Shadow

ரசிகர்கள் மனதில் நிற்கப் போகும் தென்றல்

Mahima Nambiyar

‘குற்றம் 23’ திரைப்படம் தனது கலைப்பயணத்திற்கு அமைந்த ஒரு சிறந்த தூண் எனவும், தமிழ் சினிமாவில் தன்னுடைய நிலையை ஒரு படி மேலே எடுத்து செல்லும் படமாகவும் அமையும் என்கிறார் மகிமா. படத்தில் அவரது கதாபாத்திரம் பெயர் தென்றல். ‘மெளன ராகம்’ திவ்யா, ‘வேட்டையாடு விளையாடு’ ஆராதனா, ‘காக்க காக்க’ மாயா, ‘அலைபாயுதே’ சக்தி போல மகிமா ஏற்று நடிக்கும் தென்றல் பாத்திரமும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்குமென அடித்துச் சொல்கின்றனர் படக்குழுவினர்.

“முதன் முதலில் எனக்கு அறிவழகன் சார் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும், நான் சற்றே படப்படப்பானேன். அதன் பின்பு காலையில் எனக்கு நடைபெற்ற நடிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, அன்று மாலையே படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். முதன் முதலில் அருண் விஜய் சாருடன் நடிக்கப் போகிறோம் என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவரின் சுமுகமான பண்பும், நட்பு ரீதியாகப் பழகும் அவரின் இயல்பும் என்னை அந்தப் பயத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தது. ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு நான் அவரின் நடிப்பிற்கு தீவர ரசிகையாகி விட்டேன் என்பது தான் உண்மை. அது மட்டுமின்றி தடையற தாக்க படத்தில் அவரின் திறம்பட நடிப்பையும், அற்புதமான நடனத்தையும், அதிரடியான சண்டைக் காட்சிகளையும் கண்டு நான் பல முறை வியந்தது உண்டு” என்கிறார் மகிமா.

இதுவரை கிராமியக் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த மகிமா, இந்தத் திரைப்படத்தில் மாநகரப் பெண்ணாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. “பொதுவாகவே தனது படங்களில் கதாநாயகிகளை மிக அழகாகச் சித்தரிக்கும் தனித்துவமான ஆற்றலைப் படைத்தவர் இயக்குநர் அறிவழகன். அந்த வகையில் இந்தப் படம் எனக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம். என்னுடைய தென்றல் கதாபாத்திரத்தை நான் அதிகளவில் காதலிப்பது மட்டுமில்லாமல் அந்த வேடத்தின் உயிராகவே நான் மாறியுள்ளேன்” என்கிறார் அழகும் அறிவும் ஒருங்கே இணைந்த மகிமா நம்பியார். இத்திரைப்படம் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருப்பது குறிப்பிடதக்கது.