Shadow

Blast விமர்சனம் | பிளாஸ்ட் review

143.50 UA

தனது மகள் நிலாவைத் தைரியம் மிக்கவராகவும், பிறருக்கு உதவி செய்பவராகவும் வளர்க்கிறார் கராத்தே மாஸ்டரான ராஜாராமன். தனது நகையை அபகரிக்க நினைக்கும் டோபியிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறார் இளைஞியான நிலா. அந்தத் தற்காப்பு நடவடிக்கை, அவர்கள் வீட்டுக்கு ஆறு கொலையாளிகள் வரக் காரணமாகி விடுகிறது. கொலை செய்ய வந்தவர்கள் யார், அந்தப் பெரிய கொலைகாரக் கும்பலிடம் ராஜாராமனது குடும்பம் எப்படித் தப்புகிறது என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் முதற்பாதி உண்மையிலேயே ஒரு பிளாஸ்ட் போல் வெடிப்புற வேகமாகப் பயணிக்கிறது. படத்தின் தொடக்கத்தில் வரும் ராஜாராமனுக்கும், அவரது மகள் சிறுமியான நிலாவிற்குமான அத்தியாயம் பார்வையாளர்களை வசீகரித்துத் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. சிறுமி ஆக்ரோஷமாகவும் அட்டகாசமாகவும் அசத்தலாகவும் நடித்துள்ளார். ப்ரீத்தி முகந்தனிடம் கூட அந்த ஆட்டிட்யூட் மிஸ்ஸிங்.

அறிமுக இயக்குநர் சுபாஷ் K. ராஜ் ஒரு சுவாரசியமான கருவைத் தொட்டு, முதற்பாதியில் எதையும் யோசிக்க விடாமல் ரசிக்க வைத்துவிடுகிறார். அச்சுவாரசியத்தை இரண்டாவது பாதியில் நீட்டிக்கத் தவறிவிடுகிறார். ஹோட்டலில் நடக்கும் முதற்சண்டையில், அர்ஜுனின் கிக் (Kick), ஒன் பன்ச் (One punch) எல்லாம் அதிரடியாய் அட்டகாசமாக இருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில், குறிப்பாக க்ளைமேக்ஸில் கூட அந்த ஜோஷ் மிஸ் ஆகிறது. ‘எத்தனை பேர் வந்தாலும் அடிப்போம்’ என்றளவில் திரைக்கதை மிகவும் சுருங்கி விடுகிறது. கையில் கிடைக்கும் ஆயிரம் கோடியால் யாருக்கும் (பாதிக்கப்பட்ட மக்களுக்கு) எந்தப் பலனும் இல்லாமல் செய்து விடுகிறது நாயகனது அதிரடிக் குழு. பெரிய கார்ப்ரேட் வில்லனான ஜான் கொக்கேன், மிக எளிதான இலக்காகித் தோற்கிறார். சரியாக எழுதப்படாத எதிர்மறை பாத்திரங்கள்தான் படத்தின் பலவீனம். இந்த ஒன்றைச் சரி செய்திருந்தால், 2026 இன் மிகச் சிறந்த படமாகியிருக்கும். அதே சமயம், கதாபாத்திரத் தேர்வில் இதை சமன் செய்துவிடுகிறார். கதாபாத்திரங்களுக்குமான பில்டப்புகளும் குறைவில்லாமல் உள்ளன.

பதினெட்டு போலீஸ்காரர்களை இலகுவாகக் கொல்லும் அப்ரஹாமாக அர்ஜுன் சிதம்பரம் நடித்துள்ளார். அவருக்கெனப் பிரத்தியேகப் பின்னணி இசை கொடுத்துள்ளார் தமிழில் அறிமுகமாகியுள்ள கே.ஜி.எஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். இரண்டாம் பாதியில் வரும் சண்டைக் காட்சியில், அர்ஜுன் சிதம்பரம், நாயகன் அர்ஜுன் சர்ஜாவை வீழ்த்தி விடுகிறார். அதன் பின் ஒரு புகைப்படத்தைக் காட்டி ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளனர். நாயகன் அர்ஜுன் வீழ்த்தப்படும் முன்பே கூட அந்த ட்விஸ்ட்டை வைத்திருக்கலாம். பார்வையாளர்களின் யூகத்திற்குப் படத்தைக் கொண்டு போகக் கூடாதென இயக்குநர் நினைத்திருப்பார் போல!

நாயகி நிலாவாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். பீனிக்ஸ் பிரபுவின் சண்டைக் காட்சிகள் இயக்கத்தில், ப்ரீத்தி முகுந்தனும் அபிராமியும் நம்பத்தகுந்தவண்ணம் ஆக்‌ஷன் புரிந்துள்ளனர். நிலாவின் சித்தப்பா இளங்கோவாக நடித்துள்ள விவேக் பிரசன்னாவை ஒண்டிக்கட்டையாகவே விட்டுள்ளது முழுமையற்ற (Incomplete) உணர்வைத் தருகின்றது. 

பெண் குழந்தைகள் தங்களைக் காத்துக் கொல்ல தற்காப்புக் கலை அவசியமெனத் தொடங்கும் படம், வில்லனுக்குப் போட்டியாக நாயகனின் குடும்பம் கொலைகள் செய்து தள்ளுவதாக நீள்கிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான டிராகன் திரைப்படம், அறத்தின் பால் ஒழுகி மிகப் புத்திசாலித்தனமான முடிவைப் படத்திற்கு அளித்திருப்பார்கள். இப்படம் அப்படியான எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. ஆக்‌ஷன் என்டர்டெயினர் தான் நோக்கம் என்ற தெளிவில் இருந்து விலகாமல் ரசிக்க வைக்க முயன்றுள்ளார் இயக்குநர் சுபாஷ் K. ராஜ்.