Shadow

வை.மு. கோதைநாயகி அம்மாள்

மாயலோகத்தில்..
வை.மு.கோதைநாயகி அம்மாள்

சென்னை திருவல்லிக்கேணியில் 1901 ஆம் ஆண்டு பிறந்தவர் வை.மு. கோதைநாயகி அம்மாள். இவரது குடும்பம் ஒரு ஆசாரமான வைஷ்ணவ குடும்பமாகும். தனது ஆறாவது வயதிலேயே திருமணமான இவர் பள்ளி சென்று முறையாகக் கல்வி பயின்றதே கிடையாது. சுய முயற்சியில் பின்னாட்களில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றார். ஆரம்பத்தல் வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே ஆர் ரங்கராஜு போன்று துப்பறியும் நாவல்களே எழுதி வந்த இவர், நாளடைவில் குடும்பப் பாங்கான நாவல்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார். இவரது முதல் முயற்சி ஒரு நாடகம். ‘இந்திர மோகனா’ என்று பெயர். தமிழ் எழுதுவதற்கு முறையான தேர்ச்சி அப்போது பெற்றிருக்காத அந்நேரம், வாய்மொழியாக இவர் கூற அவரது தோழி ஒருவர் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

வை.மு. கோதைநாயகி அம்மாளின் முதல் நாவல் ‘வைதேகி’. இந்நூலை பிரபல துப்பறியும் நூலாசிரியர் வடுவூர் துரைசாமி ஐயங்கார் உதவியுடன் வெளியிட்டிருக்கிறார். இவர் ஒரு காந்தீய வாதியாகவும் திகழ்ந்தார். நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற அனுபவமும் இவருக்கு உண்டு. கள்ளுக்கடை மறியல், அந்நிய துணி பகிஷ்கரிப்புப் போராட்டங்களில் கலந்து கொண்ட ஒரு சிறந்த விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்திருக்கிறார். இவரது சிறந்த நாடக நூல்களாக அருணோதயம், வத்சகுமார், தயாநிதி போன்றவை அக்காலத்தில் மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறது.

இவருக்கு சங்கீதத்திலும் நல்ல ஈடுபாடு இருந்திருக்கிறது. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த பிரபல கர்நாடக இசை மேதை டி.கே.பட்டம்மாள் இவருக்கு நெருங்கிய தோழி. மேலும் இவர் தெலுங்கு, சமஸ்கிருதம் மொழிகளில் சில சாகித்தியங்களையும் இயற்றியுள்ளார்.

1925இல் ‘ஜெகன் மோகினி’ என்கிற பத்திரிகையை வாங்கி, அதைத் தொடர்ந்து 35 வருடங்கள் ஆசிரியராகவும் இருந்து நடத்தி வந்த செய்தி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. வை.மு.கோதைநாயகி அம்மாள் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்த காரணத்தினால், காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் நெருங்கிய அறிமுகமுடையவர்களாக இருந்தார்கள். காமராஜர், ராஜாஜி, சத்யமூர்த்தி போன்றோரின் நட்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது.

இவரது ‘ராஜமோகன்’, ‘அனாதைப்பெண்’ நாவல்கள் முறையே 1937 மற்றும் 1938இல் திரைப்படமாகத் தயாரக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. ராஜமோகன் திரைப்படத்திற்கு இவரே வசனமும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1966இல் எம்.ஆர்.ராதா, பத்மினி நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘சித்தி’ என்கிற திரைப்படத்தின் கதை இவரது ‘தயாநிதி’ என்கிற நாவல். இவர் 1960இல் தனது 59 வயதில் சென்னையில் காலமானார்.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்