32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மண்டாடி விமர்சனம் | Mandaadi review

Dinesh R சேலம் Published: 11/09/2026 3 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள், ‘மண்டாடி’ என்று அழைப்பர். மீன்பிடிக்கப் போகும் போது படகையும், உடன் வரும் மீனவர்களையும் வழிநடத்துவதைப் போல, பாய்மரப் படகுப் போட்டியின் போதும் வழிநடத்தக் கூடியவர் மண்டாடி ஆவார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இராமநாதபுரத்து முகவைப்பட்டினம் எனும் ஊரிலுள்ள முகவை மைந்தன்ஸ் எனும் படகுப் போட்டி அணியின் மண்டாடியான முத்துக்காளி, ஒரு பிரச்சனையால் ஊரை விட்டு விலகி இருபது வருடமாகச் சென்னையில் வசிக்கிறார். மீண்டும் ஓர் ஊர் பிரச்சனை முத்துக்காளியை ஊருக்கு அழைத்து வருகிறது. இருபது வருடங்களாகப் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்த முகவை மைந்தன்ஸ்க்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த வாய்ப்பை முத்துக்காளி எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதுதான் படத்தின் முடிவு.

அருள்வான் படத்தில் சிறுமியாக அசத்தியிருந்த கிருத்திகா பாலசுப்ரமணியம் பாகம்பிரியாளாக வருகிறார். சிறிய கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாகச் செய்துள்ளார். கத்தார் ரவி எனும் பாத்திரத்தில் பாலசரவணன் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். மச்சமுனியாக ஃப்ளாஷபேக்கில் வரும் சத்யராஜிற்கு நிறைவான கதாபாத்திரத்தை வழங்கியுள்ளார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. ஏஞ்சல் ராக்கம்மாவாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இருபது வருடங்களுக்குப் பின், சூரியைப் பார்க்கும்பொழுது மகிமா தனது நடனத்திலும் முகத்திலும் காட்டும் வேறுபாடும், மகனிடம் தன் பழைய காதலைப் பற்றிப் பேசும்போது அவர் காட்டும் கம்பீரமும் ரசிக்க வைத்தாலும், அந்தப் பாத்திரத்திற்கான முழு நியாயத்தைச் செய்யவில்லை. முத்துக்காளியிடம் படகுப் போட்டிக்குப் பயிற்சி எடுக்கும் மாரியாக, டூரிஸ்ட் ஃபேமிலியில் மூத்த மகனாக நடித்திருந்த மிதுன் ஜெய்சங்கர் இப்படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாகத் தெலுங்கு நடிகர் சுஹாஸ் மிரட்டியுள்ளார்.

இந்தப் படத்தைச் சாகசம் நிரம்பிய முழு நீள ஸ்போர்ட்ஸ் படமாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்துள்ளார் சண்டை இயக்குநரான பீட்டர் ஹெய்ன். இடைவேளைக்கு முன் வரும் சண்டைக் காட்சியும் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. திலீப் சுப்பராயன், மகேஷ் மேத்யூ ஆகியோரும் சண்டை இயக்குநர்களாகப் பணிபுரிந்துள்ளனர். பெரிய திரையில் பார்ப்பதற்கு ஏற்ற வகையில், அசுரத்தனமாக உழைப்பைப் போட்டுள்ளனர் ஒளிப்பதிவாளர் S.R.கதிர். ஜி.வி.பிரகாஷின் இசை படத்திற்குப் பக்கபலமாய் அமைந்துள்ளது. செல்ஃபி படத்தில், பேசுபொருளால் ஈர்த்த இயக்குநர் மதிமாறன், இப்படத்தில் படகுப் போட்டியின் விவரணைகளால் ஈர்த்துள்ளார்.

கச்சிதமான கதாபாத்திரத் தேர்வுகளாலும், நேரடியாகக் கதைக்குள் சென்றதாலும், படம் தொடங்கியதுமே பார்வையாளர்களை இழுத்துக் கொள்கிறது மண்டாடி. கதையின் நாயகனாக சூரி பக்காவாகப் பொருந்திப் போகிறார். தனக்கேற்ற கதைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார். இடைவேளையின் பொழுது, ‘இது என்னோட போட்டி’ என்று சூரி முகத்தில் காட்டும் உறுதியை அவரது குரல் பிரதிபலிக்கவில்லை. ஆனால் எமோஷ்னல் காட்சிகளுக்கு அவரது குரல் அட்டகாசமாகப் பொருந்திப் போகிறது. குறிப்பாக, இரண்டாம் பாதியில், இருபது வருடம் சுமந்த பாரத்தை இறக்கி வைக்கும் காட்சியில் பார்வையாளர்களைக் கலங்க வைத்து விடுகிறார். இவ்வருடத்தின் முக்கியமான படங்களின் ஒன்றாக மண்டாடி நினைவுகூரப்படும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.