Shadow

தரமணி விமர்சனம்

Taramani movie review

‘தரமணி’ எனும் தலைப்பை, ஓர் ஏரியா பெயராகவோ ஸ்டேஷன் பெயராகவோ கொள்ளாமல், சாதாரண மக்களையும் ஐ.டி. மக்களையும் இணைக்கும் காரிடாரின் குறியீடாகக் கொள்ளலாம்.

பொருளாதாரச் சுதந்திரமுள்ள பெண்ணின் நடவடிக்கைகள் அவளைச் சார்ந்து வாழத் தொடங்கும் ஆணுக்கு எந்தளவுக்குப் பாதுகாப்பாற்ற உணர்வை ஏற்படுத்துமெனப் படம் தெள்ளத் தெளிவாகப் பேசுகிறது.

படிச்ச முண்டை, தேவிடியா, பிட்ச் பிட்ச் பிட்ச், இங்க புழு பிடிச்சுடும் என இந்தப் படத்தில் வரும் வசனங்களுக்கு A செர்ட்டிஃபிகேட் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் தான் இயக்குநர் ராம் நியாகமாகக் கோபப்பட்டிருக்க வேண்டும். ஐ.டி.யில்/பி.பி.ஓ.வில் வேலை செய்பவர்களே இப்படித்தான் எனக் குறை கூறும் மனோபாவத்தை இயக்குநர் ராமால் தவிர்த்துக் கொள்ளவே முடியவில்லை. நடனத்தில் விருப்பமுள்ள மனைவி வேறொருவருடன் நடனமாடுவதைப் பெரிய விஷயமாகக் கருதாத கணவனை எள்ளி நகையாடுகிறார் ராம். கார்ப்ரெட் கலாச்சாரமே ஒழுக்கக் கேடானவை என ஆணித்தரமாக நம்புகிறார் ராம். ‘எது ஒழுக்கம்?’ என ஒருவன் நிர்ணயிக்கத் தொடங்கும் நொடியில் அவன் அடிப்படைவாதியாகி விடுகிறான். படத்தின் அத்தனைக் கதாபாத்திரங்களுமே ஒழுக்க விதிக்குள் சிக்கிச் சுழன்று சந்தேகித்துத் தன்னோடு தன்னைச் சேர்ந்தவர்களையும் பாடாய்ப்படுத்துகின்றனர்.

ஆல்தியா ஜான்சனாக ஆண்ட்ரியா ஜெரிமியா கலக்கியுள்ளார். அவரின்றி வேறொருவரை இந்தப் பாத்திரத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஏற்ற கதாபாத்திரத்திற்கும் படத்திற்கும் உயிர் கொடுத்துள்ளார். படத்தில் ஒழுக்க விதிகளால் பாதிக்கப்படாத ஒரே நபர் இவர்தான். அவருக்குப் பணமொரு பிரச்சனையில்லை என்ற வாய்ஸ்-ஓவரில் மழையில் முழுவதும் நனைந்தவாறு அறிமுகம் ஆகிறார். ஆனால், ஓர் இரவினைக் கழிக்க நல்லதொரு ஹோட்டலுக்குச் செல்லாமல், தன் உயிரினும் மேலான மகன் ஏட்ரியனோடு தரமணி ரயில்வே ஸ்டேஷன் பென்ச்சில் படுத்து உறங்குவது நம்ப முடியவில்லை.

‘கணவனே கண் கண்ட தெய்வம்’ என நினைக்கும் பெண் தான் தனக்கு மனைவியாக வேண்டுமென நினைப்பவன் படத்தின் நாயகன் பிரபுநாத். அதை, பர்ணபாஸாக வரும் அழகம்பெருமாளிடம் சொல்லவும் செய்கிறான். அவனது முதல் காதலியான அஞ்சலி கூட ஜீன்ஸ் பேன்ட்க்கு நீண்ட டாப்ஸ், ‘துப்பட்டா’வுடன் சுடிதார், புடவை அணிபவர். அவர் அமெரிக்கா சென்று உடையை நவீனமாக மாற்றும்போதே, அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் இல்லாதவன். அவனுக்கு முட்டி தெரிய ஸ்கர்ட் அணியும் ஆல்தியா மீது எப்படி ஏன் காதல் எழுந்தது எனத் தெளிவில்லை. காதல் ஒரு மேஜிக்; திடீரென பல்ப் எரிந்தாலே காரணம் இன்றி காதல் எழுமென இயக்குநர் ராதா மோகன் போல் நம்பத் தலைபட்டாலும், ஆண்ட்ரியா மிக முக்கியமான கேள்வியை க்ளைமேக்ஸில் நாயகனிடம் கேட்கிறார். “என் மீது கோபம். சரி விடு. ஆனா ஏட்ரியனைப் பார்க்கணும்னு உனக்குத் தோணலை இல்ல?” என்பது தான் அந்தக் கேள்வி. பெண்களுடன் சரசம் பேசி சல்லாபத்திற்கு அழைத்து நகைகளைப் பிடுங்குவதில் பிசியாக இருந்த நாயகனிடம் சரியான பதிலில்லை. ஆனால், ‘கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’ என்ற அடிப்படைவாதத்திற்கு உட்பட்டு நாயகனையும் நாயகியையும் இணைத்துச் சுபமாக்கி விடுகிறார் ராம். பொருளாதாரச் சுதந்திரம் இருந்தாலுமே கூட, பெண்ணுக்கு ஒரு ஆண் தேவை என்பது தான் படத்தின் முடிபாகக் கருத வேண்டியுள்ளது. பிரபு நாதாக அறிமுக நாயகன் வசந்த் ரவி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றே சொல்லவேண்டும்.

ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது போல் என்று படத்தின் இடையிடையில் தான் பேசியதைப் பற்றிச் சொல்கிறார் இயக்குநர் ராம். அவை அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக நாயகன் ரஹீம் பாய் குடும்பத்திற்கு 3 லட்சம் தந்ததும், டிமானிடைசேஷன் அறிவிப்பைச் சொல்லி ‘வந்தே மாதரம்’ எனச் சொல்வது அட்டகாசம். ஆல்தியாவுக்கும் பிரபுநாதுக்கும் இடையே நடக்கும் சந்திப்பு மோதலாகப் போகும் முதற்பாதி, எல்லாப் பெண்களுமே சோரம் போவார்கள் என நாயகன் மூலம் நிரூபிப்பதில் இரண்டாம் பாதியைக் கடத்துகிறார்.

தரமணியில் ஒரு மேஜிக் நிகழ்கிறது எனில், அதற்குக் காரணம் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுமே!