
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் ஒருவர் நியூயார்க் நகரை தாலிபான் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவது தான் படத்தின் கதை.

NATO தாக்குதலுக்கு உள்ளாகி தவிடுபொடியான ஆஃப்கானிஸ்தான் கிராமமொன்றில் உயிரெஞ்சும் மூதாட்டி, “முன்னால வால் முளைத்த குரங்குகளா” என தாலிபான் பயங்கரவாதிகளைப் பார்த்து வசைபாடுகிறார். முன்னால் வால் முளைத்த குரங்குகளாலான ஆண்களால் தான் அனைத்துப் போர்களுமே தொடங்குகிறது. தொடர்கிறது. அதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்கள் தான். பலவீனமான அந்த மூதாட்டியின் குரல் ஆணாதிக்கத்தையும் அதன் விளைவாக எழும் காட்டுமிராண்டித்தனத்தையும் கடுமையாக விமர்சிக்கிறது. ‘அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள்’ என்றொரு வசனம் வருகிறது. அந்த அபத்தமான வசனம் பேசி முடிக்கப்படும் முன், பெண்களும் சிறுவர்களும் இருக்கும் கட்டிடம் அமெரிக்க விமானப்படையால் சுக்கல் ஆயிரமாக வெடித்து சிதறடிக்கப்படும். இந்த அமெரிக்க இராணுவத்தினரே இப்படித் தான்!!
சில காட்சிகளும், குறியீடுகளும் பழைமைவாதத்தில் ஊறியவர்களை சாடும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது. படிக்க விரும்பும் நாசர் என்னும் சிறுவனை சமாதானம் செய்ய ஊஞ்சலில் அமர வைத்து ஊஞ்சலை ஆட்டுவார் நாயகன். ஆனால், “நான் ஒன்றும் சிறுவன் இல்லை” என இறங்கி விடுகிறான் நாசர். அவனை விட வயதில் மூத்த மம்மூ என்னும் இளம் ஜிகாத் போராளி ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டு நாயகனிடம் ஊஞ்சலை ஆட்டச் சொல்கிறான். படிக்க விரும்பும் நாசர் தானே சிந்திக்க விரும்புகிறான் என்பதை அவன் ஊஞ்சலில் இருந்து இறங்குவது குறிக்கிறது. படிப்பு வாசனை இல்லாத மம்மூவோ பழைமைவாதிகளின் பேச்சை அப்படியே கேட்டு நடப்பவன். அவனால் சிந்திக்கவோ, தானாகவே ஊஞ்சலை இயக்கிக் கொள்ளவோ இயலாது. அதனால் தான் உடம்பில் வெடிகுண்டுகளைக் கட்டி, பீரங்கியின் அடியில் விழ அவனைச் சுலபமாக பயிற்றுவித்து விடுகின்றனர். கையில் துப்பாக்கியுடன் இறந்து கிடக்கும் சிறுவனைப் பார்த்ததும் நாயகன் கலங்குவார். ஆனால் அப்பொழுதும் மம்மூவின் பால் மனம் மாறாத முகம் எந்தச் சலனமும் காட்டாது. துரோகி என முத்திரை குத்தப்படும் ஒருவருக்கு தாலிபான்கள் தூக்கு தண்டனையை விதிப்பவர்கள். அந்த சமயம் வானிலொரு ஜெட் விமானம் பறக்கும். நாயகன் அந்த விமானத்தைப் பார்த்து விட்டு தூக்கு தண்டனை நிறைவேற்றுப்படுவதை ஆற்றாமையுடன் பார்ப்பார். உலகம் எவ்வளவோ மாற்றங்களைக் கண்டாலும்.. பழைமைவாதிகளின் ஆயுதம் மாறியதே தவிர அவர்களின் மூட நம்பிக்கைகளும் மட சம்பிரதாயங்களும் மாறவில்லையே என கண் கலங்குவார் படித்த முஸ்லிமாக வரும் நாயகன்.

ஆஃப்கானிஸ்தான் போகாமலே அத்தகைய தாக்ககத்தைக் கொடுக்க காரணமாக இருந்தவர் கலை இயக்குநர் இளையராஜா. அத்தனை அசத்தலாய் ‘கலை’ வேலைபாடுகள் செய்துள்ளார். அதற்கு ஒத்திசைக்க எத்தனை வரையியல் கலைஞர்கள் பின்புலமாக இயங்கியுள்ளனர் என நினைக்க மலைப்பாக உள்ளது. சனு வர்கீசின் ஒளிப்பதிவும், ஷங்கர்-எக்ஸான்-லாய்-யின் இசையும் படத்தின் கூடுதல் பலம். ஆரோ 3டி தொழில்நுட்பம், காட்சிக்கான சூழல் இசையை நம்மை சுற்றி அலைய விடுகிறது. ஒன்றிரண்டு காட்சிகளில் மனித உடலில் இருந்து பீச்சியடிக்கும் குருதி குளம் போல் தேங்குவதாக வருகிறது. ஆக படத்திற்கு கண்டிப்பாக ஏ சான்றிதழ் அளித்திருக்க வேண்டும்.

இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் “அமைதி” என்பதாகும். அதை உணர்த்தும் வகையில் படம் நெடுக்க புறாக்கள் பறந்த வண்ணம் உள்ளன. பயங்கரவாதிகள் அமைதிக்கு பங்கம் விளைவிக்க புறாக்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் இறைவனையும் சக மனிதர்களையும் நேசிக்கும் ‘விசாம் அகமது காஷ்மீரி’ என்னும் இஸ்லாமிய நாயகன் தனது சகலகலா சாகசத்தால் அப்பாவி மக்களை காப்பாற்றி “அமைதி”யை நிலை நிறுத்தி விடுகிறார்.