Shadow

ராமானுஜன் விமர்சனம்

Ramanujan review

கணக்கு, பிணக்கு, ஆமணக்கு என மகாகவி பாரதிக்கே கணிதம் என்றால் அவ்வளவு கசப்பு. சாதாரண மனிதர்களைப் பற்றிக் கேட்பானேன்? அவர்கள் மத்தியில் கணித மேதை ஒருவர் வாழ்ந்தால் அவர் கதியென்னாகும்? அதோ கதிதான்.

ராமானுஜரை ஒரு ஜீனியஸாக வாழவிடாமல் அவருக்கு கஷ்டங்கள் கொடுத்து அவரை சராசரி மனிதனாக்கத் துடிக்கிறது அவரது சுற்றமும் சமூகமும். இதையெல்லாம் எதிர்கொண்டு, அவரெப்படி உலகம் புகழும் மேதையாக வெற்றி கண்டார் என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் முதல் பாதி சுவாரசியமாகவும், இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாகவும் உள்ளது. கோயிலில் தரும் சுண்டல் அளவின் பற்றாக்குறையைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்வது; பள்ளிக்கு அட்டவணை தயார் செய்வதென சிறுவன் ராமானுஜனின் கணித அறிவினை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது அருமை. சிறுவன் ராமானுஜனாக நடித்திருக்கும் அன்மோல் கவர்கிறார். வளர்ந்த பின் டி.டி.ஆரிடம் ராமானுஜன் சொல்லும் Partition Numbers ஈர்க்கிறது. 176 என்ற எண்ணை எத்தனை தடவை கூட்டலாம் என டி.டி.ஆரிடம் கேட்டு, அதற்கு 476715857290 தடவை முறை எனச் சொல்லும் பொழுது ராமானுஜரின் கணித புலமையை எண்ணி பிரமிக்கத் தோன்றுகிறது. இதுதான் இந்தப் படத்தின் வெற்றி. ஆனால் அதன் பின், இத்தகைய பிரமிப்புகள் தோன்றவில்லை. இரண்டாம் பாதியில், நோய்வாய்பட்டிருக்கும் பொழுதும், 1729 என்ற டேக்சியின் நம்பரைக் கேட்டதுமே அதன் சிறப்புத்தன்மையைப் பற்றி விவரிக்கிறார்.

Ramanujan review

எண்களுடனே வாழும் ஒரு நபருக்கு மட்டுமே இது சாத்தியம். புரியும்படி சொல்ல வேண்டுமெனில், நாடி நரம்புலாம் கணித வெறியுள்ளவருக்கு மட்டுமே இது சாத்தியம். இவைலாம் எண்களாக இருப்பதால் நம்மால் பிரமிக்க முடிகிறது. ஆனால் அவர் தொட்ட உயர் கணித உயரத்தை, கற்பனை செய்து கூட பிரமிக்க நம்மால் இயலாது என்பதுதான் நிதர்சனம்.

ராமானுஜர் அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை மிக்கவர். நமக்கு நாயகன் என்றால் வாழ்வின் சகல சிக்கல்களையும் அடித்து நொறுக்குபவராக இருக்க வேண்டும். அவரோ கணிதத்தி்ல் மட்டுமே சிக்கல்களை அவிழ்ப்பவராகவும், மன அழுத்தம் தாங்காமல் தற்கொலைக்கு முனைபவராகவும் உள்ளார். அதனால் இரண்டாம பாதி படம் இழுவையாகத் தோன்றுகிறது.

ஹார்டி என்பவர் மட்டும் இல்லையேல் ராமானுஜர் இல்லை. ஹார்டிதான் இந்தப் படத்தின் உண்மையான நாயகன் என்று கூடக் கூறலாம். கணிதம் மீது ஹார்டிக்கு இருந்த காதலால்தான், ராமானுஜனை எப்படியேனும் லண்டன் அழைத்து வந்து விடவேண்டுமென முயற்சி மேற்கொள்கிறார். அவருக்குத் தடையாக இருப்பது வைதீக சடங்குகளும் பிற்போக்குத்தனங்களும். ‘அது பிரச்சனையில்லை. பரிகாரம் பண்ணிக்கலாம்’ என ஓர் எளிய வழியையும் இந்தியர் ஒருவரிடமிருந்து தெரிந்து கொள்கிறார். இதையும் புரியும்படி சொல்ல வேண்டுமானால், ஹார்டிதான் ராமானுஜரைத் தாங்கிய ‘நண்பேன்டா!’. ஹார்டி போராடி, ராமானுஜருக்கு, ராயல் சொசைட்டியிலும் (FRS – Fellow of the Royal Society), ட்ரினிட்டி காலேஜிலும் உறுப்பினர் ஆக்கிவிடுகிறார். ஹார்டியாக நடித்திருந்த கெவின் மெக் கெளனின் நடிப்பு படத்தின் பலம்.

சமகால பிரச்சனைகளைப் பற்றிய முக்கியமான இரண்டு விஷயங்களை படம் பதிவு செய்துள்ளது. என்ன தான் கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுத்தாலும், அனைத்துப் பரீட்சைகளிலும் தேர்ச்சி பெறும் சாதாரண மாணவன்தான் கல்லூரிக்குத் தேவை என்ற மனோபாவம். இந்த சிக்கல் இன்று இன்னும் ஆழமாக சமூகத்தில் புரையோடியுள்ளது. நூறாண்டுகள் கடந்தும் இன்னும் கல்வி முறையில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இன்னொன்று பதற்றத்தையும் பேரவலத்தையும் ஏற்படுத்தும் போர்ச்சூழல்.

படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் இல்லயெனினும், லிட்டில்வுட்டின் அறிமுகக் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதே போல், “பெருமாளே கோச்சுண்டிருக்கார்னு சொல்றேன்; சாரங்கபாணி கோயில் பட்டர் என்னப் பண்ணுவார்?” என்ற வசனத்தையும் சொல்லலாம். ஹார்டிக்கும், லிட்டில்வுட்டுக்கும் கணிதத்தின் மீது காதல் உண்டு. அதைத் தவிர்த்த பொழுதுபோக்குகளும் சமூகப் பார்வைகளும் உண்டு. ஆனால் ராமானுஜனுக்கு கணிதம்தான் சகலமும். அதைவிட சுவாரசியம், தனது கணித ஞானத்தின் பிறப்பிடமாக அவர் கருதுவது நாமகிரி தாயாரின் அருளை. இத்தகைய விசித்திரங்கள்தான் இந்தியாவின் சிறப்பே!

ராமானுஜரின் மனைவி ஜானகியாக பாமா, ராமானுஜரின் தாயாக சுகாசினி மணிரத்னம், சிங்காரவேல் முதலியாராக ராதா ரவி, திவான் பகதூர் ராமசந்திர ராவாக சரத் பாபு, வொய்.ஜி.பார்த்தசாரதி, மனோ பாலா என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர். ராமானுஜனாக நடித்த அபிநய் ஜெமினி-சாவித்திரி இணையின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. போதுமான அளவு சோகத்தை படத்தில் பிழிந்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.

பாரதி, பெரியார், ராமானுஜர் எனத் தொடர்ந்து சுய சரிதை சார்ந்த படங்களாக இயக்கி வருகிறார் ஞான ராஜசேகரன். சுய சரிதை சார்ந்த படங்கள் தமிழில் ஓடாது என்ற திரை நம்பிக்கையை, தூள் தூளாக்கித் தகர்த்தது அவரது ‘பாரதி’ படம். ஆனால் இப்படிப்பட்ட படங்கள் இன்னும் மலையளவு தமிழில் வரவேண்டியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தகைய முயற்சிகளில் நாளைய இயக்குநர்களும் ஈடுபட வேண்டும். அதற்கான தேவையும் அவசியமும் இங்கு பரந்து விரிந்துள்ளது.