Shadow

ராஜா மந்திரி விமர்சனம்

Raja mandhiri Tamil review

சூர்யா, கார்த்தி என பாசமிகு சகோதரர்கள் வாழ்க்கையில் நேரும் காதல் – கல்யாணக் குளறுபடிகள் தான் படத்தின் கதை.

கல்யாணம் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் முதுமகன் (30 வயதைக் கடந்த ஆண்) சூர்யாவாக காளி வெங்கட். அவருக்குத் தம்பியாக கலையரசன் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தாலும், காளி வெங்கட்டுக்கே படத்தின் நாயகன் என்ற அந்தஸ்த்தைத் தர முடியும். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், ‘எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே!’ எனத் தொடங்கும் பாடலுக்கு காளி வெங்கட் காட்டும் முக பாவனைகள் அலாதியாக உள்ளது. படமும் அவரை மையப்படுத்தியே நகர்கிறது. எதிர் வீட்டுப் பெண்ணான மகாலட்சுமியாக நடித்திருக்கும் வைஷாலியிடம் அவர் வழிவதெல்லாம் ரசிக்கும்படியாக உள்ளது. காதலிக்கப்பட மட்டுமே என்றாலும், வைஷாலி அதிகமாக ஈர்க்கிறார். அத்தகைய ஈர்ப்புக்கு, அவர் லூசுப் பெண்ணாகச் சித்தரிக்கப்படாதது காரணமாக இருக்கலாம். அதை விடக் குறிப்பாக, எவ்விதப் பூச்சுகளுமின்றி, உடைக் குறைப்புமின்றி, கிராமிய வாழ்வில் இருக்கும் யதார்த்தமான பெண்ணாக வருகிறார் வைஷாலி. பெண் இயக்குநர் ஒருவரின் படைப்பில் இது கூடச் சாத்தியமாகாவிட்டால் எப்படி?

ஆனால், கல்லூரி மாணவியான சுபாவை அத்தகைய லூசுப் பெண்ணாகவே சித்தரித்துள்ளார். ஒரு பாத்திரத்தை சினிமாவோடு ஒத்துப் போகுமாறும், மற்றொன்றை யதார்த்தமாகவும் படைத்து, சினிமா நடைமுறைக்கு ஏற்றவாறு சமன் செய்துவிட்டார் இயக்குநர் உஷா கிருஷ்ணன். இவர் இயக்குநர் சுசீந்திரனிடம் துனை இயக்குநராகப் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுபாவாக நடிக்க ஷாலின் ஸோயாவை கேரளாவில் இருந்து அழைத்து வந்துள்ளார் இயக்குநர். ஷாலின்க்கு ஜோடியாக கலையரசன் நடித்துள்ளார். பன்னிரெண்டாவது முடித்து விட்டு கல்லூரிக்குப் போகும் பதின்ம வயதுக்காரராக அவரை ஏற்றுக் கொள்ள சற்று சிரமமாக உள்ளது. 

Shaalin Zoya

படம் அழுத்தமாக இன்னொரு விஷயத்தைப் பதிகிறது. பெண்கள் காதலை எந்நிலையிலும், அல்லது எப்பொழுதும் தூக்கி எறியத் தயாராக இருப்பார்கள் என்றே பெரும்பாலான தமிழ்ப் படங்களில் சித்தரிக்கப்படுகிறது. ஆனால், இப்படத்தில் வரும் இரண்டு கதாநாயகிகளும் நாயகர்களை விடக் காதலில் தீவிரமாகவும் விடாப்பிடியாகவும் உள்ளார்கள். குடும்பம், பாசம் என்ற பலவீனம் ஆண்களுக்குமானது என்று இயக்குநர் உஷா கிருஷ்ணன் உணர்த்துகிறார்.

படத்தின் முதல் பாதியில் இருக்கும் நேர்த்தி, இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைகிறது. முதல் பாதியின் கலகலப்புக்குப் பொறுப்பேற்கிறார் பாலசரவணன். படத்தின் இறுதி நிமிடங்களில் சிறிது சுவாரசியத்தைக் கூட்டியிருந்தால், படம் மிகுந்த நிறைவைத் தந்திருக்கும். படத்தின் இனை தயாரிப்பாளரான P.G.முத்தைய்யாவின் ஒளிப்பதிவில், பச்சைப் பசேலென்ற திருவாரூர் மாவட்டத்துக் கிராமங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருகின்றன.