Shadow

2.0 எனும் அதி பிரம்மாண்டம்

Magnificient-2.0

300 கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம், 550 கோடிக்கு நீண்டுவிட்டது என்கிறார் ரஜினி. ஆனாலும், படம் அதனை வசூலித்துவிடும் என்கிறார் ரஜினி மிக நம்பிக்கையுடன்.

படத்தொகுப்பாளர் ஆண்டனி, மூன்று முறை எடிட்டிங் செய்துள்ளார். ஒன்று, அனிமேஷன் வடிவிலான ப்ரீ-விஷுவலைசேஷன்; இரண்டு, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல்; மூன்றாவது, விஷுவல் எஃபெக்ட்ஸ்களுடன் என மொத்தம் மூன்று முறை முழுப் படத்தையும் தொகுத்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அப்படியே! படம் தொடங்கும் முன் ஒருமுறை, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல் மற்றொரு முறை, தற்போது, அட்டகாசமான விஷுவல் எஃபெக்ட்ஸ்களுக்கு ஈடு செய்யும் வகையில் இசையமைத்து வருகிறார்.

உலகத்திலேயே முதல் முறையாக, செளண்ட் டிசைனிங்கில் 4டி (4D – SRL) தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி. உபயோகப்படுத்தியுள்ளார் என்பதை விட, உருவாக்கியுள்ளார் என்பதே சரி. தங்களது புதிய பரிமாணத்திற்கு, 4D – SRL எனப் பெயர் சூட்டியுள்ளனர். S என்பது இயக்குநர் ஷங்கரின் கனவையும், R என்பது ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியையும், L என்பது அனைத்துத் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்க வசதி செய்து கொடுத்த லைக்கா ப்ரொடெக்‌ஷன்ஸையும் குறிக்கிறது. இது, உலக சினிமாவிலேயே முக்கியமான முயற்சி எனப் பெருமித மகிழ்ச்சி கொள்கிறார் ரசூல். இந்தப் புதிய ஃபார்மட்டின் மூலம், இசையில் ஓர் அடி உலகத்தினர் அனைவருக்கும் முன்னாடி எடுத்து வைத்துள்ளது இந்திய சினிமா. ரசூல், 2.0 படத்திற்குப் பிராந்திய அடையாளம் தருவதை விட இந்திய சினிமா எனக் கூறுவது சரியாக இருக்கும் எனக் கருதுகிறார்.

வெள்ளிக்கிழமை (4-11-2018) அன்று, சென்னை சத்யம் திரையரங்கில், இந்தப் படத்தின் 4டி ட்ரெய்லர் திரையிடப்பட்டது. எப்படி விவரிக்க? மிகப் புதுமையானதொரு அனுபவத்தை 2.0 அளிக்கும் என்பது உறுதி. 4டி இசை, சின்னஞ்சிறு ஒலியையும் மிகத் துல்லியமாகக் கேட்கச் செய்கிறது. உண்மையில், படத்தின் 3டி எஃபெக்ட்டை, ட்ரெய்லரிலும், திரையிடப்பட்ட ‘எந்திரலோகத்துச் சுந்தரியே’ பாடலிலும் முழுமையாக உணர முடிகிறது. பொதுவாக, ஹாலிவுட் படங்களிலேயே அங்கே ஒன்று, இங்கே ஒன்றென அத்திபூத்தாற்போல தான் 3டி எஃபெக்ட்டை உணரமுடியும். இப்படத்தில், முழு நீள 3டி எஃபெக்டிற்கு உணர்வீர்கள் என்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. இந்தப் படத்திற்காக, ஒரு தொழிற்சாலையையே உருவாக்கிப் படத்தில் வரும் பீரங்கிகள், இன்ன பிற ரோபாட்கள் எனப் படத்தின் அதி பிரம்மாண்டத்தைச் சாத்தியமாக்கியுள்ளார் கலை இயக்குநர் முத்துராஜ்.

கொஞ்சம் தாமதமானாலும், ஷங்கரின் 2.0 எனும் பெருங்கனவு அசரடிக்கும் தொழில்நுட்பத் தரத்துடன் உருவாகியுள்ளது. தொழில்நுட்பத் தரம் அசரடிக்கும்? ஆனால், பார்வையாளனோடு கனெக்ட் ஆக அதன் திரைக்கதை மேஜிக் தான் முக்கியம். சுஜாதா இல்லாத குறை எந்திரன் படத்திலேயே அப்பட்டமாய்த் தெரிந்தது. அக்குறையை எழுத்தாளர் ஜெயமோகன் போக்குவார் என நம்புவோமாக!