Shadow

LIK – ஏப்ரல் 3 முதல்

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

முன்னதாக வெளியான சிங்கிள் பாடல்களான “தீமா தீமா”, “பட்டும்மா”, மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது வெளியீட்டு அறிவிப்பு, திரை ரசிகர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK)’ திரைப்படம், சயின்ஸ் ஃபிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலைக் காப்பாற்றப் போராடும் இந்தக் கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையைக் கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சீமான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும், இந்தத் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.

ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் எஸ். எஸ். லலித்குமார், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை நயன்தாரா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள் .

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் வெளியீட்டு அறிவிப்பு போஸ்டரைத் தொடர்ந்து, ட்ரெய்லர், ஸ்னீக் பீக் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.