Shadow

விடுதலை பாகம் – 2 விமர்சனம்

முழு உண்மைக்கும், அதிலிருந்து எடுத்துப் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் செய்திக்குமான வித்தியாசம் எவ்வளவு என்பதைப் படம் பேசுகிறது. அதிகாரம் என்பது நினைத்ததைச் செயல்படுத்துவதாக இருந்தாலும், அது நிகழாத பட்சத்தில், நடப்பதை எல்லாம் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் புனைவுத் திறமை உடையது என்பதைப் படம் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. அதிகாரச் சக்கரத்தின் ஏதோ ஒரு பல்லில், ஒட்டிக் கொள்ள இடம் கிடைத்தாலும், சக்கரத்தின் சுழற்சிக்குத் தக்கவாறு தனது தனிப்பட்ட நலனையும் வளர்ச்சியையும் முதன்மைப்படுத்திக் கொண்டு, யார் மீதாவது, எதன் மீதாவது சக்கரத்தோடு இணைந்து பயணித்துவிடுவார்கள். அதிகாரம் எனும் போதை, சமூகத்தின் இன்ன அடுக்கில் உள்ளவர்களுக்கு மட்டுமே உரிமையானதோ, உடைமையானதோ இல்லை; அது எவரையும் வீழ்த்தும் தன்மையுடையது என்று படத்தின் முடிவில் அற்புதமாகவும், மிகத் துணிச்சலாகவும் இயம்பியுள்ளார் வெற்றிமாறன்.

இந்தப் பாகத்தின் நாயகன், வாத்தியார் பெருமாளாக நடித்திருக்கும் விஜய் சேதுபதிதான். சூரியின் வாய்ஸ்-ஓவரில் கதை நகர்கிறது. ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால், அவர் வாத்தியாரிடம் கேட்டு தனது தாய்க்கு எழுதும் கதை அவருக்கே புரியவில்லை என்பதுதான். க்ளைமேக்ஸில் அவர் எடுக்கும் முடிவில் இருந்து அதை உணரமுடிகிறது. ஓர் இயக்கமாக, ஆயுதங்களுடன், சட்ட உதவியுடனே அதிகாரத்தை எதிர்க்க முடியாமல் திணறும் வாத்தியாரின் வீழ்ச்சியைக் கண்ட பிறகும், தன்னால் பிறருக்கு உதவும் நபராக மாறமுடியுமென நம்பி அதிகாரத்தைச் சீண்டிப் பார்க்கிறார். கையறு நிலை யாவருக்குமானது, அதை ஏற்றுக் கொண்டு, இருக்குமிடத்தில் இருந்து அரசியல் தெளிவுடன் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுவதுதான் புத்திசாலித்தனம். வாத்தியார், படம் முழுவதும் அவ்வளவு பேசியும் குமரேசன் பொசுக்கெனக் கோபம் வந்து, ஆட்டத்தில் இருந்து விலகுவது வாத்தியாரின் தோல்விக்குச் சான்றாகிவிடுகிறது.

பண்ணையத்தின் சாதியப் பெருந்திமிருக்கு எதிராகப் போராடும் கருப்பனாகக் கென் கருணாஸ் நன்றாக நடித்துள்ளார். காவல்துறை அதிகாரி அமுதனாகத் தமிழும், ராகவேந்திரராக சேத்தனும், அவரது குழுவில் உள்ள மற்ற அதிகாரிகளும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். கொதித்தெழும் திராவிடச் சிந்தனையுடைய அரசியல்வாதியான இளவரசு, ‘அப்போ மைன்ஸ்க்குப் பெர்மிஷன் கிடைச்சுடும்ல?’ என ஆஃப் ஆகுமிடத்தில், சமூக நீதியைக் கையிலெடுத்து அதிகாரத்துக்கு வந்தவர்களின் இன்றைய பலவீனத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அப்படி இல்லை என்ற வலுவான டிஸ்க்ளெயிமருடன் படம் தொடங்குகிறது.

வாத்தியாராக விஜய் சேதுபதி. அவருக்கு லட்டு போன்ற கதாபாத்திரம். சமுத்திரக்கனியுடன் ஆங்காங்கே போட்டி போட்டுக் கொண்டிருந்தவர், இப்படத்தின் மூலமாக சமுத்திரக்கனியைப் பின்னுக்குத் தள்ளி எட்டமுடியாத உயரத்தைத் தொட்டுள்ளார். மக்களுக்கான பிரச்சனையை, அரசியல் தெளிவை ஏற்படுத்தும் வகையில், அவர்கள் மொழியில் இயல்பாகப் பேசி மக்களோடு மக்களாகத் தோள் நிற்கும் பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார். ‘போலீஸ் ட்ரெயினிங்கில் என்ன பண்ண?’ என மிக சீரியஸான காட்சியில் சேத்தனை விஜய்சேதுபதி நக்கலடிக்கும் பொழுது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது. படத்தின் மிகப் பெரிய சர்ப்ரைஸ் ராஜிவ் மேனனின் நடிப்புத்தான். அவர் முன், கெளதவ் வாசுதேவ் மேனன் கூடப் பொலிவிழுந்து விடுகிறார். மிக அற்புதமான உடற்மொழியாலும், வசன உச்சரிப்பாலும் கவருகிறார். அதிகாரச் சக்கரம் சுழன்றே கொண்டே இருக்க, அவர் படும்பாடு ரசிக்க வைக்கிறது. அவர் அதி பயங்கரமாக யோசித்து என்ன திட்டம் போட்டாலும், கள எதார்த்தமும், களத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட கணக்குகளும், அவரது நுண்ணுத்தியைக் (Strategy) களைத்துப் போடுகின்றன. இந்த மனிதனும் சளைக்காமல் பெரிய பாஸைச் சமாளிக்கிறார். அவர் எப்படியெல்லாம் சமாளிக்கிறார் என்ற வெற்றிமாறனின் எழுத்து மிகவும் வசீகரமாய் உள்ளது.

வேட்டிச் சட்டையில் உலாவும் முதலாளியின் மகள் மகாலக்ஷ்மியாக மஞ்சு வாரியர். மிகவும் மரியாதைக்குரிய ஒரு கதாபாத்திரம் அவருக்கு வாய்த்துள்ளது. கருப்பன் பாத்திரமும் சரி, மகாலக்ஷ்மியின் பாத்திரமும் சரி, எதிராளியின் பலவீனம் எது என்பதில் குறியாக உள்ளன. படத்தின் அசல் நாயகன், தோழர் கேகே-வாக வரும் கிஷோர்தான். பாராசூட்டில் ஒரு கண்டிப்பான தந்தையாகப் பார்த்த நபர், அப்படியே உருமாறி, இப்படத்தில் கம்யூனிஸம் பேசும் களச்செயற்பாட்டாளராக வாழ்ந்துள்ளார். ஒரு பார்வை, ஒரு வாக்கியம் என வாத்தியாரின் வாத்தியாராகப் பார்வையாளர்களுக்கு அற்புதமாகப் பாடமெடுத்துள்ளார். எப்படி கான்ஸ்டபிள் குமரேசன், வாத்தியாரின் பாடங்களை உள்வாங்கிக் கொள்ளவில்லையோ, வாத்தியார்ருமே கூட கேகே-வின் பாடங்களை உள்வாங்காமல் ‘அழித்தொழிப்பு’ எனத் தடம் புரள்கிறார்.

ஒரு கட்டத்தில், ஆயுதத்தால் விடுதலையை அடைய முடியாதென்ற தெளிவு பிறக்கிறது வாத்தியாருக்கு. அது ஒரு விபத்தில் நிகழும் பெர்ஸ்னல் இழப்பால் எட்டப்படுகிறது. அதன் பின், தன் போராட்ட முறையை மாற்றிக் கொண்டேன் என வாத்தியார் சொன்னாலும், அதில் போதுமான தெளிவில்லை. அதன் பிறகே வெடிகுண்டு மிரட்டல் அத்தியாயத்தை வடிவமைக்கிறார் வாத்தியார். அந்தத் திட்டத்தின் தோல்வியால் ஏற்பட்டிருக்க வேண்டிய குற்றவுணர்வை, அரசின் மெத்தனமான நிர்வாகக் கோளாறையும், களத்தில் விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவினோம் என மிக இலகுவாக வசனங்களில் கடந்து விடுகிறார் வாத்தியார். ஆனால் வெடி விபத்தில் நிகழும் இரண்டு தோழர்களின் மரணம் வாத்தியாரை மிகவும் வருத்தமுறச் செய்வதை விஷுவலாகக் காட்டியுள்ளார் வெற்றிமாறன். திரைமொழிக்கான விஷுவலில், உச்சத்தைத் தொடும் வெற்றிமாறனின் வழக்கமான பாணி இப்படத்தில் மிஸ்ஸிங். ஆயுதங்களை ஏந்தியாக வேண்டும் என மிகக் குறைவாகப் பேசி, அதற்கான நியாயத்தைப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்துவிடுகிறார் வெற்றிமாறன். ஆனால், யாராக இருந்தாலும், அது அரசாகவே இருந்தாலும் ஆயுதங்களை இறக்கியாக வேண்டுமென அழுத்தமாகச் சொல்லத் தவறி வசனமாக நீர்த்துப் போகச் செய்துள்ளார். போலீஸ்காரர்களுக்கு எதுவும் ஆகக் கூடாதென diplomat ஆக யோசிக்கும் வாத்தியார், க்ளைமேக்ஸில் தனக்குக் குண்டடிப்பட்ட பின்பும், பல இளம்தோழர்களை இழந்த பின்பும், பக்கம் பக்கமாகத் தத்துவங்களின் தாக்கம், தலைமைத்துவமின்மை குறையல்ல தத்துவமின்மை தான் தவறு, போராட்ட முறை மாற்றம் எனப் பக்கம் பக்கமாகப் பேசியே ஒரு முடிவை எட்டுகிறார். வசனங்களுக்காகத் திரைமொழியைச் சமரசம் செய்துள்ளார் வெற்றிமாறன். வடசென்னையில், படத்தின் முடிவில், சந்திராவாக வரும் ஆண்ட்ரியா தன் மனதிலுள்ளதை வசனமாக ஒப்பிப்பார். அதே போல், ‘மேலிடத்து ஆர்டர்’ எனப் பூசி மெழுகியிருக்க வேண்டிய இடத்தில், தன் மனதிலுள்ளதை ஒப்பிக்கிறார் தமிழ். சேத்தனின் குணக்கேட்டினை விஷுவலாகக் காட்டியிருப்பார் வெற்றிமாறன். ஆனால் தமிழின் மனதிலுள்ள வினோதமான கணக்குகளை விஷுவலாகக் காட்டாமல் பேச வைத்துள்ளார் இயக்குநர்.

அருமபுரி மாவட்டத்து சமூகநிலையைக் கருப்பன் கதையில் தொட்டதிலேயே படத்தின் கனமும், பார்வையாளர்களின் மனபாரமும் கூடிவிடுகிறது. மனம் அதிலிருந்து வெளியில் வரவே நேரம் பிடிக்கும். கம்யூனிஸத்தையும், கம்யூனிஸக் கட்சியையும், அவர்களது தியாகத்தையும் கிண்டலாக அணுகும் போக்கினை, ஓட்டரசியலாகிவிட்ட கழகத்தின் அபிமானிகள் தொடங்கி வைத்தனர். தொண்ணூறுகளுக்குப் பிறகான சமூகப் பொருளாதார மாற்றமும், கம்யூனிஸத்தை ஒரு காமெடிக் கண்ணோட்டத்தோடு அணுகும் போக்கை ஏற்படுத்திவிட்டது. இவற்றை எல்லாம் மறுபரிசீலணைக்கு உட்படுத்தியுள்ளதே இப்படத்தின் வெற்றி.

(A சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்திற்குக் குழந்தைகளைத் தயவு செய்து அழைத்துச் செல்லாதீர்.)