பிரதான கதாபாத்திரங்களை நாயகன், வில்லன் என்ற இரண்டுக்குள் தமிழ்த் திரைப்படம் அடக்கி விடும் (மிக அரிதினும் அரிதாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதால் கணக்கில் எடுக்கவில்லை). இந்த இரண்டையும் கூட இன்னும் சுருக்கி நல்லவனுக்கம் கெட்டவனுக்குமான போராட்டம் என்ற ஒற்றை பரிமானத்தை அடையலாம். ஆனால் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு மெல்லிய முக்கியத்துவத்தையாவது கொடுத்து விடுமளவு திரைக்கதை கொண்ட படம் மிக அபூர்வம். அப்படியொரு அபூர்வம் தான் ‘விடியும் முன்’ திரைப்படம்.
விலைமகளான ரேகாவையும், சிறுமி நந்தினியையும் ஒன்றுக்கும் மேற்பட்ட கும்பல் தேடி அலைகிறது. ஏன் எதற்காக என்பது தான் படத்தின் கதை.
உங்களுக்கு வினோத் கிஷனைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரது குத்திட்ட பார்வை நமக்கு நன்றாக அறிமுகமானதே! ‘நந்தா’ படத்தில் தன் தந்தையை அடித்துக் கொன்றுவிடும் அந்த சிறுவன் தான் இப்படத்தின் பிரதான கதாபாத்திரம். கடைசிக் காட்சி தவிர, ‘ம்’ என்பது தான் இவருக்கு வசனமே! நந்தா படத்தினைப் போன்றே இப்படத்திலும் இவரது பால்யம் அமைந்து விடுகிறது. வளர்ந்த பின்னரும் நந்தா படத்து சூர்யாவை ஒத்தே இருக்கிறது இவர் செயல்பாடுகளும்.
பணத்தை எப்படியும் சம்பாதித்து விடவேண்டுமென்று நினைப்பவர்கள் தான் படத்தின் அனைத்துக் கதாபாத்திரங்களும். அதில் சிலருக்கு கொஞ்சம் மனிதாபிமானம் எட்டிப் பார்க்கிறது. அப்படி ஒருவர் தான் விலைமகளான ரேகா. பணத்திற்காக தான் செய்யத் துணிந்த பாதகத்திற்காக, குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி பரிகாரம் தேட நினைக்கிறாள். அந்த மனிதாபிமானம் அவளை நாயகியாகப் பரிணமிக்க வைக்கிறது. அந்தப் பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார் பூஜா உமாஷங்கர்.
லங்கனாக ஜான் விஜய். சின்ன சந்தர்ப்பம் கிடைத்தாலும் பணம் பார்த்துவிட நினைப்பவர். லங்கனின் மூளை எப்பவும் குதர்க்கமாகவே வேலை செய்கிறது. மற்றவர்களின் பலஹீனங்களை நோட்டமிட்டு, அதைக் கொண்டு மிரட்டி சம்பாதிப்பவர். படத்தின் சுவாரசியத்திற்கு முழுமுதல் காரணமாகிறார்.
வீட்டை விட்டு ஓடி வரும் சிறுவர்கள் (குறிப்பாகப சிறுமிகள்) எப்படிப் பாதிக்கப்படுகின்றனர் என்பதை இப்படம் பதிகிறது. இந்தப் படத்தின் அடி சரடாக சிறார்கள் மீது செலுத்தப்படும் களவியல் வன்முறை உள்ளது. அவ்வன்முறைக்கு சாட்சியாக இருக்கும் சிறுவன் வளர்ந்ததும், நடைப்பிணமாக இருப்பவரையும் விட்டு வைக்காமல் கொலை செய்கிறான். வழக்கமான தமிழ் சினிமா போல், மரணத்தையே தீர்வாக முன் வைக்கிறது. இந்த ஒன்றைத் தவிர, படம் முற்றிலும் புதிய அனுபவத்தைத் தருகிறது. நாம் அனைவரும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மேல் எத்தகைய பயம் கொண்டுள்ளோம் என்பதை தேவநாயகியாக நடித்த லஷ்மி ராமகிருஷ்ணனின் கதாபாத்திரம் தெரிவிக்கிறது. தன்னை அடிக்கும் பொழுது உண்மையைச் சொல்லாத லஷ்மி, மகளிடம் தனது கடந்த காலத்தைப் பற்றி சொல்லப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் உண்மையைச் சொல்லி விடுகிறார். குடும்பத்திற்குள் எனினும் சரி, புனித பிம்பங்கள் நம் அனைவருக்கும் தேவைப்படுகிறது. ஒருவரின் ‘இன்றைய’ புனிதத்தை ஏற்றுக்கொள்ள, சமூகம் அவரது கடந்த காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. திருடன் என்றும் திருடன் தான்; பயங்கரவாதி என்றும் பயங்கரவாதி தான் என்ற முன் தீர்மானங்களில் இருந்து சமூகம் எப்பொழுதும் பின்வாங்கிக் கொள்ளாது. ஒன்று அவர்களைக் கொன்று விடவேண்டும் அல்லது ஒதுக்கி வைத்து விடவேண்டும். லங்கனின் வேலையே மற்றவர்களின் புனித பிம்பங்களை காலி செய்து விடுவேன் எனப் பயமுறுத்தி சம்பாதிப்பது தான். ஆண்களுக்கே சமூகத்தில் இந்த கதி என்றால் பெண்களுக்கு?
பாலாஜி கே.குமாரின் முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயமாகப் பிரமாதப்படுத்தியிருக்கார் (London to Brighton என்ற படத்தை அப்படியே நினைவுப்படுத்தினாலும்). சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஈர்க்கிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை படத்தோடு ஒன்ற உதவுகிறது.
[…] விடியும் முன் படத்தினை இயக்கிய பாலாஜி K. குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கொலை. […]