Shadow

மன்மதன் அம்பு விமர்சனம்

Manmadhan-Ambu

மன்மதன் அம்பு – தசாவதாரத்தினைத் தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் உலக நாயகன் கூட்டணியில் வெளிவரும் படம். யாவரும் கேளிர், காருண்யம் என தொடங்கி, படத்தின் பிரதான பாத்திரங்களான மூவரின் பெயர்களில் இருந்து மன், மதன், அம்பு என்பதை எடுத்துக் கோர்த்து தலைப்பாக்கி உள்ளனர்.

கோடீஸ்வரரான மதனகோபால் விடுமுறைக்கு செல்லும் தனது காதலியான அம்புஜாக்ஷியைக் கண்காணிக்க மேஜர் இராஜ மன்னாரை நியமிக்கிறார். சந்தேகிக்கும் மதனகோபாலுடனான காதலை அம்புஜாக்ஷி ஏற்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

மேஜர் ஆர்.மன்னார் ஆக கமல் ஹாசன். ஆர்ப்பாட்டம் இல்லாத அறிமுகத்தில் அசத்தலாக திரையில் தோன்றுகிறார். அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட அல்வா சாப்பிடுவது போன்றதொரு பாத்திரம். அனுபவம் காரணமாக நடிக்க அதிகம் சிரமப்படாமல் படு இயல்பாய் திரையில் வலம் வருகிறார். ‘தகுடு தத்தம்..’ என்ற பாடலை எழுதி பாடிய கமல் குதூகலமாய் சிறிது ஆடவும் செய்கிறார். ஆனால் முன்பு போல் அவரது நடனங்களை இனி வரும் படங்களில் காண முடியாது என்பதே நிதர்சனம். உடல் மற்றும் வயதினைப் பற்றிய பிரக்ஞைக் கொண்டே நடிக்கிறார் எனினும் பாத்திர தேர்விலும் அது பிரதிபலித்தால் இன்னும் நேர்த்தியான படங்களை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம். உதாரணம்: ‘உன்னைப்போல் ஒருவன்‘.

மதனகோபாலாக ஆர்.மாதவன். ‘அன்பே சிவம்’ படத்திற்கு கமலுடன் இணைந்து நடிக்கின்றார். அதனாலேயே படத்தின் மேல் கூடுதல் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டன. அதை தனது அருமையான நடிப்பால் பூர்த்திச் செய்துள்ளார். கோடீஸ்வர மிடுக்குடன் அறிமுகமாகி, மெல்ல சந்தேகத்திற்கு உட்பட்டு, எரிச்சலாகி, குடித்து பிதற்றுவது என நடிக்க கிடைத்து அத்தனை காட்சிகளிலும் தொடக்கம் முதல் பின்னுகிறார்.

அம்புஜாக்ஷி என்னும் நடிகை நிஷாவாக த்ரிஷா. சொந்த குரலில் பேசி அதிர்ச்சியில் காதடைக்க வைக்கிறார். சூர்யாவுடன் நடனம் ஆடுகிறார்; காரில் செல்லும் பொழுது விபத்து ஒன்றை நிகழ்த்துகிறார்; ஐரோப்ப சாலைகளில் நடக்கிறார்; பறவைகளைப் பார்த்தால் யோசிக்கிறார்; நிறைய புன்னகைக்கிறார். இத்தனையும் செய்பவர் நடித்தாரா என்றால் சந்தேகம் தான்.

தீபாவாக சங்கீதா. நிஷாவின் விவாகரத்து பெற்றத் தோழியாகவும், இரண்டு  குழந்தைகளுக்கு தாயாகவும் வரும் பாத்திரத்தில் தன்னை அருமையாக பொருத்திக் கொண்டுள்ளார். ஒரு தாய் தன் குழந்தைகள் தூங்குவதை எப்படி கண்டுபிடிப்பார் என கதை விட்டு, தன் மகன் விழித்துக் கொண்டிருப்பத்தைக் கண்டுபிடிக்கும் இடம் அருமை.

படத்தின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாக இருப்பவர்கள் ஊர்வசி, ரமேஷ் அரவிந்த் தம்பதி. மொட்டைத் தலையுடன் புற்று நோயால் அவதியுறும் ரமேஷ் அரவிந்தினை, தனது பதிக்காக பரிதவிக்கும் ஊர்வசி என சில காட்சிகள் மட்டும் வந்து செல்கின்றனர். இவர்கள் இருவரும் தோன்றும் காட்சிகள் பெரும்பாலும் மேஜருடன் பேசும் இணைய அரட்டையில் தோன்றும் படக் காட்சிகளாக வருகின்றன.

படத்தின் நகைச்சுவையாளராக கேரளத்தின் குஞ்சன் தயாரிப்பாளர் குரூப்பாக நடித்துள்ளார். அவர் பேசும் மலையாளம் புரியவில்லை எனினும் சில இடங்களில் அவரது முக பாவனைகள் ரசிக்க வைக்கின்றன. திருமதி. மஞ்சு குரூப்பாக கேரளத்தின் குணச் சித்திர நடிகையான மஞ்சு பிள்ளை நடித்துள்ளார். இவர்கள் இன்றி கெளரவத் தோற்றத்தில் இன்னும் சிலர் நடித்துள்ளனர். கமலின் முதல் மனைவி கரோலின் ஆக ஜூலியட் என்னும் வெளிநாட்டவரும், மாதவனின் மாமன் மகளாக இரண்டே இரண்டு காட்சிகளில் தோன்றும் ஓவியா, மாதவனின் தாயாக தோன்றும் பாடகி உஷா உதூப் ஆகியோர் நடித்துள்ளனர். உஷா உதூப்பின் பாத்திர தேர்வினைக் குறிப்பிட்டு சொல்லும்படி பிரமாதப்படுத்தி உள்ளார்.

இசை தேவி ஸ்ரீ பிரசாத். பாடல்களை விட பிண்ணனி இசையில் ரசிக்க வைக்கிறார். ஒரு சுற்றுலா படத்திற்கான உணர்வினை எற்படுத்துகிறது. ஒளிப்பதிவு எழுத்தாளர் ஞானியின் மைந்தனான மனுஷ் நந்தன். அவரின் ஒளிப்பதிவிற்காகவே படத்தினை இன்னொரு முறை பார்க்கலாம் என்ற உணர்வினை ஏற்படுத்துகிறார். குறிப்பாக ‘நீல வானம்..’ பாடலின் இசையும், ஒளிப்பதிவும், பின்னால் நகரும் காட்சி அமைப்புகளிம் மேஜரின் கடந்த காலத்தைப் பற்றி கதை சொல்லும் பாங்கும் அற்புதம். குறிப்பாக பாடலின் இடையில் ஒரு காட்சியில், மலர் மருத்துவமனையின் சாளரத்தின் வழியாக தெரியும் அடையார் பாலம் என ஒளிப்பதில் தெரியும் துல்லியம் ஆச்சரியத்தை வரவைக்கிறது. படத்தில் வரும் பிரம்மாண்டமான கப்பலான எம்.எஸ்.சி. ஸ்பெலன்டிடாவின் வெளிப்புற அழகை முழுமையாக திரையில் கொணர்ந்துள்ளார் மனுஷ் நந்தன. முக்கியமாக கடலினைக் கிழித்து செல்லும் கப்பலை, ஹெலிகாப்டரில் இருந்து கப்பலின் மேல் கோணத்தில் படம் பிடித்திருப்பது ரசிக்க வைக்கிறது.

திரைக்கதை, வசனம் கமல் ஹாசன். படத்தினை கலகலப்பாவது வசனங்களே எனினும், பாதி தான் புரிகிறது. வசனங்களில் நிறைய ஆங்கில கலப்படங்களாலும், ‘ரெட்- ஒன் கேமிராவின் நேரடி வசனப் பதிவுகளாலும் பாதி படத்திற்கு மேல் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதே புரியவில்லை. ‘மூதலி (மெய்ப்பி, நிரூபி)’ என்ற வார்த்தையை சிறுநீரைக் குறிக்கும் மற்றொரு வார்த்தையுடன் குழப்பிக் கொள்வது, வீரத்தின் உச்சக் கட்டம் அகிம்சை, நடிகைகளுக்கு இரண்டு அரிதாரம்- முகத்திற்கு ஒன்று, நாக்கிற்கு ஆங்கிலம் என வசனங்கள் ஆங்காங்கே பளீச்சிடுகின்றன.

படத்தின் தொடக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் கே.எஸ். ரவிகுமார்  கெளரவத் தோற்றத்தில் தோன்றுகின்றனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் படத்தின் இடையில் வந்துப் போகிறார்.

இயக்கம் கே.எஸ்.ரவிக்குமார். ஜக்குபாய் படத்தினைத் தொடர்ந்து 2010இல் வெளிவரும் அவரது இரண்டாவது படம். கமலுடன் அவராது முந்தைய படங்களான அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்ச தந்திரம் வரிசையில் இப்படம் சேரும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் திரைக்கதை அதற்கு உதவவில்லை. குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சிகள் நடுத் தெருவில் இடம்பெறுவது போல் ஒரு பாலத்தின் மேல் நடக்கிறது. ‘என் பணம் அது உன் பணம்.. உன் பணம் அது என் பணம்’ என்ற ரீதியில் பாத்திரங்கள் தங்களுக்குள் பேசி தங்களுக்கான இணைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். காதலோ, மிகை உணர்ச்சியோ, நகைச்சுவையோ அற்ற மிக திராபையான முடிவு படத்தின் மாபெரும் பலவீனம்.

மன்மதன் அம்புபஞ்ச தந்திரம் ஆக தைக்க வேண்டியது மும்பை எக்ஸ்பிரசாக தடம் புரண்டு விட்டது.