Shadow

சர்கார் விமர்சனம்

Sarkar-movie-review

தனது ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாகப் போட்டு விடுவதால், செக்‌ஷன் 49 P-இன் படி, மீண்டும் சட்டத்தின் உதவியோடு பேலட் ஓட்டைப் போடுகிறார் சுந்தர் ராமசாமி. கள்ள ஓட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கு போட, மறு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் சுந்தரைச் சீண்டி விட, தேர்தலில் நிற்க முடிவெடுக்கிறார் சுந்தர். செங்கோலினை நிறுவ நல்லதொரு சர்க்கார் அமையவேண்டுமென விரும்புகிறார் சுந்தர் ராமசாமி.

செங்கோல் என்றால் நீதி, நேர்மை தவறாத நல்லாட்சி. சர்க்கார் என்றால் அரசாங்கம். மக்களுக்கு நல்லது செய்யத் தடையாக இருக்கும் அரசு இயந்திரத்தின் சக்கரங்களான ஆளுங்கட்சியை எப்படி ஓரங்கட்டுகிறார் என்பதுதான் படத்தின் கதை. சினிமா என்பது கனவுத்தேசம்தானே!

நல்ல சர்க்காரைத் தன்னால் தான் உருவாக்க முடியுமென்ற ஒரே கனவைப் பலர் காணலாம். கனவு மட்டும் காணாமல் செயலில் இறங்குகிறார் சுந்தர் ராமசாமியாக நடிக்கும் விஜய். அதற்காக, வருடத்திற்கு 1800 கோடி சம்பாதிக்கும் ஜியெல் (GL) நிறுவனத்தின் CEO பதவியை ராஜினாமா செய்கிறார். 234 தொகுதியிலும் தேர்தல் வேலைகளைத் தொடங்குவதற்கான அச்சாரமாக ஓர் அலுவலகம் தேவைப்படுகிறது சுந்தர் ராமசாமிக்கு. அவரது வீடே பங்களா போல் உள்ளது. அது அவரது பெரிய குடும்பம் வாழுவதற்கானது என்று பெருந்தன்மையாக அதை அரசியலுக்காக சுந்தர் ராமசாமி உபயோகிக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம், குறைந்தபட்சம் ஒரு சின்னஞ்சிறு வீட்டை வாடகைக்குக் கூட எடுக்க முடியாதளவுக்கு, அவரைச் சட்டென ஏழ்மை பரிதாபமாய் சூழ்ந்து கொள்கிறது எனும் முருகதாஸின் லாஜிக் தான் அசர வைக்கிறது. ‘ஐய்யோ பாவம்!’ என அயோத்திக்குப்பம் மக்கள், ஒரு பிளாக்கையே (block) காலி செய்து, தங்கள் செளகரியங்களைச் சுருக்கிக் கொண்டு சுந்தர் ராமசாமிக்கு உதவுகின்றனர்.

‘தேர்தலில், 234 தொகுதியிலும் நிற்கிற அளவு பணமிருக்கா?’ என்ற முதலமைச்சரின் கேள்விக்கு, ‘என்ட்ட ஏது?’ என்று மக்களை நோக்கிக் கை காட்டுகிறார் சுந்தர் ராமசாமி. ‘அடேங்கப்பா! விவரமான ஏழை தான்ய்யா நீ!’ என கவுன்ட்டர் கொடுக்க கவுண்டமணி போல் ஓர் ஆள் படத்தில் இல்லாதது மிகப் பெரும் குறை. யோகி பாபு இருக்கார்தான். ஆனாலும், அவரைப் பேச விடாமல் சப்பென அறைந்து விடுகிறார் சுந்தர் ராமசாமி. முதலில் யார் இந்த சுந்தர் ராமசாமி என்று பார்த்து விடுவோம். கார்ப்ரேட் கிரிமினல், கார்ப்ரேட் மான்ஸ்டர் என்கிறார் முருகதாஸ். கூகுள் சி.இஓ.வான சுந்தர் பிச்சையின் மாதிரியாகத்தான், விஜயின் சுந்தர் ராமசாமி கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளனர். சுந்தர் பிச்சை போல் விஜய்க்கும் குறுந்தாடியில் வெள்ளை முடி வைத்து, கூகுளை ஜியெலாக்கியுள்ளனர் (GL). நுண்ணோக்கி கொண்டு குறியீடு கண்டுபிடிக்கும் சிரமம் எல்லாம் தராமல், ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் போதுமென்ற பெயர் அளவுக்கே இந்த ஒப்புமை உள்ளது.

ஏழாம் அறிவு படத்தில், பெளத்தத்தைப் பரப்ப சீனா போகும் பிட்சுவான போதி தர்மரை, கொள்ளையர்களை வசியம் செய்து தங்களுக்குள் வெட்டிக் கொண்டு சாகச் செய்யும் வன்முறையாளராகச் சித்தரித்திருப்பார் முருகதாஸ். அதே போல், சுந்தர் பிச்சை போல் ஒரு சி.இ.ஓ., பெளன்சர்கள் சூழ ஒரு நாட்டுக்குப் போய் 22000 பேருக்கு வேலையிழப்பை உருவாக்குவார் என்கிறார் முருகதாஸ். மிஸ்டர் முருகதாஸ், சுந்தர் பிச்சை பாவம் இல்லையா? ஏன் அவர் மேல் உங்களுக்கு இவ்வளவு கொலைவெறி?? உங்க கதையில் வரும் கதாபாத்திரங்களை மான்ஸ்டர்களாகவும் கிரிமினல்களாகவும் சித்தரிக்க உங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டெனினும், அந்தக் கதாபாத்திரத்தின் சித்தரிப்பை சுந்தர் பிச்சை போன்ற ஆளுமையோடு ஒப்புமை செய்திருப்பது மிகப் பெரிய கயமைத்தனம்.

கந்து வட்டி கொடுமையைத் தாங்க முடியாமல், ஒரு தந்தை தனது மகள்களைத் தீயிட்டார் என்ற காட்சி உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் ஆனது. அந்தச் சம்பவம் அளித்த கோபத்தை, சாடை மாடையாகவோ, நேராகவோ, கதைக்குத் தேவையில்லாவிடினும் திணித்தோ வெளிப்படுத்தலாம். ஆனால், சுந்தர் பிச்சையின் மாதிரி கதாபாத்திரமான சுந்தர் ராமசாமிக்கு இப்படி ஒரு பயங்கரமான அறிமுகத்தைக் கொடுத்து, அதை ஹீரோயிசம் எனக் கருதியிருக்க வேண்டாம் முருகதாஸ். சுந்தர் ராமசாமியை, வசனகர்த்தாவான ஜெயமோகனும் தன் பங்குக்கு ஆசை தீரக் கலாய்த்துள்ளார்.

நீதிமன்றத்தில் வக்கீலைப் பேச விடமாட்டேங்கிறார் விஜய். வக்கீலுக்கும் லட்சக்கணக்கில் சம்பளம் தருகிறார். ஆனால், ஒரு அலுவலகத்தையோ, வீட்டையோ வாடகைக்கு எடுக்க முடியாத நாயகன். அப்படிச் சொல்ல முடியாது, எடுக்க விரும்பாத நாயகன் என்பதே சரி. ஒரு A4 தாளில் 32 மாவட்டத்தின் 32 பிரச்சனைகளை ஒன்றல்லது இரண்டு வார்த்தையில் பட்டியலிட்டு (உ.தா.: மீத்தேன், ஸ்டெர்லைட்), அதைத் தீர்க்கும்படி தேர்தல் பிராச்சாரத்தில் இருக்கும் முன்னாள் முதலமைச்சரிடம் கொடுக்கிறார். அதை விடக் கொடுமை, முதலமைச்சராக நடித்திருக்கும் பழ.கருப்பையா, அந்த 32 பிரச்சனையைக் கொண்டுதான் நாங்கள் சம்பாதிக்கிறோம் என்கிறார். எட்டாம் வகுப்பு மாணவர்கள் அரசியல் டிராமா போட்டால் கூடக் கொஞ்சம் யதார்த்தமாகவும் சீரியஸாகவும் இருக்கும்.

அரசியல் படமென முடிவெடுத்து விட்ட பின்னும், ஏனோ தானோவென ஒரு குடும்ப அத்தியாயத்தை வைத்துக் கடுப்பேற்றுகிறார் முருகதாஸ். கேள்வி கேட்காமல் இருப்பதுதான் ஜனநாயகத்தின் தோல்வி என்கிறவர், தேர்தல் நாளன்று, உடன் இருப்பவர்களின் கேள்விக்குப் பதிலளிக்காமல் அனைத்தையும் தனிச்சையாகச் சர்வவாதிகாரத்தனத்துடன் முடிவெடுத்துச் செயல்படுத்துகிறார்.

சுந்தர் ராமசாமிக்கு, மக்கள் எல்லாம் மாக்கள் என மிக நல்ல அபிப்ராயம். அவர் தேர்தலில் வெல்ல, ஒரு ட்ரம்ப் கார்டை வைத்திருக்கிறார். ஆனால், அதைத் தேர்தல் நாளன்று, அதுவும் 53% வாக்குப்பதிவு முடிந்த பின் தான் இறக்குவாராம். அதாவது மக்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல், சட்சட்டெனத் தன்னைப் போலவே முடிவெடுக்க வேண்டும் என நினைக்கிறார் சுந்தர் ராமசாமி. அவரிடம், ‘Branding என்றால் என்னென்னு தெரியுமா?’ என்று கேட்டால், ‘தேர்தலில் நின்னு ஜெயிச்சுக் காட்டுறேன்’ என சவால் விடுகிறார்; செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே விடுகிறார்; 32 பிரச்சனை இருப்பது தெரிந்ததும் அதைத் தீர்க்க அப்படியே ஓடுகிறார். சுந்தர் ராமசாமிக்குக் கேள்வி கேட்டால் பிடிக்காது. எது எப்படியோ, சாமர்த்தியமான க்ளைமேக்ஸ் ரசிக்க வைக்கிறது.

சர்கார், தீபாவளி கொண்டாட்டத்திற்குரிய படமில்லை. கதையின் கருவை மீறி, விஜயின் அரசியல் ஆசை வசனங்களில் பட்டவர்த்தனமாய்த் தெரிவது குறை. கீர்த்தி சுரேஷ் படத்தில் உள்ளார் என்பதைப் படக்குழுவே மறந்துவிடுகின்றனர். ஞாபகம் வரும்பொழுது, ‘அட, ஆமாம்ல’ என அவருக்குப் பாடலை ஒதுக்கி விடுகின்றனர். சண்டைக் காட்சிகள் மிக ஸ்டைலிஷாக இருந்தாலும், தேவையில்லாத இடத்தில் பில்டப்பிற்காகத் திணிக்கப்பட்டுள்ளது. பாடல்கள் வருமிடமும் அப்படியே! ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை நன்றாக உள்ளது. அரசியல் எல்லாம் எனக்கு ஜுஜுபி என்ற மனோபாவத்தை மட்டும் சுந்தர் ராமசாமி குறைத்திருந்தால், படம் மாஸாக இருந்திருக்கும்.