LUCY
அறைக்குள் சென்ற வள்ளலார் ஜோதியில் கலைந்து மறைந்தார்; கபீர்தாஸின் உடல் மலர்களாக மாறியது போன்ற சங்கதிகள் நமக்குப் புதிதன்று. அதையே ஹாலிவுட் பாணி விஞ்ஞான முலாம் பூசி லக் பெஸான், லூசி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அரிதாக வரும் சூப்பர் ஹீரோயின் படங்களில் லூசியும் ஒன்று. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயக்குநர் லக் பெஸான், பெண் கதாபாத்திரங்களை ஆழமானதாகவும் அழுத்தமானதாகவும் தனது திரைப்படத்தில் சித்தரிப்பவர். இவரது இயக்கத்தில் வந்த நிகிதா (Nikita) என்ற படத்தைத் தழுவிதான் கெளதமி நடித்த ‘ருத்ரா’ படம் உருவாக்கப்பட்டது. லூசி என்ற பிரதான பாத்திரத்தில் நடித்த ஸ்கார்லெட் ஜான்சன்தான் இப்படத்தின் சூப்பர் ஹீரோயின். அயர்ன் மேன் 2, தி அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா – விண்டர் சோல்ஜர் போன்ற படங்களில் நடித்தவர் ஸ்கார்லெட் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேன் போல் எதிர்பாராத விதமாக லூசிக்கு அதீத ஆற்றல்கள் கிடைக்கிறது. வலியோ, ஆசையோ அற்றுப் போவதுடன், மின்காந்த அலைகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், சக மனிதரின் மனதையும் உடலையும் அறியும் சக்தியும், உலகத்தின் சகல அசைவுகளை உணரும் சக்தியும் கிடைக்கிறது. இவை அனைத்துமே, மூளையின் செயல்பாட்டு அளவு அதிகரிப்பதன் மூலம் எழுகிறது. சராசரி மனிதனின் மூளை அளவு பத்து சதவிகிதம்தான் இயங்குகிறது என்ற கற்பனையான செய்திதான் படத்தின் மையக்கருவே! அந்த பத்து நூறானால் என்னாகும் என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ்.
மோர்கன் ஃப்ரீமன் இப்படத்தில் மூளையின் செயல்திறன் பற்றி அறியும் ப்ரொஃபெசராகக் கலக்கியுள்ளார். வாழ்வின் பொருளே மற்றவர்களுக்கு ஞானத்தைக் கடத்துவதுதான் எனச் சொல்கிறார். படம், காலத்தைப் பற்றிய சிக்கலான தியரியைப் பேசினாலும், பிரபஞ்சத் தோற்றத்தையும் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதையும் ஒப்பீடு செய்து விஷூவலாகக் காட்டுவது அருமை. கோச் வண்டிகள், ஆதி மனிதர்கள், ஹோமோ சேப்பியன்ஸ் என பின் நகர்ந்து காலத்தை உணரும் லூசி, பிங் பேங் தேற்றம் (Big Bang Theory) முன் வைக்கும் ஒற்றை அணுக்குரு வெடிப்பை உணருகிறார்.
ஆசியாவின் சிறந்த பத்துப் படங்களில் ஒன்றான ‘ஓல்ட் பாய்’ படத்தில் நடித்த நாயகன் சோய் மிக்-சின் தான் இப்படத்தின் வில்லன். ஆனால் இப்படத்தில் அவர் தமிழ்ப்பட வில்லன் போல் பரிதாபமானவராக வருகிறார். அவரது அனுமதியின்றி அவரது மூளையுள்ள தகவல்களைப் படிக்க முடிந்த லூசியை துப்பாக்கியால் கொல்ல முனைகிறார். துப்பாக்கியை உருவி அவர் அடியாட்களை மேற்கூரையில் ஒட்ட வைத்த பின்பும், லூசியை எப்படி எதிர்ப்பது என்று யோசிக்காதவராக உள்ளார். வேக்கட் எனும் எகிப்திய நடிகர், பிரான்ஸ் காவல்துறை அதிகாரியாக வருகிறார். ஸ்கார்லெட் ஜான்சன், மோர்கன் ஃப்ரீமன், சோய் மிக்-சின், வேக்கட் ஆகிய நால்வரும் வெவ்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்ட நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபஞ்சத்தின் பலவிதத்தன்மையை உணர்த்தும் பொருட்டு, நடிகர்களை அவ்விதமாகத் தேர்ந்தெடுத்ததாக இயக்குநர் பெஸானின் மனைவியும் படத்தின் தயாரிப்பாளருமான விர்ஜினி சில்லா கூறியுள்ளார்.
தமிழில், “துடிக்கும் துப்பாக்கி” என்று மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். லூசி என்றே தமிழிலும் வெளியிட்டு இருந்திருக்கலாம்.