Shadow

விசாரணை விமர்சனம்

Visaranai avimarsanam

ஒரே ஓர் அட்டகாசமான கதை போதும் – நீங்களும் பயங்கரவாதி தான். கதை கூட வேண்டாம். அதிகார வர்க்கம் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியெனச் சுலபமாக அடையாளப்படுத்தும். அப்படி அதிகார வர்க்கத்தால் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படும் வீடற்ற பிளாட்ஃபாரவாசிகள் (பூங்காவாசிகள்) நால்வர் பற்றிய படமிது.

நிரபராதிகளான அந்நால்வரும் முதலில் ஆந்திரக் காவல்துறையினரிடம், பின் தமிழகக் காவல்துறையினரிடம் சிக்கிப் சின்னாபின்னமாகின்றனர். அதிகாரம் – ஜாதி, இன, மத, மொழி, “வர்க்கம்” என எந்த வேற்றுமையும் பாவிக்காது. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும்; யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்கும்.

தன் வேலையைத் தக்க வைக்க பாடுபட்டு சித்ரவதை செய்யும் இன்ஸ்பெக்டர், பதவிக்காக தனது ஆடிட்டரை காவு வாங்கும் அரசியல்வாதி, குட்டு வெளிபட்டு விடுமென சாமான்யரைக் கொல்லத் துடிக்கும் உதவி ஆணையரென அதிகாரம் அதனதன் அளவில் சக மனிதனை மனிதனாகப் பார்க்காத குரூரத்தைக் கொண்டுள்ளது.

சந்திரகுமாரின் ‘லாக்கப்’ நாவலைத் தழுவி திரைக்கதை அமைத்திருக்கும் வெற்றிமாறன், சந்திரகுமாரின் மனக்கிடக்கையை உலகெங்குமுள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒலிக்க விட்டுள்ளார். தனது நாவலின் இரண்டாம் பதிப்பில், போலிஸ் செய்யும் என்கவுண்ட்டர்களைப் பற்றிக் காட்டமாகவும் காத்திரமாகவும் கேள்வியெழுப்பி இருப்பார். ‘குற்றவாளிகளே ஆனாலும் கொல்லும் அதிகாரத்தை போலிஸ்க்கு யார் வழங்கியது?’ என்பதே அக்கேள்வி. இந்தக் கேள்வி படத்தில் இருந்தாலும், நிரபராதிகளான சாமானியர்கள் என்கவுண்ட்டரால் பாதிக்கப்படுவதே பிரதானமாய்ச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி ஒப்பாரும் மிக்காருமின்றி ஏற்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் கச்சிதமாய்ப் பொருந்துவதோடு, திரையில் உடன் தோன்றும் நடிகர்களையும் பொலிவிழக்கச் செய்து புறந்தள்ளி விடுவார். அவரது குரல் அதற்குத் துணை புரியும். ஆனால், ஆடிட்டராக நடித்திருக்கும் கிஷோர் சமுத்திரக்கனியையே மிகச் சுலபமாக முந்தி விடுகிறார். ஒரு புன்னகை, ஒரு பார்வை என அனைத்திலும் ஓர் அர்த்தம் சேர்க்கிறார் கிஷோர். சிற்சில காட்சிகளிலே வந்தாலும் மனதை விட்டு நீங்காத கவிதை போல் மனதில் பதிகிறார் ஆனந்தி. தினேஷும் முருகதாஸும், அஃப்ஸல் எனும் பாத்திரத்தில் வரும் அவர்களின் நண்பனும் வாழ்ந்துள்ளனர். ‘நீங்க சொன்னா என்ன வேணா செய்வோம் சார்’ எனச் சொல்லும் பொழுது தினேஷின் கண்களில் காட்டும் நன்றியும் பணிவும் அட்டகாசம்.

கொடூரமான கொலைக்காரனின் மனநிலையைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், நைச்சியமாகப் பேசி கழுத்தறுக்கும் ஆசாமிகள் குலை நடுக்கம் ஏற்படுத்தி விடுவார்கள். ‘போகும் உயிருக்கு ஒரு அர்த்தம் வேணும்’ என என்கவுண்ட்டருக்கு இலக்கணம் வகுக்கும் ராமதாஸ் அசால்ட்டாய் அசரடிக்கிறார்.

‘லாக்கப்’ நாவலை விட, படம் அரசியலை இன்னும் நெருக்கத்தில் பேசுகிறது. நாவல், ஒரு தனி மனிதனின் சிறை அனுபவங்களின் வாயிலாக அதிகாரத்தின் கோர முகத்தைச் சுட்டிக் காட்டுகிறது ( டாக்குமெண்ட்ரி ஃபீல் கொடுத்து விடும்). படமோ, நேரடியாக அதிகார துஷ்பிரயோகத்துக்குக் காரணமாக இருக்கும் பணத்தாசையையும் சந்தர்ப்பவாதத்தையும் பொட்டில் அடித்தாற் போல் சொல்கிறது. தன்னைக் காத்துக் கொள்ள சோ-கால்ட் ‘சிஸ்டம்’ எப்படி இயங்குகிறது என்பதையும் வெற்றிமாறன் அழகாகச் சொல்லியுள்ளார். எழுந்து போகவிருந்த சமுத்திரக்கனியை அமர வைக்கிறது சிஸ்டம். இல்லை.. வீழ்த்துகிறது என்பதே சரியான வார்த்தை.

கிட்டத்தட்ட இப்படத்தின் இரண்டாம் பாதி தான் தற்காப்பு படத்தின் இரண்டாம் பாதியும். ‘முதலில் உன்னை வச்சு என்னை முடிச்சாங்க; அடுத்து வேறொருவனை வச்சு உன்னை முடிப்பாங்க’ என்ற பொருள்படும் வசனம் இரண்டு படத்திலும் உண்டு. க்ளைமேக்ஸும் ஒரே போல்தான். இப்படத்தில், ‘சிஸ்டம்’ எப்படித் தன்னைத் தற்காத்துக் கொள்ள தயவு தாட்சண்யமின்றிச் சுழலுமெனச் சொல்லியுள்ளார் வெற்றிமாறன்; அப்படத்திலோ சிஸ்டத்தைத் தனக்குச் சாதகமாகச் சுழற்றும் “சூத்ரதாரி” யாரென்பதைப் பற்றிச் சொல்லியிருப்பார் இயக்குநர் ரவி. ‘குற்றவாளியே ஆனாலும் உயிரை எடுக்கும் உரிமை “அரசாங்கத்துக்கும்” இல்லை’ என்பதை தற்காப்பு படத்தில் அழுத்தம் திருத்தமாகப் பதிந்திருப்பார்கள்.

“என்னங்க சுலபமா முடிய வேண்டியதை இப்படி இழுத்துட்டீங்க?”

“யோவ்.. நானென்ன உன்னை மாதிரி இதே பொழப்பாகவா அலையுறேன்.”

என்கவுண்ட்டர் குறித்து இரண்டு போலிஸ்காரர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை இது. ‘இதே பொழுப்பாக’ உள்ளவரின் செய் நேர்த்தியும், குற்றவுணர்வின்மையும் கொலையாளிகளின் மனோபாவத்திற்கு சற்றும் குறைந்ததில்லை என்கிறார் சந்திரகுமார்.

படம் இன்னொரு கோணத்தையும் முன் வைக்கிறது. ‘லட்டு தீசிகோ’ எனும் ஆந்திர இன்ஸ்பெக்டருக்கு உயரதிகாரிகளிடமிருந்து எழும் அவமதிப்பும் நெருக்கடியும் கவனிக்கப்பட வேண்டியது. அதே ஸ்டேஷனில், மென்னுணர்வுடைய ஒரு பெண் காவல் அதிகாரி உண்டு. ‘உண்மையை வர வைக்க இதான் வழிமுறைன்னு போகப் போகத் தெரிஞ்சுப்பா’ எனப் போதிக்கப்படுகிறார். ஒருவேளை, அக்கொள்ளை வழக்கை முடிக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு நேர்ந்திருந்தால்? (உங்களுக்கு DSP விஷ்ணுப்ரியா இப்பொழுது நினைவுக்கு வந்தாக வேண்டும்). நிர்பந்தம் தாளாமல், பாவம் அந்தக் காவல் நிலையமே கெஞ்சாத குறையாக தண்ட, தான, பேத, சாம என நான்கு வழிகளையும் சாமான்யர்கள் மீது பிரயோகித்துப் பார்க்கிறது.

இரவுக் காட்சிகள் படத்தில் அதிகம். எஸ்.ராமலிங்கத்தின் ஒளிப்பதிவில் படத்தின் ‘இருண்மை’ டோன் படம் நெடுகே திகட்டாமல் வருகிறது. ‘படப்பிடிப்பில் தொலைந்த என் படங்களை எனக்குக் கண்டுபிடித்துக் கொடுக்கும் கிஷோருக்கு நன்றி’ என அற்புதமான பாராட்டை வெற்றிமாறனே கிரெடிட்டில் போடுகிறார்.

நாவலொன்றைப் படமாக்கியதற்காகவும், படத்தின் டீட்டெயிலிங்கிற்கும் வெற்றிமாறனுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.