Shadow

மினியன்ஸ் விமர்சனம்

Minions Tamil Review

(Minions)

வெறுக்கத்தக்க மனிதரான க்ரூவிடம் பணி புரியும் மினியன்ஸ்களை டெஸ்பிக்கபிள் மீ 1 & டெஸிபிக்கபிள் மீ 2 ஆகிய படங்களிலேயே பார்த்து விட்டோம். ஆனால் அவைகள் யார் என்ன ஏது போன்ற விவரங்கள் அப்படங்களில் சொல்லப்படவில்லை. அவர்களின் வரலாறைத்தான் மினியன்ஸ் படத்தில் சொல்லியுள்ளனர்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மிக மூத்த சின்னஞ்சிறு உயிரினங்கள்தான் நம் அழகு மஞ்சள் நாயகர்களான மில்லியன்ஸ். அவர்களின் ஒரே லட்சியம் ஒரு வில்லனைத் தங்களுக்குத் தலைவனாகப் பெற வேண்டுமென்பதே.!

அதற்காக அவர்கள் அணுகாத வில்லன்கள் இல்லை. நம்மை ஜுராசிக் வேர்ல்டில் அச்சுறுத்திய டைனோசரான டி-ரெக்ஸ் முதல் செங்கிஸ் கான், டிராகுலா என எண்ணற்ற வில்லன்களை நோக்குகின்றனர். என்ன சாபமோ தெரியவில்லை, தாங்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களையே ஒவ்வொரு முறையும் ஒரு விபத்தில் மினியன்ஸே கொன்று விடுகிறார்கள். மனம் வெறுத்து, லட்சியம் நிறைவேறாத துக்கத்துடன் அண்டார்டிகா கண்டத்துக்கு அஞ்ஞாத வாசம் புகுகின்றனர். மனதை அரிக்கும் லட்சிய வேட்கையை உதாசீனம் செய்தவாறு எத்தனை யுகங்கள்தான் வாழ இயலும்!?

ஒரு தலைவனைத் தேடிப் புறப்படுகிறது கெவின் எனும் வீரமிகு மில்லியன். அதனுடன் வயதில் இளைய(!?) பாப் (Bob)-உம், ஒற்றைக் கண் ஸ்டூவர்ட்டும் புறப்படுகின்றனர். இந்த மூவர் குழு, தாங்கள் விரும்பிய தலைவனைச் சந்தித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு.

துணை கதாப்பாத்திரங்களாக இருந்த பொழுதே ஈர்த்து ரசிக்க வைத்த ஜீவன்கள், படத்தின் மைய கதாப்பாத்திரங்களாக வரும்போது ஈர்க்காமலா போய்விடுவார்கள்!? அதுவும் முப்பரிமாணத்தில் அவர்கள் அடிக்கும் லூட்டிகள் செமயாக உள்ளன.

எக்ஸ்காலிபர் வாளை எதிர்பாரமல் உருவி விடும் பாப், இங்கிலாந்துக்கு அரசனாகிவிடுகிறது. ஆனால் அவர்கள் இங்கிலாந்து வந்ததோ, அரசியின் கிரீடத்தைத் திருட.! அரசரான பாப் அரண்மனையின் உப்பரிகையில் இருந்து, ‘பிளா.. பிளா..’ என மினியன்ஸ் மொழியில் மக்களிடம் பேசுவது முதல் அவர்கள் அடிக்கும் லூட்டிகள் அட்டகாசம். வில்லாதி வில்லியான ஸ்கார்லெட்டிடம் மாட்டிக் கொண்டு அவர்கள் படும்பாடு, 3-டி இல் இன்னும் நெருக்கமாய் நம்மை உணரச் செய்கிறது.

படத்தை அழகாக டெஸ்பிக்கபிள் மீ 1 – இன் முந்தைய பாகமாகவும் கொண்டு வந்து முடித்து விட்டனர். இப்படம் சிறுவர் சிறுமிகளுக்கு மிக மிகப் பிடிக்கும்.