32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கோந்தல் – ஆஸ்கருக்குச் செல்லும் மராத்தியத் திரைப்படம்

Dinesh R சேலம் Published: 12/11/2026 3 நிமிட வாசிப்பு Updated: 13/11/2026 அயல் சினிமா
எழுத்து அளவு:

இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையான ‘கோந்தல்’ திரைப்படம், இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏழு மொழிகளில் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தியாவின் 99 ஆவது ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரைப் படமான சந்தோஷ் தாவகார் இயக்கிய ‘கோந்தல்’ திரைப்படத்தின் சர்வதேச ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். உளவியல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், மர்மம் நிறைந்த காட்சிகள் மற்றும் மகாராஷ்டிராவின் பாரம்பரியக் கலாசாரப் பின்னணியைக் கொண்டது.

ஒரு மராத்தி திரைப்படம் ஏழு மொழிகளில் மறுவெளியீடு செய்யப்பட்டு, உலகளாவிய அளவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பது இதுவே முதல்முறையாகும். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இப்படம் வெளியாகிறது.

மகாராஷ்டிராவின் கலாச்சாரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், புதுமணத் தம்பதிகளான சுமன் மற்றும் ஆனந்த்ராவை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஆசை, கடமை, பக்தி ஆகியவை ஒன்றோடொன்று மோதும்போது அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களே கதையின் மையம்.

மணமகளின் ஏக்கம், கணவனின் கடமைகள் மற்றும் அடுத்தடுத்து நிகழும் மர்மமான சம்பவங்கள் என இருவரும் புரியாத புதிர்கள் நிறைந்த சுழலுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். வெளிப்படையாகத் தெரிவது உண்மையாக இருக்குமா என்ற கேள்வியையும், உண்மையின் மற்றொரு முகத்தையும் படம் ஆராய்கிறது.

படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் தாவகார், “இந்தியத் திரைப்படங்கள் குறித்த உலகளாவிய பார்வை பெரும்பாலும் வறுமை மற்றும் சாதிய மோதல்கள் சார்ந்த கதைகளால் உருவாக்கப்படுகிறது. அவைதான் கள யதார்த்தம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவை மட்டுமே இந்தியாவின் முழுமையான அடையாளம் அல்ல.

‘கோந்தல்’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல! தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் சங்கமம். இந்தப் பாரம்பரியத்தை உலகம் அறிந்து கொள்ளச் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆஸ்கர் விருதுகள் போன்ற சர்வதேசத் திரைப்பட விழாக்கள், நமது கலாச்சாரத்தை இந்தியாவைத் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்லத் திரைப்பட இயக்குநர்களுக்கு உதவுகின்றன” என்றார்.

56 ஆவது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) சிறந்த இயக்குநருக்கான Silver Peacock விருதை சந்தோஷ் தாவகார் வென்றுள்ளார். இப்படத்தைப் பார்த்த நடுவர் குழுவினர் நிஜ உலகத்தில் அமைந்த ஷேக்ஸ்பியரின் கதை போல உள்ளது என்று பாராட்டியுள்ளனர்.

இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சோஹானி மற்றும் நிஷாத் போயர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் சந்தோஷ் தாவகார், தனது தயாரிப்பு நிறுவனமான தாவகார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் தீக்ஷா தாவகாருடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். பிராந்தியக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, இசை மற்றும் நடிப்பு என அனைத்துத் தொழில்நுட்ப அம்சங்களிலும் உயர்தரமான படைப்புகளை வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமலேந்து சௌத்ரி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் தொடக்கத்திலேயே 25 நிமிடங்கள் இடைவெளியின்றி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட காட்சி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.