Shadow

மயக்கம் என்ன விமர்சனம்

Mayakkam enna
மயக்கம் என்ன – கலக்கத்திலோ, குழப்பத்திலோ, உணர்வுநிலைத் தடுமாற்றத்திலோ உள்ளவரைப் பார்த்து வாஞ்சையுடன் கேட்கப்படும் அன்பாக  தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.வனவிலங்கு புகைப்படக்காரர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் உள்ளவர் கார்த்திக் சுவாமிநாதன். கார்த்திக்கின் நெருங்கிய நண்பனான சுந்தர், யாமினி என்னும் பெண்ணை அவனது நட்பு வட்டத்திடம் தன் தோழியாக அறிமுகப்படுத்துகிறான். யாமினிக்கு கார்த்திக்கைப் பிடிக்கத் தொடங்குகிறது. நண்பனின் தோழி என கார்த்திக் விலகப் பார்த்தாலும் இயற்கையின் வேதியியலில் இருந்து தப்ப இயலாமல் யாமினியிடம் காதல் வயப்படுகிறான். சுந்தருக்கு உண்மைத் தெரியும் பொழுது, சுந்தரின் தந்தை இடையில் புகுந்து கார்த்திக்கிற்கும் யாமினிக்கும் மணம் புரிந்து வைக்கிறார். தான் எடுத்த புகைப்படத்திற்கு விருதை வேறொருவர் பெறுகிறார் எனத் தெரிந்ததும் மயக்கமுற்று விழுகிறான் கார்த்திக். அந்த மயக்கத்தில் இருந்து கார்த்திக் மீண்டானா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

ஆடுகளத்திற்கு தேசிய விருது வாங்கிய தனுஷ் கதாநாயகனாக. நடிப்பில் வியக்க வைக்கிறார். கதாபாத்திரமாகவே உருமாறும் வித்தையில் தேர்ந்து வருகிறார். முதல் பாதியில் பழக்கப்பட்ட வேடத்தில் தான் வருகிறார் எனினும் ரசிக்க வைக்கிறார். மனப் பிறழ்வு நிலையில் உள்ள பொழுது பார்வையாலேயே மனைவியை அதட்டி வைக்கிறார். தன் வாரிசை குருதியாய் படர விட்ட குற்றவுணர்வில் அழும்பொழுது நெகிழ வைக்கிறார். நாயகி ஆக ரிச்சா. யாமினி என்ற பாத்திரத்தில் வருபவர் தன் கண்ககளாலேயே உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார்.திரைப்படம் என்பதே ஒரு மொழியாய் கருதப்படுகிறது. ஒலியும், ஒளியுமே அம்மொழியின் பிரதான அங்கங்களாக உள்ளன. அத்தகைய அங்கங்களை தொழில்நுட்ப நேர்த்தியுடன் கொண்டுள்ளது இப்படம். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், சூழலையும் பிரதிபலிக்கிறது. சில இடங்களில் வரும் மெளனமும் உணர்வுகளைப் பிரதிபலிக்கவே செய்கிறது. பனிப் படர்ந்த கானகம், செவ்வானம், ஒளி கலவைகளுக்கு ஊடே தெரியும் கதாபாத்திரங்களின் முகங்கள், மெல்ல உடையும் பீங்கான்கள் என ராம்ஜியின் ஒளிப்பதிவு படம் முழுவதும் மனதை வருட செய்கிறது. பின்னணி இசையுடன் இழையோடும் காட்சிகள் மனதில் மாயங்கள் செய்கின்றன. முக்கியமாக பாடல்கள்.

ஆயிரத்தில் ஒருவன்‘ படம் போல் மாறுபடாமல் செல்வராகவனின் முந்தையப் படங்கள் எழுப்பிய பிம்பங்களுடன் இப்படமும் சேர்ந்துக் கொள்கிறது. எனினும் நேர்மறையாக முடியும் அவரது முதல் படம் இது. செல்வராகவனின் நாயகன்கள் நாயகியைக் காதலிக்க வைத்து சலித்து விட்டனர் போலும். அதனால் நாயகி அவ்வேளையை இப்படத்தில் செய்கிறார். பிச்சைக்காரராகவே சென்றாலும் பிடித்த வேளையைச் செய்வதில் உள்ள திருப்தியைப் பற்றி சிலாகித்து நாயகன் பேசும் வசனம் நன்றாக உள்ளது. மாதேஷ் கிருஷ்ணசாமி என்பவர் தனுஷின் புகைப்படத்தைத் தனதென கூறி ‘நேஷ்னல் ஜ்யோகிராஃபிக்’ இதழில் பிரசுரித்து விடுகிறார். இதழில் பிரசுரிக்க மென் நகல் தேவைப்படும். ஆனால் மாதேஷ் கிருஷ்ணசாமியிடம் இருப்பது அச்சு நகல் மட்டுமே!! அச்சு நகலை வருடி இதழுக்கு அனுப்பினார் என வைத்துக் கொண்டாலும், தனுஷிடம் இருக்கும் மென் நகல் கொண்டு மாதேஷின் முகத்திரையைக் கிழித்து தனது திறமையை உலகிற்கு காட்டியிருக்கலாம். ஆக படத்தின் ஆதார தர்க்கமே அர்த்தமற்றதாய் போய் விடுகிறது. பிறகு சில வருட மனப் போராட்டங்களுக்குப் பின் மீண்டெழுகிறார் தனுஷ். அவர் எடுக்கும் ஒரு புகைப்படத்தினை அந்த ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதே போட்டியில் சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட (திருடப்பட்ட) மாதேஷ் கிருஷ்ணசாமியின் புகைப்படத்தையும் போட்டியில் எடுத்துக் கொள்கின்றனர். படத்தின் முடிவிலும் ஒரு தர்க்கப் பிரச்சனை.

மயக்கம் என்ன வில்லன், அடியாட்கள், சுமோ, சண்டை, வன்முறை போன்ற தலைவலிகள் இல்லாமல் மென்மையாக நகரும் தமிழ்ப்படம்.

Leave a Reply