
“எந்தப் படத்திற்கும் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. இனி பரத்பாலா படத்தில் நடிக்கவே கூடாது என முடிவு பண்ணேன். ஆனா இப்ப ரிசல்ட்டைப் பார்க்கிறப்ப, மீண்டும் அவர் படத்தில் நடிக்கணும்னு தோணுது. படத்தில் ஒரு சீனுல சிறுத்தை வரும். அது எப்படி எடுத்தாங்கன்னா.. சிறுத்தை ஓடிடக் கூடாதுன்னு பெரிய கூண்டு ஒன்னுப் போட்டுட்டாங்க. ஒன்னு இல்லை மூனு சிறுத்தை. சும்மா கொஞ்ச நேரம் எடுக்கல. காலையில் தொடங்கி மாலை வரை, ரொம்ப கஷ்டம். ‘சீக்கிரம் மறைஞ்சுடுப்பா’ என நான் சூரியனை வேண்டிக்கிட்டேன்.
“முதலில் ஒன்னு சொல்லிக்கிறேன். நான் வெறும் பார்வதி தான். பார்வதி ‘மேனன்’ இல்லை” என்றவர் ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ் போன்றோர்களுடன் இணைந்து வேலை செய்தததை பாக்கியமாகக் கருதுகிறார். கிராமத்துப் பெண்ணாக தத்ரூபமாக நடிக்க, கிராமங்களில் தங்கி பயிற்சிப் பெற்றுள்ளார். இந்தப் படத்தின் கதை தான் ஹீரோ என்கிறார் பார்வதி.

“நான் மயிலாப்பூர்க்காரன். முதல்ல ஒரு ஹிந்திப் படம். அப்புறம் ஏழு வருஷத்துக்கு அப்புறம் ரெண்டவதா இப்ப தமிழ்ப் படம் பண்றேன். எனக்கு தலைலாம் நரைச்சிடுச்சி. ஒரு படம் பண்ணனும்னுலாம் இல்லை. இந்தக் கதை பண்ணியே ஆகணும்னு ஃபேஷனேட் டெவலப் ஆனா பண்ணிடுவேன். அப்படித் தான் மரியானும். சூடான்ல நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வச்சு பண்ண ப்ளாட். தனுஷ், பார்வதி கிட்ட கேட்டா நான் டார்ச்சர் பண்ணதா சொல்வாங்க. அது கொஞ்சம் உண்மையா இருக்கலாம். ஆனா தனுஷ் பேசும் பொழுது ஒன்னு சொல்லாம விட்டார். அவர் கூட நானும் கடலில் இறங்குவேன். அந்த சிறுத்தை சீன் எடுக்கும் முன், என் க்ரூ மெம்பர்சுக்கு கான்ஃபிடன்ஸ் வர நான் சிறுத்தையை தடவி கொடுத்து, அதன் வாய்க்குள் கையெல்லாம் விட்டேன். ரஹ்மானும் நானும் ப்ரெண்ட்ஸ் என்பதால், வொர்க் எதுவும் டைட்டாக போகாம ஃப்ரீயா வொர்க் பண்ணுவோம். இந்தப் படத்துக்கு கேமிரா மேன் மார்க் கோனிக்ஸ் என்ற ஃப்ரெஞ்சுக்காரர். அவரோட படம் ஒன்னு பார்த்தேன். ஃபோன் நம்பர் கண்டுபிடிச்சு அவர்கிட்ட கதையை சொன்னேன். இரண்டாவது நாள் அவரே கிளம்பி வந்துட்டார். இப்படிக் கதை எல்லோரையும் ஈர்த்துடுச்சு” என்றார் பரத்பாலா.


