தினம் ஓர் அத்தியாயமென, தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம் எழுதும் கற்பனைக்கெட்டாத மகத்தான இலக்கை வகுத்துக் கொண்டு இந்தாண்டின் முதல் நாளிலிருந்து எழுதி வருகிறார் ஜெயமோகன். “வெண்முரசு” என பெயரிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, சுமார் 35000 பக்கங்களுடன் 40 நாவல்களாக வருமெனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடங்கிய 10 மாதங்களுக்குள், முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என 4000 பக்கங்கள் கொண்ட 4 நாவல்களை எழுதிவிட்டார். கமல் பாணியில் சொல்வதெனில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித உழைப்பே அல்ல; அதையும் தாண்டி அசுரத்தனமானது.
அதே பிரமிப்புத்தான் பி.ஏ.கிருஷ்ணனுக்கும். “என் புருஷனும் கோர்ட்க்குப் போறார்னு சொல்றதுபோல, என் மனைவி என்னை எழுத்தாளர்னு நினைச்சிட்டிருக்கா. ஆனா ஒருநாளைக்கு 500 வார்த்தைகள் எழுதுவதற்குள்ளாகவே மூச்சு முட்டித் திணற வேண்டியிருக்கு. ஆனா ஜெயமோகனோ தினம் மகாபாரதம் எழுதுறார், கட்டுரைகள் எழுதுகிறார், வாசகர் கடிதத்துக்கு பதில் போடுகிறார், இணைய வெட்டிச் சண்டைகளுக்கு பதில் சொல்றார். எப்படி இவரால் இவ்ளோ எழுத முடிகிறது என ஆச்சரியமாக இருக்கு.
மகாபாரதம், வெவ்வேறு காலகட்டத்தில் பலரால் சிறு சிறு பகுதிகளாக கையாளப்பட்டுள்ளது. காளிதாசனின் சாகுந்தலம் அப்படிப்பட்ட ஒன்றே! இதேபோன்று மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு காவியம் படைத்தவர்கள் அனைவரும், வியாசன் பருந்தாக பறந்த வானில் தங்களை ஈக்களாக உணர்ந்தனர். ஆனால் ஜெயமோகனோ, தானுமொரு பருந்தாக பறக்க நினைக்கின்றார். அவருக்கு வாழ்த்துகள்” என்றார் பி.ஏ.கிருஷ்ணன்.
“நானும் ஜெயமோகனும் ஒரே பாடச்சாலையின் மாணவர்கள். சுந்தர ராமசாமி வீட்டில் அறிமுகமான பொழுது அவர் எழுத ஆரம்பிக்கவில்லை. பின் நான் வடநாடு போய் திரும்பும்போது, ரப்பர் எழுதியிருந்தார். அன்றிலிருந்து அவரெழுதும் ஒரு வரி கூட படிக்காமல் விட்டதில்லை. அருண்மொழிக்கு அடுத்தபடியாக எனச் சொல்லிக் கொள்ளலாம்.
கம்பராமாயணத்தில் உள்ள மொத்த செய்யுள்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேல். இதை அனைத்தையும் கம்பர் ஒருவரே எழுதினாரா என அதை வாசிக்காமலே கேள்வி எழுப்புபவர்கள் உள்ளனர். அப்படி இன்னும் 10 ஆண்டுகளில், ஜெயமோகன் என்பது ஒருவரல்ல பலர் இருந்தனர் எனப் பேச ஆரம்பிப்பார்கள். ஜெயமோகனுக்கு இது சாத்தியம் ஆகிறது என்றால் கம்பருக்கும் அது சாத்தியமாகி இருக்கும் என இப்பொழுது நிரூபணமாகிறது.
விஷ்ணுபுர வட்டத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன், வெண்முரசு முடிந்ததும் அவர் பயன்படுத்தி இருக்கும் சொற்களை அகராதியாகத் தொகுங்கள். ஒரு வார்த்தையாவது மீண்டும் ரிப்பீட் ஆகியிருக்குமா எனப் பார்க்கிறேன். நானும் இதே துறையில் மொழி சார்ந்து இயங்குகிறேன் என்பதால் நான் பெருமையாகக் கூறுகிறேன், இது என் தாய் மொழியில் எழுதப்படும் மிக உயரிய படைப்பு. ஜெயமோகன் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதை மிகப் பெருமையாகக் கருதவேண்டும்” என்றார் நாஞ்சில் நாடன். அவர் பேச்சின் இடையில், ‘தமிழ் இலக்கியச் சூழலில் வாசகனை நம்பலாம். சக படைப்பாளியை நம்ப இயலாது’ என்று குறிப்பிட்டார். அதன் பொருள் என்னவாக இருக்கும்?
நீலம் தொகுப்பை முழுவதும் படித்துவிட்டு வந்திருந்த பிரபஞ்சன், அதிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டி, “இது எந்த பாரதத்திலும் இல்லை. இது போன்ற புது சிந்தனைகள்தான் எழுத்தாளனுக்குத் தேவை. ஜெயமோகனின் இந்த முயற்சி எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அவரால் 3 லட்சம் பக்கங்கள்கூட எழுதமுடியும்” என்றார்.
விழா தொடங்கும் வேளையில் ஒருங்கிணைப்பாளரில் ஒருவர், அசோகமித்ரனின் கையைப் பிடித்தவாறு அழைத்து வந்து இருக்கையில் அமரவைத்தார். அவரின் கையிலிருந்த தடியை வாங்கிய ஒருங்கிணைப்பாளரிடம் புன்னகைத்தபடியே தர மறுத்துவிட்டார். அதன் பின் அவர் விழா முழுவதும், ஒட்டும் ஒட்டாத மனநிலையுடன் வயோதிகச் சிரமங்களை வெளிக்காட்டிக் கொள்ளாதவாறு அமர்ந்திருந்தார். விழா தொகுப்பாளர், விஷ்ணுபுர வட்டத்தைச் சேர்ந்த தொகுப்பாளர் ராஜகோபாலன், ‘எங்கள் எழுத்தாளர் தங்கள் எழுத்தாளரெனச் சொல்லிக் கொள்ளும் அசோகமித்ரன்’ எனக் கூறிப் பேச அழைத்தார். வலதுபக்கம் அமர்ந்திருந்த கமல் அவருக்கு தடி எடுத்துக் கொடுத்தும், அதை வாங்க மறுத்துவிட்டுப் பேச வந்தார். நின்று கொண்டுதான் பேசவேண்டும் என்ற விதியை அவருக்கு மட்டுமாவது விழா ஒருங்கிணைப்பாளர்கள் தவிர்த்திருக்கலாம்.
அசோகமித்திரன் தனது பேட்டியொன்றில் முன்பே கூறியிருந்ததுபோல், மகாபாரதப் பாத்திரங்களைக் கொண்டு தான் கதை எழுதியதில்லை என்றார். “பத்தாண்டுகளுக்கு முன் இது சாத்தியமாகி இருக்குமா? தினம் கையால் எழுதுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. தொழில்நுட்பம்தான் இந்த முயற்சிக்கு உறுதுணையாக உள்ளது. மற்றவர்கள்போல் எந்தப் பட்டமும் ஜெயமோகனுக்கு அளிக்கமாட்டேன். அவர் முதலில் எழுதி முடிக்கட்டும். இந்தப் பெரிய முயற்சிக்கு வாழ்த்துகள்” என்றார்.
பி.ஏ.கிருஷ்ணனும் சரி, அசோகமித்ரனும் சரி, ‘எதற்கு சிரஞ்சீவியான வியாசனின் மகாபாரதத்தைப் போய் எழுதுவது? அதுவும் அவர் எல்லா யுகத்திலும் வாழ்பவராச்சே! ஆனால் ஜெயமோகனின் இந்த பிரம்மாண்ட முயற்சிக்கு வாழ்த்துகள்’ என்பதே அவர்களின் மனநிலையாக இருந்தது. இருவரின் மனநிலையையும் அறிந்தே விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். விழாவின் சிறப்பம்சமும் அதுவே!
விழாவில் மகாபாரதச் சொற்பொழிவாளர்களும் கூத்துக்கலைஞர்களும், ஓவியர்கள் மணிகண்டனும் ஷண்முகவடிவேலும், கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை தமிழில் மொழிபெயர்த்து வரும் அருட்செல்வப்பேரரசனும் கெளரவிக்கப்பட்டனர்.
அவையினரைப் பார்த்து, “நீங்க விஷ்ணுபுரம். நான் சிவபுரம்” என்று தொடங்கினார் இளையராஜா. “நான் என் துறையில் சாதிக்க முடியாததை, கலைஞானி கமல் தன் துறையில் சாதிக்க முடியாததை ஜெயமோகன் தன் துறையில் சாதித்துள்ளார்” எனப் புகழ்ந்தார் இசைஞானி.
“கமல் பெற்ற விருதுகள் முழுவதையும் பட்டியலிட எங்கள் எழுத்தாளர் ஜெயமோகன்தான் வரவேண்டும்” என தொகுப்பாளர் ராஜகோபாலன் சொன்னதும், இறுக்கமாக அமர்ந்திருந்த அசோகமித்ரன் சிரித்துவிட்டார். மகாபாரதக் கலைஞர்களைக் கெளரவிக்க ஒவ்வொரு முறையும் அவரையும் எழுப்பியதால், ‘ஏன்டாப்பா இப்படிப் படுத்துறீங்க?’ என்று கேட்குமளவு சோர்வுற்றிருந்தார் அசோகமித்திரன்.
தொகுப்பாளர் முறையாக அழைத்து முடிக்கும் முன்பே கமல் பேச வந்துவிட்டார். “நீங்க (பார்வையாளர்கள்) விஷ்ணுபுரம். அவர் (இளையராஜா) சிவபுரம். நான் ஒருபுரம். எந்த கலர் சட்டை போட்டாலும் மகாபாரதம் சொந்தமாகிவிடும்” என தனது இறை நம்பிக்கையின்மையை மேடையில் வழக்கம்போல் கோடிட்டுக் காட்ட மறக்கவில்லை கமல். “பொதுவாக மேடையில் வாழ்த்த வெயதில்லை எனத் தொடங்குவார்கள். ஆனால் இங்கே வாழ்த்த எனக்கு வயதுண்டு. ஏனெனில் வயதுக்கு மீறிய செயலை ஜெயமோகன் செய்து வருகிறார்.
ஜெயமோகனை யாரென்று தெரியாது. கொற்றவை என்ற நாவலைப் படித்து பித்துப் பிடித்து அலைந்தேன். ஒன்று இவரைப்போல் நான் நன்றாக எழுத வேண்டும். இல்லையென்றாறால் அடித்துக் கொன்றுவிட வேண்டுமென்று தோன்றியது. அவர் நல்ல எழுத்தாளர் என்பதால், இப்படி புறம் பேசுவதையும் அவரிடம் நேரடியாகச் சொல்லிவிடுவேன்” என்ற கமலுக்கு, இளையராஜா ‘என்னிடமும்தான் சொன்னாய்’ என சைகை காண்பித்தார்.
அதைக் கவனித்த கமல், “ஆமாம் இதையே இளையராஜாவிடமும் சொல்லியுள்ளேன். இவர்கள் இருவரும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது கலையால். அப்படித்தான் மேடையில் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரையும் தெரியும்.
கொற்றவையின் முதல் 10 வரிகள் படித்ததும், தலை கிறுகிறு எனச் சுற்றியது. கோபம் வந்தது. எனக்கும் எழுதணும்னு ஆசை வந்தது. இதுதான் எழுத்தாளனின் முதல் கடமை என நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
காந்தி எத்தனை பக்கம் எழுதியுள்ளார் என அவரிடம் கேட்டேன். அந்தக் கணக்கெல்லாம் அவருக்குத் தெரியும். நாங்க இருவரும் காந்திக்கு விசிலடிச்சான் குஞ்சுகள்தான். 60000 பப்ளிஷ்டு பேஜஸ் என்றார். இப்போ ஏதோ லெட்டர் கிடைச்சிருக்கு, மொத்தம் 80000 பக்கங்கள்னு சொல்றாங்க. அதையும் மிஞ்ச வேண்டும் என்ற நோக்கத்துடன் புறப்பட்டிருக்கார். அது மரியாதையாக இருக்காது என்றெல்லாம் ஒதுங்கி நிற்காமல், தன் கடமை எழுதுவது என்றிருக்கிறார். இந்த முயற்சி அனைவருக்கும் தேவை. இளையராஜாவே ஒரு வருடத்துக்கு 50 படங்களுக்கு இசையமைக்கும் வெறி பிடித்தவர். அவரையே, நம்ம உழைப்புப் பத்தலையோன்னு சந்தேகப்பட வச்சுட்டார் ஜெயமோகன்.
பல்லாயிரம் வருடங்களாகப் பேசப்பட்டு வரும் கதை இது என்பதில் எனக்கும் கர்வமும் பெருமையும் ஏற்படுகிறது. மூவாயிரம் வருட பழமையான கதை என்றால், ரெண்டாயிரம் வருடங்களான பைபலுக்கும் முற்பட்டது. மதம் தேவையோ இல்லை, என்னைப் பொறுத்தவரை அனைவருக்கும் கதை தேவை. அதுவும் அது இசை வடிவத்தில் மிகத் தேவை என்பதால்தான் வேதங்களுக்கே சுருதி என்று பெயர். இவரது மகாபாரதமும், அவரது இசையும் கலக்கவேண்டும். அப்படிக் கலந்தால், நான் எல்லா வேலையும்விட்டு ரசிகனாக அதைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
கலைஞர்களுக்கு ஆசைகள் உண்டு. ஆனால் ஜெயமோகன் பேராசை பிடித்தவர். உலகத்திலேயே இப்படியொரு காவியமில்லை எனச் சொல்லவேண்டும் என்று நினைக்காமலா எழுதத் தொடங்கியிருப்பார்? அந்தத் தைரியத்தை வணங்க நான் கடமைப்பட்டிருக்கிறேன் ஒரு கலைஞனாக!” என்று தனது உரையை முடித்தார்.
தனக்கும் நடப்பவற்றுக்கும் சம்பந்தமில்லாததுபோல், இருக்கையில் ஓர் ஓரமாய் ஒடுங்கிக் கொண்டு, முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டு அமர்ந்திருந்தார். பி.ஏ.கிருஷ்ணனிடம் பேச வலதுபுறமாக மிகவும் குனிந்த பொழுது, அவரது இருக்கை ஒருபுறமாக குடை சாயப் பார்த்தது. கமல்தான் பிடித்து நிறுத்தினார். மேடையில் அமர்ந்திருந்தவர்களில் கமல் மட்டுமே தான் கவனிக்கப்படுகிறோம் என்ற அதீத பிரக்ஞையோடு, ஆடாமல் அசையாமல் தன்னை குவிமையமாகப் பாவித்து, அதற்குரிய கம்பீர உடல்மொழியோடு மூன்று மணிநேரமும் அமர்ந்திருந்தார். செந்தமிழும் நாப்பழக்கம் என்பதுபோல், மேடையில் நெளியாமல் அமர்வதும் நாட்பழக்கத்தில் வருவதுதானே! அமர்ந்திருந்த வரை சீடனுக்குரிய பவ்யத்துடன் இருந்த ஜெயமோகன், பேசத் தொடங்கியதும், அது தனக்கான சபை என்ற திண்மையைப் பெற்றுவிட்டது போலிருந்தது. “ஒரே நேரத்தில் திமிராகவும் பணிவாகவும் உணர்கிறேன்.
ஐரோப்பாவின் விஞ்ஞானம், மருத்துவம், தத்துவம் என அனைத்திலும் கிரேக்கத் தொன்மம் பரவியுள்ளது. எடிபஸ் காம்ப்ளக்ஸ் என்ற உளவியல் சிக்கலுக்கு பெயர் வைக்க, அவர்களுக்கு கிரேக்கத் தொன்மம் உதவுகிறது. அதற்கு சற்றும் குறையாத சிறப்புப் பொருந்தியது நம் மகாபாரதம்.
1983 இல் தொடங்கி, 1996 வரை 13 வருடங்கள் மகாபாரதத முழுவதையும் எளிய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் கங்குலி. Puranic encyclopediaவை, 35 வருட வாழ்நாள் உழைப்பைக் கொட்டி உருவாக்கினார் கேரளாவைச் சேர்ந்த வெட்டம் மணி. அது ஆறு மாதத்திற்கு ஒருமுறை மறுபதிப்பு காண்கிறது அங்கே. ஆனால் இங்கோ கும்பகோண மகாபாரதப் பதிப்பு இரண்டாம் முறையே பல வருடங்கள் மறுபதிப்புக் காணாமல், 2005இல் சில நூறு பிரதிகள் மட்டும் மறுபதிப்புச் செய்யப்பட்டது.
சில வருடங்கள் முன், ‘இனி ஞான் உறங்ஙிட்டே’ எனற மகாபாரத நாவலை எழுதிய பி.கெ.பாலகிருஷ்ணனை ஒரு கள்ளுக்கடையில் சந்திச்சேன். அவர் அனைவரும் மகாபாரதத்தை பின்புலமாக வச்சு எழுதணும் எனச் சொன்னார். நான் அவரிடம், ‘முழு மகாபாரதமும் எழுதப் போறேன்’ என்றேன். அவர் சிரிப்பார் என நினைச்சேன். மாறாக என் தோளில் கை போட்டு, ஒரு கெட்டவார்த்தை சொல்லி எழுதுடா என்றார். நான் அன்று விளையாட்டாகச் சொன்னாலும், அது ஆசையாக என்னுள் கனலை எழுப்பிவந்துள்ளது. மகாபாரதம் தொடர்பாக வந்த அனைத்து எழுத்துகளையும் படித்து, இத்தனை வருடமாகத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன்.
இன்னும் 10 வருடங்கள் வரைதான் வெண்முரசு புத்தகங்களாக வரும். அதன்பின் இது டேட்டா பேஸ். அர்ஜூனன் என்ற பாத்திரத்தின் பெயர் சொடுக்கினால் அவர் சம்பந்தப்பட்ட கதை எல்லாம் பட்டியலாகும். பத்து வருடங்களுக்கு முன் கண்டிப்பாக இதை எழுதியிருக்க இயலாது. கூகுளில் யாராவது பீஷ்மர், துரோனர் எனத் தேடினால், வெண்முரசு பக்கத்திற்குத்தான் வரும். வரணும். அதுதான் நோக்கம். ஒருநாளைக்கு 5000 பேர் வெண்முரசைத் தேடிப் படிக்கின்றனர். தமிழில் வேறெந்த நூலும், தினம் வெண்முரசைப் போல் படிக்கப்படுவதில்லை.
பரசுராமனின் வில் மோதிரமாக மாறி ராமனின் காலில் விழுந்தது. பரசுராமனுக்குத் தெரிந்துவிட்டது, அடுத்த ராமன் வந்துவிட்டானென! அது போல் என்னை சிறியதாக உணரச் செய்ய ஒருவருண்டு என திண்ணமாக நான் என்றும் நம்பி வருகிறேன். அடுத்த தலைமுறையினர், தாம் எழுதத் தொடங்குவதற்கு முன் கற்றுத் தேறும் இடமாக வெண்முரசு இருக்கும்.
காந்தியிடம் ஜோக் ஃபால்ஸைப் பார்க்கலாம் என ஒருவர் அழைத்தார். ‘அதிலென்ன விசேஷம்?’ என்று கேட்டார் காந்தி. ‘இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி’ என்றார் அவர். ‘நான் அதையும்விட உயரமான இடத்திலிருந்து நீர் விழுவதைக் கண்டுள்ளேன். அது நயாகராவின் உயரத்தை விடவும் அதிகம். அது “மழை”‘ என்றார் காந்தி. அப்படி, மகாபாரதமும் ஒரு மழை. விண்ணையும் மண்ணையும் இணைக்கும் சரடாய் உள்ளன.
எங்குத் தொடங்கினாலும், காந்தியில் முடிக்கவேண்டும் என்ற மன புரிதல் எனக்கும் கமலுக்கும் உண்டு. ஆகவே இதோடு என் உரையை முடிக்கிறேன்” என்றார் ஜெயமோகன்.
500 பேர் அமரக்கூடிய மியூசியம் தியேட்டர் அரங்கு நிரம்பி வழிந்ததோடு மட்டுமில்லாமல், விழா நடந்த 3 மணி நேரமும் பலர் நின்று கொண்டே பார்த்தனர். சென்னையின் மிகப் பழமையான அரங்கம் என்ற தொன்மவியல் குறியீடாக, இந்த அரங்கத்தைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் போல் விஷ்ணுபுர வட்டத்தினர். மேடையில் ஷண்முக வடிவேலின் ஓவியங்கள் ஸ்லைட் ஷோவாகப் போடப்பட்டது அற்புதமாக இருந்தது. ஓர் அத்தியாயத்திற்கு ஓவியம் வரைய, நான்கு மணி நேரம் ஆகுமாம். ஜெயமோகனின் உழைப்பிற்கு சற்றும் குறையாத அசுர உழைப்பு ஓவியர்களுடையது. கொட்டாவி வர வைக்கும் இலக்கிய விழாவாக இல்லாமல் கொண்டாட்டமாக இருந்தது நாவல் வெளியீட்டு விழா. ஜெயமோகனின் ரதம் மண்ணில் படாமல் பயணிக்க, மேலும் ஒரு காரணமாக இவ்விழா அமைந்தது எனச் சொன்னால் அது மிகையாகாது.
இடம்: மியூசியம் தியேட்டர் ஹால், எக்மோர்
நாள்: நவம்பர் 9, 2014
விழா முடிந்ததும், காதில் விழுந்த இருவரின் பேச்சு.
“அண்ணே, அரசியலை குத்தகைக்கு எடுத்து அலசி ஆராயும் மனுஷ்யபுத்திரனும், ஆன்மிகத்தை குத்தகைக்கு எடுத்துப் பிரித்து மேயும் பாலகுமாரனும் வந்திருந்தாங்க. பார்த்தீங்களா?”
“எலே தம்பீ, அதாம்வே ஜெமோ!”
– தினேஷ் ராம்