32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அன்பில் அவன் விமர்சனம் | Anbil Avan review

Dinesh R சேலம் Published: 02/10/2026 2 நிமிட வாசிப்பு Updated: 06/10/2026 இது புதிது
எழுத்து அளவு:

சூர்யா கந்தசாமியும், இயல் சுப்ரமணியனும் காதலித்து, வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏழு வருட இயந்திர ஒட்டத்திற்குப் பின், தங்களது கனவான ‘ஹோம் ஸ்டே’விற்காகப் பசுமை சூழ் மலைப் பிரேதசத்தில் ஒரு வீட்டைச் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்வண்ணம் ராணி பத்மினியிடமிருந்து வாங்குகின்றனர். அந்த வீட்டின் மீது பல வருடங்களாகக் கண் வைத்திருக்கும் எம்.எல்.ஏ.வான ராஜநாயகம், தன்னால் முடிந்த எல்லா இடைஞ்சல்களையும் அத்தம்பதிக்கு வழங்குகிறார். புது ஊரில், புதுச் சூழலில், புது வீட்டில் மாட்டிக் கொள்ளும் சூர்யாவும் இயலும், எப்படி அதிலிருந்து மீள்கின்றனர் என்பதே படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

எம்.எல்.ஏ. ராஜநாயகமாகக் கதிர் பாலு நடித்துள்ளார். அவரது உருவமும் குரலும் பார்வையும் வில்லனுக்கான இலக்கணத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றன. வழக்கறிஞர் மார்டினாக சாபுமோன் சப்துசமத் நடித்துள்ளார். அவரது மலையாளம் கலந்து தமிழும், அவரது மிரட்டலான பார்வையும் பிரதான வில்லனளவுக்கு உள்ளன. ஆய்வாளர் தவசியாக, டெல்லி கணேஷ அவர்களின் மகன் மஹா நடித்துள்ளார். அவரைத் திரையில் பார்த்த கணம் முதலே முகம் சுளிக்க வைக்குமளவு அருவருப்பான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். எதிர்மறை கதாபாத்திரத்திற்கும் மஹா கச்சிதமாகப் பொருந்துகிறார்.

இயல் சுப்ரமணியனாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். படத்தைப் பார்ப்பதற்கான ஒரு காரணமாகத் தன் நடிப்பால் ஈர்க்கிறார். குடும்பத்தை விட்டு வரும் காதலியாக, கேட்டைத் (Gate) தாண்டிக் குதிக்கும் மனைவியாக, அமிலத்தைப் பொறுக்கி மீது ஊற்றும் ரெளத்திரியாக, தங்களைச் சுற்றி நடப்பவற்றால் கலக்கமுறும் மிடில் கிளாஸ் பெண்ணாக, எல்லை மீறும் ஆண்களைச் சமாளிக்கக் கூடிய துணிச்சல் மிக்கவராக என பல பரிமாணங்களில் அசத்துகிறார்.

சூர்யா கந்தசாமியாக அசோக் செல்வன். துறுதுறு கல்லூரி மாணவனாக, பொறுப்பான குடும்பஸ்தனாக, காதலுக்காக ரிஸ்க் எடுக்கும் காதலனாக, தனக்கானதைப் பாதுகாக்கும் நாயகனாக அவரது கதாபாத்திரத்தை முழுவதுமாக உள்வாங்கிச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். ஒரு காதல் கதையாகத் தொடங்கும் விக்னேஷ் ராஜாவின் கதை, ஒரு சர்வைவல் த்ரில்லராக மாறுகிறது. கெளதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் மிகச் சிறந்த மேக்கிங்கைப் படம் கொண்டிருந்தாலும், பார்த்துப் பழகிய திரைக்கதை பாணி, படத்தின் ஓட்டத்திற்கு சற்றே பின்னடைவாக உள்ளது. நெடிய க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியும் அயர்வை அளிக்கிறது. அதையும் மீறி படம் ஈர்ப்பதற்கு நடிகர்களும், ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையுமே காரணம்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.