Shadow

விடுதலை பாகம் 2 – 25 ஆவது நாள் நிறைவு | RS Infotainment

விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடுவதால், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சியில் உள்ளது. “விடுதலை’’யின் ஆழமான திரைக்கதை, எளிய மக்களின் வாழ்க்கை முறையையும், அரசியல் களத்தின் எதார்த்தத்தையும் தைரியமாகச் சித்தரித்துள்ளது. விடுதலை பாகம் 1, பாகம் 2 ஆகிய இரண்டிற்கும் பரவலான வரவேற்பும், உணர்வுப்பூர்வமான ஆதரவும் மக்களிடையே கிடைத்துள்ளதில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் பெருமிதமாக உணர்கிறது.

“விடுதலை பாகம் 2 மிகவும் லாபகரமான படமாக எங்கள் நிறுவனத்திற்கு அமைந்ததில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் சிந்தனையைத் தூண்டும் சினிமாவாக விடுதலை பாகம் 1 & 2 வழங்கியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தில் மீண்டும் ஒரு வெற்றிகரமான மைல்கல்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இயக்குநர் வெற்றி மாறன் அவர்களுக்கு நன்றி. இசைஞானி ஐயா இளையராஜா அவர்களின் மனதை வருடும் இசை மற்றும் ஆழமான கதைக்கு உயிரூட்டிய பிண்ணணி இசைக்கு நன்றி. எங்கள் ‘வாத்தியார்’ விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் தனது ஒப்பற்ற நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நிறைவான தடம் பதித்ததற்கு நன்றி. எங்கள் ‘குமரேசன்’ சூரி கடைநிலை காவலர் கதாபாத்திரத்திற்குத் தன்னலமற்ற அர்ப்பணிப்பை அளித்து மிகுந்த உண்மைத்தன்மையுடன் தனது நடிப்பின மூலம் ரசிகர்களின் மனதை தொட்டு மகத்தான பங்களிப்பை செய்ததற்காக நன்றி. மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் இத்திரைப்படத்திற்கும் பின்னால் இருக்கும் அனைத்து அற்புதமான குழுவிற்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். விடுதலை பாகம் 2-ஐ வெற்றிகரமான படைப்பாக்கிய அனைவரது உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் நன்றி.

தமிழ்நாட்டில் விடுதலை பாகம் 1 & 2-ஐ சரியான தேதியில் வெற்றிகரமாக வெளியிட்டு திட்டமிடப்பட்ட வெளியீட்டின் மூலம் அனைத்து ரசிகர்களுக்கும் கொண்டு சேர்த்த ரெட் ஜெயன்ட் மூவீஸ்க்கு நன்றி. இப்படத்தை உலகமெங்கும் உள்ள அனைத்து ரசிகர்களுக்குக் கொண்டு சேர்த்த எங்கள் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நன்றி. கலைஞர் தொலைக்காட்சி, zee5 மற்றும் சோனி ம்யூசிக் நிறுவனங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. இந்த சாதனையை அடையச் செய்த ரசிகர்களுக்கு நன்றி” என அறிக்கை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இந்த வெற்றியைக் கொண்டாடும் நேரத்தில், ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் தனது இரு புதிய திரைப்படங்களை அறிவித்துள்லது.

இயக்குநர் வெற்றிமாறனின் 7 ஆவது படமான விடுதலை பகுதி 2 வெற்றிக்குப் பிறகு, அவரது இயக்கதில் 9ஆவது படத்தில் நடிப்பு அசுரன் திரு. தனுஷ் அவர்களுடன் இணைகிறது ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட். தொடர் வெற்றிப் படங்களை வழங்கிய இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து, புதிய சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கிறது. மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

விடுதலையின் வெற்றிக்குப் பிறகு, ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் திரு .சூரி அவர்களுடன் மீண்டும் இணைகிறது. விடுதலை தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்த இயக்குநர் வெற்றிமாறன் குழுவின் முக்கிய உறுப்பினரான மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.