32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நான் பைத்தியம் ஆன கதை

Dinesh R சேலம் Published: 24/08/2010 1 நிமிட வாசிப்பு Updated: 27/01/2014 கவிதை
எழுத்து அளவு:

சந்தைக்கு போன
அண்ணன்
சாயங்காலம் வரும்போது
சகதியோடு
வந்து நின்றான்
ஏனிந்த கோலமென்று
இடைமறித்து கேட்கையில்
இதுதான்
கட்சி கொள்கை என்றான்

அறுவடைக்கு
போன அப்பா
அரைநாளில்
திரும்பி வந்து
திருவோட்டை கையில் தந்தார்
சோறு போட்ட
நிலமெல்லாம்
கூறுபட்டு மனையாச்சி
ஓடுதான்
மீதமென்றார்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அம்மாவின்
வளையலை
அடகு வைத்த காசில்
கல்லூரி போன தம்பி
கண்ணிரண்டும்
குருடாகி
வாசலில் வந்து
விழுந்தான்
கவர்ந்த நடிகருக்கு
கற்பூரம் காட்டும்போது
கண்களை
சுட்டதென்றான்

ஆசைக் கனவுகளை
அள்ளி சுமந்தப்படி
பள்ளிக் கூடம்
போன தங்கை
கூடாததை
படித்து விட்டு
கருகலைக்க காசு கேட்டாள்

அப்பாவின்
முதுகில்
ஆயிரம் சுமையேற
கணவன்
வீடு
போன அக்கா
குடிகார புருஷனிடம்
விடுதலை
வாங்கித் தாவென்றாள்

மலையேறி படியேறி
மண்ணில்
உருண்டு புரண்டு
கடுந்தவம்
இருந்து பெற்ற பிள்ளை
பாலுக்கு
அழும்போது
பரிதவிக்க
விட்டுவிட்டு
பத்தினியோ “தொடரை’ பார்த்தாள்

இத்தனையும்
நடக்கும் போது
என்னினிய அம்மாவோ
அம்மனுக்கு கூழ் வார்த்தாள்
நெருப்பு பொறி
வந்து
கண்களை ஒருபுரம்
குத்த
கால் கையில்
ஆயிரம் விலங்கு விழ
எப்படி நான்
வாழ்வெதென்று
எதுவுமே புரியாமல்
மனநல
வைத்தியரிடம்
மருந்துக்கு நானும் வந்தேன்

– யோகி ஸ்ரீராமானந்த குரு

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க