32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“ஏழு கடல் ஏழு மலை – எல்லாமே உயிர்தான்” – இயக்குநர் ராம்

Dinesh R சேலம் Published: 25/09/2026 8 நிமிட வாசிப்பு Updated: 29/09/2026 இது புதிது
எழுத்து அளவு:

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகும். உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயத்தை நேரடியாகத் தொடுகின்ற படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோருடன் இணைந்து படத்தில் எலியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இயக்குநர் ராமின் படங்களுக்கு உயிரோட்டமான இசையைத் தொடர்ந்து அளித்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் பேசிய சுரேஷ் காமாட்சி, “எனக்குக் குறிப்பிட்ட சில இயக்குநர்களை ரொம்பவே பிடிக்கும். காரணம் என் ரசனை அந்த மாதிரி. அந்த வகையில் தரமணி படம் நடந்த சமயத்தில் இயக்குநர் ராமைச் சந்தித்துப் பேசினேன். ஆனாலும், ‘அவரை வைத்துப் படம் எடுக்கும் அளவிற்கு நாம் இன்னும் வளரவில்லையோ?’ என எனக்கு ஒரு தயக்கம் இருந்து வந்தது..

அந்த சமயத்தில் ‘நீ சின்ன தயாரிப்பாளர் தானே?’ என்று என்னைச் சிலர் ஏளனமாகப் பேசியதைக் கேள்விப்பட்டு, நடிகர் சிம்பு தானாகவே முன்வந்து கால்ஷீட் கொடுத்து ‘என் படத்தைத் தயாரியுங்கள்’ என்று கூறினார். வெங்கட் பிரபு அந்தப் படத்தை இயக்கியதால்தான் இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்.

அந்த சமயத்தில் ராம் அண்ணனிடம் இருந்து ஒரு கதை வந்தது; என்னைத் தேடி வந்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன். அதுதான் ‘ஏழு கடல் ஏழு மலை’.

நானும் எஸ்.ஜே. சூர்யா சாரும் தான் இந்தக் கதையைக் கேட்டோம். எனக்குக் கதை பிடித்திருந்ததை விட இயக்குநர் ராமுடன் பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம் இருந்தது. சிலர் ‘இவனிடம் பணமே இல்லை, இவன் எப்படி படம் எடுக்கப் போகிறான்?’ என்று கூட வதந்திகளைப் பரப்பினார்கள். அப்போது அவரிடம், ‘அண்ணே, இதுவரை 10 படங்கள் எடுத்திருக்கிறேன்; ஒரு நாள் கூட சூட்டிங் ஸ்பாட்டில் பணம் இல்லை என்று படம் நின்றதே இல்லை. என்னிடம் பணம் இருந்தால் மட்டுமே அதைக் கணக்கிட்டுப் படத்தையே துவங்குவேன்’ என்றேன்.

ஹீரோ நிவின் பாலி என்றதும் எனக்கு ரொம்ப சந்தோஷம், ‘பிரேமம்’ படத்தில் இருந்தே அவரைப் பிடிக்கும். அதன்பிறகு சூரி வந்தார். கதாநாயகி என்கிறபோது கேட்கவே தேவையில்லை, அஞ்சலியிடம் ஒரு ஃபோன் காலிலேயே சம்மதம் வாங்கி விட்டோம். ராம் அண்ணன் படம் என்பதால் குட்டி இசைஞானி யுவன் சங்கர் ராஜாவும் எங்கள் படத்திற்குக் கிடைத்தார்.

இந்தப் படத்தை ‘ஆழி பிக்சர்ஸ்’ நிறுவனம் வாங்கி ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் வெளியிடுகிறது. கேரளாவில் துல்கர் சல்மானின் வேஃபேரர் (Wayfarer) நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. தெலுங்கில் சுப்பா ரெட்டியின் கலர் அண்ட் கலர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கர்நாடகாவில் டிடி என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. ஓவர்சீஸ் உரிமையை ட்ரிபுள் எம் புரொடக்ஷன்ஸ் பெற்றுள்ளது” என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி, “எப்போதுமே இயக்குநர் ராம் இருக்கும் மேடையில் ஏறும்போது ஒரு குற்ற உணர்ச்சியோடு தான் ஏறுவேன்; காரணம் முத்துக்குமார் சார் இல்லாத மேடை என்பதால் அந்த உணர்வு என்னிடம் எப்போதும் இருக்கும். அவங்க ரெண்டு பேரோட காம்பினேஷனில் வந்த பாடல்கள் எல்லாமே எனக்கு அவ்வளவு பிடிக்கும். நிவின்பாலியின் அலட்டல் இல்லாத நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதேபோல ‘விடுதலை’ படத்தில் சூரி பிரமிக்க வைத்திருந்தார். எல்லோரும் சொல்வார்கள், ‘வெற்றிமாறன் சார் சூரியை மாற்றிவிட்டார்’ என்று! ஆனால் அது உண்மை அல்ல; அவர் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்கள் எல்லோரையும் தான் மாற்றி இருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் மாறவில்லை, பார்க்கும் நம்முடைய பார்வை மாறுகிறது; அதைத்தான் வெற்றிமாறன் செய்தார். ராம் சார் படங்களில் அவர் இயற்கையைக் கொண்டாடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்; வெவ்வேறு விதங்களில் பஞ்சபூதங்களையும் அவர் கொண்டாடுவார்” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன், “பாலுமகேந்திரா சாருடன் இருந்தபோது, ‘ஒருத்தன் நல்லா கதை சொல்றான்டா’ என்று ஒரு நாள் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு என்னிடம் பேசினார்; ரொம்ப நாட்கள் அப்படி அவர் பேசிப் பார்த்ததில்லை. அவர்தான் இயக்குநர் ராம். ரெண்டு பேர் கதை சொல்வதைப் பார்க்கும்போது, ‘எனக்கு இப்படி சொல்ல வரவில்லையே’ என்று ஏக்கம் இருக்கும். அதில் ஒருவர் ராம், இன்னொருவர் என்னுடைய சீனியரான தங்கவேலன். ‘கற்றது தமிழ்’, ‘பேரன்பு’, ‘தங்க மீன்கள்’ என இப்போது ‘ஏழு கடல் ஏழுமலை’ வரை ஒரு மனிதராக, இயக்குநராக அவர் எப்படி தன்னை விரிவாக்கிக் கொண்டே வருகிறாரோ, அதுபோல அவருடைய கதைகளும் விரிவாக்கம் அடைந்து கொண்டே இருக்கிறது; கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த ‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தில் நிறைய ஆர்டரை மாற்றி, ரசிகர்களுக்குப் புரியும் வகையாக எளிமைப்படுத்தி, பார்வையாளனுக்கு அதனுடைய எமோஷன் நேரடியாக வந்து சேர்வதற்கான ஒரு கதை சொல்லலை இதில் அழகாக அவர் உருவாக்கி இருக்கிறார். மனிதர்களுடைய ஒலியும் இன்னொரு உயிரினத்துடைய ஒலியும் ஒன்றாகவே ஒலிக்கிறது இந்த படத்தில்தான் என்பதுதான் இப்படத்தினுடைய மிக மிகச் சிறப்பான அம்சம் என்று நினைக்கிறேன்” என்றார்.

அஞ்சலி, “எல்லோருக்கும் லார்ஜர் தென் லைஃப் (Larger than life) படங்கள் அப்படின்னு சில இருக்கும்; நாமும் அப்படி பண்ணினா எப்படி இருக்கும் என்று நினைப்போம். எனக்கு இந்த ‘ஏழு கடல் ஏழுமலை’ அப்படி ஒரு அனுபவத்தைத்தான் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது, ஆனால் அது இந்த அளவிற்கு வெளிப்படையாக எல்லோரும் பாராட்டும் அளவிற்கு இருக்கிறது என்பது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நிவின்பாலி ஒரு அற்புதமான கோ-ஸ்டார். அவர் ஸ்பாட்டுக்கு வந்து விட்டாலே தினசரி எனக்கு ஒரு சேலஞ்ச் இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக ஒருவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார், அதற்கு நான் எப்படி பண்ணனும் அப்படின்னு பிளான் பண்ணிட்டு போற ஆள் இல்லை நான். ஆனால் இந்த செட்டில் நிவின்பாலி குட்டி குட்டி எக்ஸ்பிரஷனில் வந்து அதைக் கலக்கி எடுத்துடுவாரு. அதனால நானும் என் பங்குக்கு ஏதாவது பண்ணிக்கிட்டு இருக்கணும்; அது ஒரு ஆரோக்கியமான போட்டியாகத்தான் இருந்தது. அது மட்டுமல்ல, முதல் நாளே இந்த நிவின்பாலியுடன் என்னால் ஒரு கம்ஃபோர்ட் ஜோன் உருவாக்க முடிந்தது.

சூரியை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; குற்றாலத்தில் ஒரு முறை படப்பிடிப்பு நடந்தபோது அங்கே ஒரே ஒரு ட்ரெட் மில் தான் இருக்கும். நானும் சூரியும் ரெண்டு பேருமே ஒர்க் அவுட் பண்ணனும்னு ஆசைப்படுவோம், அதனால் ரெண்டு பேருமே அதிலேயே ஓடுவோம்; ஒரு மாதிரி வேடிக்கையாக இருக்கும். வெளியில போய் கிரிக்கெட் விளையாடவும் செய்வோம். இப்பத்தான் எனக்கு அதெல்லாம் ஞாபகம் வருகிறது. அவரோட நல்ல மனசுக்கு இப்போது அவர் என்ன சாதித்திருக்கிறாரோ அதற்கு எல்லாமே அவர் மிகத் தகுதியானவர். சூரியின் வெற்றி எனக்கு ரொம்பவே பர்சனலா ஃபீல் ஆச்சு; அவருக்கு இதற்கு மேலும் இன்னும் வெற்றி வர வேண்டும். இந்தப் படத்தில் நடித்த எலி பற்றி சொல்லத் தேவையில்லை, அதுவும் எங்கள் சக நடிகர்தான்; தேங்க்யூ எலி.

யுவன் எனக்கு ரொம்பப் பிடிச்ச மியூசிக் டைரக்டர் மட்டுமல்ல, பாடகரும் கூட. இந்தப் படத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ பாடல் என் ஃபேவரைட். ‘கற்றது தமிழ்’ படத்திற்கு அப்புறம் எனக்கு இன்னொரு முறை யுவனுடைய இசையில் ‘பறவையே எங்கே இருக்கிறாய்’ எனக் கேட்கும்போது எனக்கு என்ன ஃபீல் இருந்ததோ, அதே வைப் இந்தப் பாட்டில் இருந்துச்சு. ராம் சார் – யுவன் காம்பினேஷன் என்றாலே எப்போதுமே மேஜிக்கல் தான். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சாருக்கு ரொம்பவே நன்றி; காரணம், உங்களுக்கு ஒரு டேஸ்ட், உங்களுக்கும் ஒரு ஆசை இருக்கணும் இந்த மாதிரி ஒரு படம் பண்றதுக்கு. அந்த ஆசை வந்ததால்தான் நாங்கள் இந்தப் படத்தில் வர முடிந்தது. நீங்கள் இன்னும் இந்த மாதிரி நிறைய கதைகளை தேர்ந்தெடுத்து பண்ணனும் என விரும்புகிறேன்.

ராம் சாரைப் பற்றி பல மேடைகளில் பேசியிருந்தாலும் கூட, என்னுடைய ஒரு வெல்-விஷராகவும் ஒரு மென்டராகவும், ஒரு தந்தையைப் போன்றும் அவரை பல கோணத்தில் நான் பார்த்திருக்கிறேன். இந்த ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் ராம் சாருக்கு எவ்வளவு இதயத்துக்கு நெருக்கமான படம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் என்னுடைய கதாபாத்திரத்தை இவ்வளவு அழகாக எழுதியதற்கு ரொம்ப நன்றி. இப்போ எனக்கு சினிமாவுக்கு வந்து 20 வருஷம் ஆகிவிட்டதால், ’20 இயர்ஸ் ஆப் அஞ்சலி’ அப்படின்னு நிறைய பேர் விஷ் பண்றாங்க” என்றார்.

சூரி, “பொதுவாக முக்கியமான இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம், பாலா, மிஷ்கின் இவங்க படங்களில் எல்லாம் நடிக்கணும் அப்படிங்கற ஆசை இருந்துச்சு. அதில் எனக்கு வெற்றிமாறன் அண்ணன் கிட்ட வாய்ப்பு கிடைச்சு அந்தப் படம் ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டோம்னு நினைக்கிறேன். அப்போதுதான் அருண் விஸ்வா மூலமாக எனக்கு ராம் அண்ணன் அறிமுகமானார். அந்த சமயத்தில் தான், ‘இந்தப் படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கு, நீங்கள் பண்றீங்களா?’ என்று என்னை நம்பி கூறினார். எனக்கு ஒரு பக்கம் ஆசையாக இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ‘ராம் அண்ணா ஏரியா கொஞ்சம் ரிஸ்க்கான ஏரியா’ என்று சிலபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அங்கே போனதற்கு பிறகுதான் தெரிந்தது இதைவிட சிறந்த இடம் இருக்க முடியாது என்று!

ஒரு இயக்குநர் இடத்திலிருந்து அவர் பேசாமல், நார்மலாக ஜாலியாகப் பேச ஆரம்பிச்சாரு; எனக்குப் பயங்கர நம்பிக்கை வந்துருச்சு. ‘காமெடி பண்றது சாதாரண விஷயம் இல்லை, ரொம்பக் கஷ்டமான வேலை’ அப்படின்னு அவர் பேசப்பேச எனக்கு பயங்கர தைரியம் வந்துச்சு. அப்படித்தான் இந்தப் படத்துக்குள்ள நான் வந்தேன். வெற்றிமாறனிடம் சொன்னபோது,, ‘தாராளமாகப் போங்க; இப்ப நம்ம படத்துல ஒன்னு இருக்கு பாத்தீங்களா, அதே மாதிரி அங்க போனீங்கன்னா அங்க ஒன்னு புதுசா கத்துக்கலாம், அது உங்களுக்கு ரொம்பப் பெருசா உதவும்’ அப்படின்னு சொன்னாரு.

எப்படா ராம் அண்ணனுடன் சூட்டிங் போகலாம்னு காத்திருந்தேன். முதலில் கூட்டிட்டுப் போனார்கள்; நல்ல ஒரு பெரிய ட்ரெயின் செட், பஞ்சபூதங்களுமே அதைச் சுத்தி இருந்துச்சு, கூடவே 70 எலியும் இருந்துச்சு! அதுக்குள்ளதான் ஷூட்டிங். இதுல என்ன காமெடின்னா, அண்ணனே எனக்கு டயலாக் சொல்லிக் கொடுத்ததுக்கு அப்புறம்தான் நான் டயலாக் பேச ஆரம்பிச்சேன். அப்ப என்ன சொன்னாருன்னா: ‘முதல் ஆக்சன், ரெயினுக்கு (மழை); இரண்டாவது, ட்ரெயினுக்கு; மூன்றாவது ஆக்சன், விண்டோ காற்று வருவதற்கு; நான்காவது, ட்ராலிக்கு; ஐந்தாவது ஆக்சன், காற்று அடிப்பதற்கு; ஆறாவது, தண்டருக்கு (இடி); மின்னல் வருது. ‘அண்ணே எனக்கு எப்போ ஆக்சன் வரும்?’ ‘இருங்க, இதுதான் ஆர்டர். ரைட்டு கரெக்ட்டா இருங்க’ன்னு சொல்லுவாரு. ஒன்பதாவது ஆக்சன், அது கூட இல்ல, ஒன்பது எலிக்கு! பத்தாவது ஆக்சன், எங்களுக்கு! இப்படி படப்பிடிப்பு முழுவதுமே ஜாலியாகவும் புதுசாகவும் இருந்தது” என்றார்.

இயக்குநர் ராம், “ஏழு கடல் ஏழு மலை – ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் எலியோ, யானையோ, மரமோ, புல்லோ எல்லாமே உயிர் தான். அதுதான் படத்தில் கதை. இப்ப ஒரு வாரத்துக்கு முன்னாடி ‘கற்றது தமிழ்’ படம் பார்த்தேன். அப்ப நாம எல்லாம் எப்படி இருந்தோம் இன்னைக்கு அப்படி இருக்கோமா அப்படின்னு தோணுச்சு. நிறைய மாற்றமாகி இருக்கு. ஆனால் நான் அப்படியே தானே இருக்கிறேன். முதன்முதலில் கற்றது தமிழ் படம் எடுத்தப்ப நா.முத்துக்குமார் தான் என்னை யுவன் சங்கர் ராஜா கிட்ட கூட்டிட்டுப் போனார். ஒரு 30 நிமிஷம் கூட கதை சொல்லி இருக்க மாட்டேன். இந்தப் படம் நான் பண்றேன் அப்படின்னு சொல்லிட்டாரு. அன்று தொடங்கிய நட்புதான்.. அவர் நோ சொன்னால்தான் நான் வேறு இடத்துக்குப் போக முடியும். அடுத்த படமும் அவர்தான் பண்றாரு.

அதே சமயம் எங்களுக்கு இடையேயானது வெறும் மியூசிக் டைரக்டர் – இயக்குநர் நட்பு அல்ல. நலம் விரும்பிகளின் நட்பு எங்களுடையது” என்று கூறினார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.