Shadow

எ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம்

a-star-is-born-movie-review

இயக்குநர் வில்லியம் A.வெல்மேன், 1937இல் எழுதி இயக்கிய படம் ‘எ ஸ்டார் இஸ் பார்ன்’. 1954 இல் ஒருமுறையும், 1976 இல் மறுமுறையும் ஹாலிவுட்டிலேயே இப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தைத் தழுவி பாலிவுட்டில் கூட ஆஷிக்கி 2 எனும் படம் வெளிவந்தது. அஃபிஷியலாக இப்படம் நான்காம் முறையாக இம்முறை ரீமேக் செய்யப்படுள்ளது.

பார்வையாளர்கள் நிரம்பி வழியும் மேடையில், ஜாக்ஸன் மெய்ன் எனும் புகழ்பெற்ற இசைக் கலைஞனின் அறிமுகம் நிகழ்கிறது. அடுத்த கணமே அவன் போதை வஸ்துக்களுக்கு அடிமையானவன் என்பதையும் அதற்கான அவனது பிரயத்தனங்களுமாய் கதை நகரத் துவங்குகிறது.

என்றேனும் பெரிய ஸ்டார் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையோடு மதுபான விடுதி ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும் ஆலியை ஜாக்ஸன் சந்திக்க, அவளது அசாத்திய குரல் வளத்தைக் கேட்டு அசந்து போகிறான். அன்றைய இரவு முழுவதும் இருவரும் தங்கள் விருப்பு வெறுப்புக்களைப் பரஸ்பரம் பகிர ஜாக்ஸன் அவள் மீது காதல் கொள்கிறான்.

அதனைத் தொடர்ந்து ஜாக்ஸன் தனது நிகழ்ச்சிக்கு ஆலியை அழைத்து வர தனது டிரைவர் ஃபில்லை அனுப்ப அவள் வேலை இருப்பதாக மறுக்கிறாள். விடாப்பிடியாகக் காத்திருந்து அவள் வேலை செய்யுமிடத்திற்கே சென்று காத்திருந்து, அவளை ஜாக்கின் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லுகிறான். இன்ப அதிர்ச்சியாக ஜாக்கின் பிரம்மாண்ட ரசிகர் கூட்டத்தின் முன்னே பாடும் வாய்ப்பு அவளுக்கு வாய்க்கிறது. கூட்டம் அவள் குரலை ஆராதிக்க ஆலியின் வாழ்க்கை ஜெட் வேகத்தில் மேலே செல்கிறது.

ஜாக் தன் உள்ளத்தில் அடக்கி வைத்திருக்கும் ஈகோ + காழ்ப்புணர்ச்சி அவனைப் போதைப் பழக்கத்திற்குள் இன்னும் ஆழ்த்திக் கொண்டே செல்ல, அவன் சரிவில் வீழ்கிறான். அது, ஆலி கிராமி அவார்ட் வாங்கும் கெளரவமான மெடையில் ஜாக் அருவருப்பாக நடந்து கொள்ளும் வரை நீள்கிறது. ஜாக் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுத் தெளிந்து திரும்புகிறான்.

ஜாக் மீதான தனது மீளாக் காதலினால் தனது இசைப் பயணத்தை நிறுத்த முடிவு செய்து தனது இறுதி நிகழ்ச்சியை ஜாக்கிற்கு அர்ப்பணிக்கிறாள் ஆலி. அந்த நிகழ்வில் ஜாக் கலந்துக்கொண்டானா இல்லையா என்பதோடு படம் நிறைவுறுகிறது.

சிங்கிங் இன் தி ரெயின் (Singing in the rain), லா லா லேண்ட் (La La Land) என இசையினை மையமாகக் கொண்ட படங்களைக் கொண்டாடியவர்களுக்கு ‘தி ஸ்டார் இஸ் பார்ன்’ படம் ஒரு டபுள் ட்ரீட்.

லேடி காகா, கூப்பர் இருவரின் ஒருவரையொருவர் மிஞ்சும் அசாத்திய நடிப்பும், அசத்தலான இசையும் கடைசிவரை கட்டிப்போட்டுவிடுகிறது. ஆஸ்கரில் சில இடங்களை இப்போதே ரிஸர்வ் செய்து வைத்துவிடுவது நல்லது. டார்க் ஸீக்வன்ஸ்களுக்கான இடங்களில் கேமரா ‘லோ லைட்’டிலும் அட்டகாசமான மேடை நிகழ்ச்சிகளில் கண்களைக் கூசும் ஒளிச் சிதறல்களிலும் பயணிக்கிறது.

புகழ் குவிந்தும், வலிகளும் வேதனைகளும் தொடர, விடாப்பிடியாக காதலைச் சுமந்து போராடும் காதலியாக லேடி காகாவின் நடிப்பு அபாரம். ஜாக்ஸன் மெயினாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பிராட்லி கூப்பர் இயக்கிய முதற்படமிது என்பது குறிப்பிடத்தக்கது. லேடி காகாவுடன் இணைந்து இந்தப் படத்தின் இசை ஆல்பத்தையும் உருவாக்கியுள்ளார் கூப்பர். படத்தில் இசையும் ஒரு பாத்திரமாகவே மிக முக்கியமான பங்கு வகித்துள்ளது. ஒரு கதை மூன்றாம் முறை சொல்லப்பட்டாலும், சொல்லும் விதத்தில் ரசிக்கும்படி சொன்னால் அவை மாயம் நிகழ்த்தும் என்பதற்கு இப்படம் ஓர் உதாரணம். இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக நிச்சயம் இப்படம் திகழும்.

கணேஷ் நாராயணசுவாமி