கற்றோர்க்குச் செல்லுமிடம் எல்லாம் சிறப்பு என்பர். ஆனால் இன்று ஒரு எளிய பின்னணி உடையவர்கள் கல்வியில் கரை சேர்வதற்குள் திக்கித் திணற வேண்டியுள்ளது. கல்விச் சேவை, கடமை என்ற நிலையில் இருந்து விலகி வியாபாரம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதால் தான் எளியவர்கள் திண்டாடுகிறார்கள். மேலும் தனியார் கல்லூரிகளில் மருத்துவச் சீட்டுப் பெறுவதற்கு எத்தனை லட்சங்களைக் கொட்ட வேண்டியுள்ளது. அந்த லட்சங்களைப் பெறுவதற்கு கல்லூரி நிறுவனம் என்னென்ன கூத்துகளை எல்லாம் அரங்கேற்றுகிறது என்பதை ஃப்ளாஷ் அடித்துக் காட்டியுள்ளது செல்ஃபி படம்.
படத்தின் நாயகன் ஜீ.வி.பிரகாஷ், அவரின் நண்பராக வரும் நசீர் பாத்திரம் இருவரும் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்து கமிஷன் அடிக்கிறார்கள். இதையே பெரும் தொழிலாகச் செய்து வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். கெளதம் வேலையை ஜீ.வி. செய்ய, அதனால் ஜீ.வி.க்கு சில இழப்புகள் வர, மேலும் சில ஆடுபுலி ஆட்டம் அரங்கேற, எப்படியான பாசிட்டிவ் முடிவைப் படம் எட்டுகிறது என்பதைப் பரபர திரைக்கதையாக கையாண்டுயுள்ளார் இயக்குநர் மதிமாறன்.
கதாபாத்திர தேர்வுகளிலே படத்தின் பாதி வெற்றியைப் பெற்றுவிட்டார் இயக்குநர். வறுமை நிறைந்த மாணவர்களுக்கான முகங்கள், வளமையான மாணவர்களின் முகங்கள் என ஒவ்வொரு பாத்திரங்களின் தேர்வும் நச் ரகம். ஜீ.வி.பிரகாஷ், இப்படத்தில் இயல்பை மீறாமல் நடித்திருக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன் பாடிலாங்வேஜில் இருக்கும் கிராண்டியர் படத்திற்கு வலு சேர்க்கிறது. சங்கலி முருகனின் சைலன்ட் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. நசீர் என்ற பெயரில் வரும் குணாநிதி நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். மேலும் சுப்பிரமணிய சிவா, தங்கதுரை, நாயகம் என படத்தில் வரும் அனைவரும் கவர்கிறார்கள்.
படத்தின் ஆகப் பெரிய கவனம் ஒளிப்பதிவதிலும், சின்னச் சின்ன சவுண்ட் வொர்க்கிலும் கூட இருந்திருக்கிறது. அது படத்தை மனதுக்கு நெருக்கமாக்குகிறது. பின்னணி இசை, பாடல்கள் இரண்டும் கதைக்கு வணிக ரீதியான பவரைக் கூட்டும் வகையில் அமைந்துள்ளது.
ஒரு நல்ல திரைக்கதைக்கான எல்லா அம்சங்களையும் செல்ஃபி தன்னகத்தே கொண்டுள்ளதால் படத்தின் வேகத்தில் பிசிறு தட்டவே இல்லை. ஒரு அப்பா சென்டிமென்ட் காட்சி படத்தில் இருக்கிறது. பெரிதாக வொர்க்கவுட் ஆகியிருக்க வேண்டிய காட்சி அது. ஆனால் அந்தக் காட்சியில் மேஜிக் நடக்கவில்லை. அதே போல் ஜீ.வி.பிரகாஷ் எந்தத் தேவைக்காக இரண்டாம் பாதியில் ஒரு முடிவை எடுக்கிறாரோ, அந்தத் தேவை நமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த இரண்டு விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால், வெற்றிமாறனுக்கு ஒரு பொல்லாதவன் போல் மதிமாறனுக்கு இந்த செல்ஃபி அமைந்திருக்கும். இருந்தாலும் நிச்சயமாக இப்படத்தின் கன்டென்ட், அதைப் பேசியிருக்கும் நேர்மை முதலிய விஷயங்களால் செல்ஃபி தனக்கான வெளிச்சத்தைப் பெற்றுள்ளது.
– ஜெகன் கவிராஜ்