Shadow

நான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து

akilanin-poet

வயக்காட்டிற்கும் வீட்டிற்கும்
எனக்கு ஒரே முற்றம் தான்..
வாசல் திறந்தால்
காற்று காதல் கீற்று பாடும்..
ஜன்னல் வழியே
நெற்கதிர்கள் முத்தம் கொடுத்து பேசும்..

அப்பாக்கும் அம்மாக்கும்
வயக்காடு தான் சாமி
முள்ளு கிழித்தாலும்
பாம்பு முத்தமிட்டாலும்
செருப்பு போட்டே பாத்ததில்ல..

புண்ணாக்கும் மணக்கும்னு
தெரிஞ்சவங்களுக்கு
கணக்கும் கைக்கொடுக்கும்னு
தெரியாம போச்சு..

நாலு மூட்ட நெல்ல
சந்தையில கணக்கா விக்க
நாலு எழுத்து படிக்க
தான் என்ன வைக்க
பள்ளிக்கூடம் ஒண்ணு
சேந்து நானும் படிக்க..

கிடுகிடுனு காலம் போக
கடகடனு நானும் படிக்க
அரசு தேர்வும் பக்கத்துல வந்து நிக்க
ஓவென அப்பா அம்மா கதறல் கேட்க
என்னவோ ஏதோவென நானும் பாக்க

ஏதோ எட்டுவழி சாலையாம்
இருமாதம் தான் வேளையாம்
எங்கள் சோலை இனியாகும் பாலையாம்
சிம்மம் போல் சினம் கொண்டேன்
ஆயுதம் எடுத்தேன்.. வேறென்ன
என் புத்தகம் தான்..

வயக்காட்டின் ஒவ்வொரு
மணல்மேடும் என் படிப்பறை தான்..
இரவெல்லாம் துணைக்கு
நிலவொளி இருக்க..
தூங்காமல் வைத்திருக்க
எலிகள் கீச்சு இருக்க..
நல்ல படியென தட்டிக் கொடுக்க
நெற்கதிர்கள் இருக்க..
தேர்வு நாள் விடிந்தது

இருமாத கெடு முடிந்து
வயக்காட்டில் பூட்ஸ் கால்கள்..
வரிசை கட்டி இறங்கிய கரை வேட்டிகள்..
ஓரமாக நின்றது பெரிய தூர்வாரும் வண்டி..

அத்தனையும் தாண்டி
அதே வயக்காட்டில்
வெறுங்காலோடும் எழுதுகோலோடும்
நான் வந்து நிற்க..
மாவட்ட ஆட்சியராக முதல் கையெழுத்து
எட்டுவழி சாலைக்கு தடை..

– அகிலன்