடும்பத்தாரை அதிலும் குறிப்பாக பெண்களை இழுத்த நிர்மலா கொற்றவையினுடையதைச் சொல்லலாம்.

நான் பெண். ஆணின் பெண் அல்ல  கொற்றவை

ஆனால், இந்தச் சலுகை பெண்ணியவாதியான அவருக்கும், அவர் குரல் கொடுக்க விரும்பும் பெண்களுக்கே மட்டுமே உரித்தானது போலும். சாதிய அடுக்குகளிலும் பொருளாதாரத்திலும் உயர்நிலையில் இருக்கும் பெண்கள், குறிப்பாக கலைத்துறையில் இயங்கும் பெண்கள், புகழின் உச்சியில் இருக்கும் ஆணின் குடும்பப் பெண்கள் எல்லாம் ஆணின் பெண்களே! மகனின் தாயாக, சகோதரனின் உடன்பிறந்தவளாக, அத்தையின் மருமகனாகப் பாவித்து, அப்பெண்களை குடும்பச் சட்டகத்துக்குள் அடைத்து, விமர்சிக்கிறேன் கண்டிக்கிறேன் (!? – பெண்ணாகப் பிறந்ததற்கு கண்டிக்கிறாரோ?) என்ற பெயரில் பெண்ணியவாதி கொற்றவை மிகவும் கொதித்துப் போயுள்ளார். அதாவது எல்லாப் பெண்களும் பெண்களல்லர் என்பதே கொற்றவை கண்டெடுத்த பெண்ணியம். சிம்புக்கும் கொற்றவைக்கும் தான் இதில் எத்தனை ஒற்றுமை? ‘எல்லாப் பெண்களும் பெண்களல்லர்.. ஒருவனை மட்டுமே தன் வாழ்நாளில் காதலித்து, அவனுக்கு மட்டுமே விசுவாசமாய் அடங்கி இருப்பவளே பெண்’ என்கிறார் சிம்பு. தங்கள் பார்வையில் பெண்கள் அல்லாதவர்களை அசிங்கப்படுத்திக் கொள்ளலாம். சிம்புவாவது தன் ஆற்றாமையையும் புரிதலின்மையையும் பொதுப் படைப்பாக்கிச் சாடித் தீர்த்துக் கொண்டுள்ளார். பெண்ணியம் பேசும் கொற்றவையோ அத்தகைய குறைந்தபட்ச கேடயம் கூடத் தேவையின்றி, நேரடியாக பெண்கள் மீது சேறு வாரி இறைத்துள்ளார். ஆனால், நான் படைப்பைத்தானே விமர்சிக்கிறேன்; கண்டிக்கிறேன் எனப் பூசி மெழுகுகிறார். சிம்புவின் அந்தப் பாடல் கேவலமானது என்பது விமர்சனம்; அதன் உட்பொருள் வன்மமானது என்பது கண்டனம். அவர்கள் வீட்டுப் பெண்களைக் குற்றவாளியாக்குவது ஆணாதிக்க வக்கிர மனோபாவம்.

பயாஸ்கோப் காலத்திற்கு முன்பிருந்தே, இது போன்ற அபத்தமான பாடல்களால் பொதுவெளியில் நடமாடும் பெண்கள் சீண்டப்பட்டே வந்துள்ளனர். அதையும் மீறி, வெளியில் வரும் பெண்களை முடக்கி விட, விடலைப் பசங்களும் கொற்றவை போன்றோரும் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறார்கள். அப்படி முடக்கிப் பார்க்க அவர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.

பாதகம் செய்வோரைக் கண்டால் நீ
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா

– பாரதி

மூடிக்கிட்டுப் போ