வாய்மை – உண்மை தவறாத நிலை
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின், பெண் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதில்லை. ஆனால், அப்படியொரு சூழல் ஏற்படும் கொலை வழக்கு நீதிமன்றத்திற்கு வழங்குகிறது. நீதிபதி 12 பேர் கொண்ட ஜுரி குழுவிடம் அவ்வழக்கை ஒப்படைக்கிறார். அவர்கள் எடுக்கும் முடிவே வழக்கின் தீர்ப்பும்படத்தின் முடிவாகும்.
கோயில் அறங்காவலர், ஐ.பி.எஸ். அதிகாரி (திருநங்கை), பெண் விமானி, ஓய்வு பெற்ற இராணுவ கர்னல், ரோஸ் ஐ.ஏ.எஸ்., நாடக எழுத்தாளர், இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர், கோடீஸ்வரி, அயல் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பண்டிதர், தத்துவவியலாளர் போன்ற வேறுபட்ட துறையினைச் சேர்ந்த பன்னிரெண்டு பேர் கொண்ட ஜூரி குழு அது. அவர்களுக்குள் உரையாடி, ஏக மனதாக எடுக்கும் முடிவே உறுதியானது. ஒருவர் முரண்பட்டாலும் அந்தத் தீர்ப்பு செல்லாது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு அறைக்குள்ளேயே நிகழ்கிறது. ஆனால், அந்த அலுப்புத் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் ராசாமதி. படம் அதன் வசனங்களை நம்பியே பெரிதும் சுழல்கிறது. இடையிடையே சில வசனங்கள் கவர்ந்தாலும், படத்தின் தீவிரத்தன்மையை வலுப்பெறச் செய்ய வசனங்கள் உதவவில்லை. இயக்குநரே வசனங்கள் எழுதாமல், எழுத்தாளர் யாரையேனும் உபயோகப்படுத்தி இருக்கலாமே என்ற ஆதங்கம் எழுகிறது. உதாரணம், உன்னைப்போல் ஒருவன் படத்தில் எழுத்தாளர் இரா.முருகன் ஐ.ஏ.எஸ்.க்கும் ஐ.பி.எஸ்.க்கும் இடையே நிலவும் புகைச்சலை தன் வசங்களில் கொண்டு வந்திருப்பார். அப்படியொரு தொழிற்சார்ந்த பார்வையோடும் அனுபவத்தோடும் ஜூரிகள் பேசிக் கொண்டிருந்தால் படத்தின் சுவாரசியமும் விறுவிறுப்பும் ஒரு படி கூடியிருக்கும் என்பது திண்ணம்.
‘எல்லா நல்லவங்களுக்கும் ஒரு கடந்த காலம் உண்டு; எல்லாக் கெட்டவங்களுக்கும் ஒரு எதிர்காலம் உண்டு’ என்றொரு அழகான வசனம் வரும் படத்தில். ‘அனைவருக்குமே வாழ உரிமையுண்டு’ என்ற மரண தண்டனை எதிர்ப்பிற்கு வலு சேர்க்கும் வசனமாகக் கொள்ளலாம். ஆனாலும் படம் இத்தகைய கருத்துகளை ஆணித்தரமாகத்தான் அணுகியுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது. உதாரணத்திற்கு, ராம்கியை அறிமுகப்படுத்தும்பொழுது, ‘இவர் ஐ.ஏ.எஸ்.-ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் விரும்பி ஐ.பி.எஸ். ஆனவர். இதுவரை 99 என்கவுண்ட்டர்கள் செய்துள்ளார். எப்பொழுது நூறாவது என்கவுண்ட்டர் செய்யலாம் என்று இவரும், விருது தர அரசாங்கமும் காத்துக் கொண்டிருக்கிறது’ என வாய்ஸ்-ஓவரில் அறிமுகப்படுத்துகின்றனர். என்கவுண்ட்டரை வியந்தோதிக் கொண்டே மரண தண்டனைக்கும் எதிராக உள்ளதை படத்தின் ஆதார முரணாகக் கொள்ள வேண்டியுள்ளது.
‘இந்தியாவின் ஃபேமஸான ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் பென்னி குவிக். இவர் அனைவரையும் கலாய்ப்பார்; இவரை யாரும் கலாய்த்ததில்லை’ என கவுண்டமணியை அறிமுகம் செய்கின்றனர். அவர் பக்கத்தில், பசி தாங்காத கோடீஸ்வரி ஊர்வசி அமர்ந்துள்ளார். தீவிரமான விவாதங்கள் போல் ஏதேனும் நடக்கும் வேளையில் கவுண்டமணியிடமும் ஊர்வசியிடமும் வலுகட்டாயமாக கேமிரா வந்துவிட்டுச் செல்கிறது. ஐ.ஏ.எஸ்.ஆக வரும் ரோஸ், ‘தன்னை ஒரு தாய் அன்று மகளாகப் பார்த்தார்; இன்று நான் இவரை என் தாயாகப் பார்க்கிறேன்’ என தன் சொந்த அனுபவத்தோடு ஒப்பிட்டு தனது வாக்கினை அளிக்கிறார். பென்னி குவிக்கும் அப்படியே செய்கிறார்.
சில வசனங்கள் ஃபேஸ்புக் விவாதங்களை ஞாபகப்படுத்துகின்றன. உதாரணமாக, பயந்த சுபாவம் கொண்ட எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும் வரும் மனோஜ் பாரதிராஜா, ‘நீங்க எதுக்கெடுத்தாலும் சிரிச்சுச் சிரிச்சு, உங்க பயத்தை மறைக்க முயல்றீங்க’ என கேமிராவைப் பார்த்து நேரடியாக ஜோக்கர் பட ‘பெட்டிகேஸ்’ பொன்னூஞ்சல் போல் மக்களைக் குற்றம் சாட்டுகிறார். பொன்னூஞ்சலாவது தனது ஆதங்கத்தைக் கொட்டுகிறார் எனக் கொள்ளலாம். ஆனால் இவரோ ஜூரி பேனலில் இருப்பவர். ’குணா’ கமலஹாசன் போல் வட்டமாய் அறையைச் சுற்றி, மக்களிடம் கேள்வி கேட்டுவிட்டு தேவகி அம்மாளின் தூக்குக்கு எதிராக வாக்களிக்கிறார்.
படத்தின் நாயகனாக சாந்தனு. ஜூரி குழுவில், தூக்கு தண்டனை கூடாதென கையை உயர்த்தும் முதல் நபராக வருகிறார். இவர் உலகின் சிறந்த தலைவர்கள் பற்றியெல்லாம் படித்த தத்துவவியலாளராக வருகிறார். ஆனால், நாயகனாக ஏற்க இந்தக் குறைந்தபட்ச தகுதி போதுமா என்ற ஐயத்தில் அவருக்கெனப் பிரத்தியேகமாக ஒரு கற்பனைப் பாட்டு வைத்துள்ளனர். அதில் அவர் துப்பாக்கி எடுத்துக் கொண்டு பலரைச் சுடுகிறார்; காவல்துறையினரை அவர் வாளால் குத்திக் கொள்கிறார். 95 நிமிடப் படத்திலும் பாட்டுகளைக் கொண்டு ஒப்பேற்ற வேண்டிய அவசியம் ஏனெனத் தெரியவில்லை.
12 பேரில் ஒரே ஒரு ஆங்க்ரி மேன் தான். அது கார்கில் போரின் வெற்றிக்குக் காரணமாக இருந்த கர்னலாக வரும் தியாகராஜன். மேசை மீதேறி அவரை அடிக்க ஓடும் ஆங்க்ரி வுமனாக தாமிரபரணி பட நாயகி பானு நடித்துள்ளார். இரண்டு விமான விபத்துகளைத் தனது திறமையால் தவிர்த்த பெண் விமானியாக வருகிறார். மரண தண்டனைக்கு எதிராக விழும் இரண்டாவது வாக்கு இவருடையது என்பதால் படத்தின் நாயகி எனக் கொள்ளலாம்.
கோடீஸ்வரி ஊர்வசி, ஐ.ஏ.எஸ். ஊர்வசி, விமானி பானு, இராணுவத்திற்கே ஃபயர்வால் உருவாக்கித் தரும் சாஃப்ட்வேர் என்ஜினியர் அன்கிட்டா என 12 ஜூரிகளில் நால்வர் பெண். இதில் அன்கிட்டாவைத் தவிர்த்து மற்ற மூவர் புடவை அணிந்து கொண்டிருக்கிறார்கள். சிடுசிடுவென மிடுக்காக அமர்ந்திருக்கும் அன்கிட்டாவிடம், ‘நீ தான் சம்பளம் தர ஆஃபீஸிலேயே வேலை செய்ய மாட்டியே! இங்க வேற சம்பளமே தர மாட்டாங்க. எப்படி வேலை செய்வ?’ என உரண்டைக்கு இழுக்கிறார். விமானி ஏன் சம்பந்தமே இல்லாமல் சாஃப்ட்வேர் இன்ஜினியரைக் கிண்டல் செய்வது போல் பேச வேண்டும்? இதற்கே விமானி பாணு கர்னல் தியாகராஜனிடம், ‘யாரையும் பெர்சனலாக அட்டாக் செய்யக் கூடாது சார்’ என அட்வைஸ் செய்வாங்க. இப்படியான அநாவசியக் காட்சிகளையும், முரண்களையும் வெட்டி எறிந்திருந்தால் மரண தண்டனை பற்றிப் பேசும் மிக முக்கியமான படமாக வந்திருக்கும்.
படம் தொடங்கியதுமே ஒரு அனிமேஷன் பாடல் வருகிறது. ‘இந்தியா எப்படி அடிமையானது?’ எனச் சொல்லும் வைரமுத்துவின் வரிகளும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலும், இசையமைப்பாளர் அவ்ஹத்தின் இசையும் மிக அற்புதமான அனுபவத்தைத் தருகிறது. அனிமேஷனின் தரம் இயக்குநர் மீது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. பெயர் போடும் பொழுது, ஒன்று முதல் பன்னிரெண்டு வரை பகடைகள் உருட்டி கதாபாத்திரங்களின் பெயர்களைப் போடுகிறார். அந்த அனிமேஷன் பாடலிலே, மிக மிக நாசூக்காகத் தன் அரசியல் பார்வையையும் பதிந்துள்ளார் இயக்குநர் A.செந்தில் குமார். இத்தகைய குறியீடுகள் படம் நெடுகேவும் தொடர்ந்திருந்தால் அபாரமாக இருந்திருக்கும். (மாடர்ன் உடை அணிந்திருக்கும் அன்கிட்டா சீண்டப்படுவது கூடக் குறியீடோ என்னவோ?)
வழக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் அப்பாவியான ப்ரித்வியின் தூக்கு தண்டனைக்குத் தானே காரணமென வருந்துவார் காவல்துறை உயரதிகாரியான பாக்கியராஜ். இப்படி, காவல்துறையால் ஜோடிக்கப்படும் கதைகளின் மூலமே நமது பொதுப்புத்தி குற்றவாளிகளை அணுகுகிறது.
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
இப்படிச் சட்டம் தன்னைத் தானே நொந்து கொள்ளவேண்டும் என்ற தேவகி தொடுக்கும் போராட்டம்தான் படத்தின் அடிநாதமே. அதை அவ்வளவு வலிமையாக படம் சித்தரிக்காதது துரதிர்ஷ்டமே! தேவகியாக பூர்ணிமா பாக்கியராஜும், அவரது மகனாக பிரித்வி பாண்டியராஜனும் நடித்துளனர்.
‘அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் உரிமையை ஒவ்வொருவருக்கும் தருவதே சுதந்திரம்’ என்ற வரியுடன் படம் தொடங்குவது சிறப்பு. அதன் நீட்சியாக, ‘எது வேண்டுமானாலும் இங்கு இலவசமாகக் கிடைக்கும். ஆனால் பணம் இருந்தால்தான் நீதி கிடைக்கும்’ என்ற சாந்தனுவின் வசனத்தைப் பொருத்திப் பார்த்தால் படம் பேசும் அரசியலின் தீவிரத்தன்மையை உணரலாம். குப்பத்தில் பிறந்து கோயில் அறங்காவலராக உயரும் நமோ நாராயண் முதலில், தேவகிக்கு மரண தண்டனை அவசியமென வாக்களிப்பார். சிறையில் இருக்கும் பெரும்பான்மையானோர் ஏழைகள்தானே என்ற சாந்தனுவின் கேள்விக்குப் பின், தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார் நமோ நாராயண்.
வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கையை, பெயரளவிலேனும், அளிக்குமாறு படம் ஆரோக்கியமாக முடிவது மகிழ்ச்சி.