32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கமர்ஷியல் பரிணாமத்தில் அசோக் செல்வன்

Dinesh R சேலம் Published: 20/07/2015 2 நிமிட வாசிப்பு Updated: 10/08/2015 சினிமா
எழுத்து அளவு:

சவாலே சமாளி

தமிழ்த் திரையுலகில் குறுகிய காலத்தில் தனக்கென இடம்பிடித்த சில கதாநாயகர்களில் அசோக் செல்வன் ஒருவர். தனது மெல்லிய புன்னகையால் காதல் நாயகனாக பல ரசிகர்களை தன் பக்கம் இழுப்பவர். முழுநீள கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாய் உருவாகியுள்ள ‘ சவாலே சமாளி’ படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கியிருக்கிறார். ‘கழுகு’ புகழ் சத்யசிவா இயக்கியிருக்கும் ‘சவாலே சமாளி’ படத்தில் உள்ள தனது கதாபாத்திரத்தைப் பற்றி இவ்வாறுக் கூறினார். 

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“ஒரு படத்திற்கு கதையே பிரதானம் என்று திண்ணமாய் நம்புபவன் நான். நான் இது வரை ஏற்று நடித்த பாத்திரங்கள் சீரியஸ் டைப் தான். ஒரு கமர்ஷியல் படத்தில் என்னால் ஈடு செய்ய முடியுமா என்று சந்தேகம் என்னுள் எப்பவும் இருந்தது. அதே நேரத்தில் தான் ‘கழுகு’ இயக்குநர் சத்யா சிவாவையும், தயாரிப்பாளர் அருண் பாண்டியனையும் சந்திக்க நேர்ந்தது. அருண் பாண்டியன் சார் தயாரிக்க, சத்யசிவா இயக்க உருவாகும் ‘சவாலே சமாளி’ படத்தின் கதையை என்னிடம் நடிக்க சொல்லிக் கேட்டனர். கதை எனக்குப் பிடித்து இருந்தாலும் முழுக்க முழுக்க மசாலா கலந்தகமர்ஷியல் படம் எனக்கு ப் பொருந்துமா என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது தான் இந்தப் படத்தை ஏற்றுக் கொண்டு நடிக்க தூண்டுதலாய் ஒரு சம்பவம் நடந்தது’ எனக் கூறி அதை விவரிக்கத் தொடங்கினார்.

“அப்போது எனது நெருங்கிய உறவினரின் திருமண விழாவுக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு எனக்கு உணவு பரிமாறிய ஒருவர் என்னை அடையாளம் கண்டு என் படங்களை பற்றி விமர்சித்துப் பேச ஆரம்பித்தார். பேச்சு வாக்கில் கமல் சாரின் ராஜ பார்வை, சகலகலா வல்லவன் படங்களைச் சுட்டிக் காட்டி, ஒரு நடிகர் என்றால் அவரைப் போலவே அனைத்து விதமான கதையம்சமுடைய படங்களையும் செய்ய வேண்டும். அதுதான் ஒரு முழுமையான நடிகனுக்கு அழகு’ என்றார்.

‘உங்க படங்க எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஒரு தரப்பு ரசிகர்களுக்கு மட்டும் படம் பண்ணினா எப்படி? முழு நீள காமெடி படம் ஒன்னு ஜாலியா நடிங்க பாஸு” எனக் கூறினார். எனக்கும் அது சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சரியான வார்த்தைகள் என்று பட்டது. அவர் வார்த்தைகள் கொடுத்த உந்துதலும் தைரியமும், தயாரிப்பாளர் அருண்பாண்டியன் சார் மற்றும் இயக்குநர் சத்யசிவா மீதிருந்த நம்பிக்கையும் என்னை இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள வைத்தது. அவர் யார் என்று விசாரித்த போது தான் தெரிந்தது. அவர் ஒரு முன்னாள் உதவி இயக்குநர் என்பதும், இயக்குநராக வாய்ப்புத் தேடிக் கிடைக்காமல் கேட்டரிங் தொழிலை மேற்கொண்டவர் என்பதும்.

சவாலே சமாளி படம் கலைஞனாக எனக்குப் புதிய பரிணாமத்தை அளிக்கும் என நம்புகிறேன்” என்று உறுதிபடக் கூறனார் அசோக் செல்வன்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.