படத்தின் முடிவில், “நாங்களும் மனிதர்கள் தான்டா!” என்று கையறு நிலையில் இடுகாட்டில் அழுது புரண்டு அரற்றுகிறார் கோலப்பன். பரியேறும் பெருமாள் படத்தினைத் தொடர்ந்து, தலித்கள் அனுபவிக்கும் கொடுமையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் பேசுகிறது ‘மனுஷங்கடா’ திரைப்படம்.
இந்தப் படம் முடிந்து வெளிவந்ததும், இரண்டு பேர் பேசிக் கொண்டது. “இன்னுமா இப்படிலாம் இருக்கு? என்னமோ படம் எடுக்கிறாங்க!” என்று அலுத்துக் கொண்டார் ஒருவர். அவருடன் வந்த நண்பர், “இன்னும் எங்க கிராமத்தில் இப்படித்தான்ங்க. வேட்டியைக் கூட மடிச்சுக் கட்டக்கூடாது” என்றார். பூனை கண்ணை மூடிக் கொண்டு, உலகம் இருட்டாகிவிட்டது என நினைத்துக் கொள்ளுமாம். அது போல், சமூகம் என்பது தனக்குத் தெரிந்த நான்கு சுவர்கள் மட்டுமே என்ற அறியாமையில் மக்கள் உழல்கின்றனர். அவர்களிடம் உண்மையைக் கொண்டு செல்ல, இது போன்ற படங்கள் மிகவும் அவசியமாகிறது.
வழக்கமான திரைப்படம் போலன்றி, யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டும் ஆவணப்படம் போல் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆவணத்தன்மைக்கு வித்திட்டுள்ளார் P.S.தரன். பிரத்தியேக கோணங்களுக்கு மெனக்கெடாமல், பார்வையாளர்களின் கோணத்தில் (POV) இருந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். கோலப்பனின் ஒரு நண்பராக, அவருக்கு நடப்பதை எல்லாம் அருகிலிருந்து காணச் செய்கிறார். கோலப்பனாக, இயக்குநர் அம்ஷன் குமாரின் மகன் ராஜீவ் ஆனந்த் நடித்துள்ளார்.
மரணித்துவிட்ட கோலப்பனின் தந்தையை, இடுகாட்டிற்குக் கொண்டு செல்ல பொதுப்பாதையை உபயோகிக்கக் கூடாதென ஊரின் பெரும்பான்மையினர் தடுக்கின்றனர். தந்தையின் உடலை வீட்டிலேயே குளிர்பதனப்பெட்டியில் வைத்துவிட்டு, நீதிமன்ற படியேறி நியாயம் பெறுகிறார் கோலப்பன்.
ஆனால், யார் இப்போ எல்லாம் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறார்கள்? நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்க அரசு இயந்திரம் முழு வீச்சில் செயல்படுகிறது. எவ்வளவு கேவலம்? படத்தின் ஆவணத்தன்மையையும் மீறி, அரசு இயந்தரதின் அழிச்சாட்டியம் இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக்குகிறது. நீதிமன்றம், தீர்ப்பு வழங்க எடுத்துக் கொள்ளும் காலம் ஆயாசமளிக்கும் என்றால், அந்தத் தீர்ப்பு எளியோர்க்குச் சாதகமாய் வரும் என்பதற்கான நிகழ்தகவோ மிகவும் கம்மி. அதையும் மீறிப் போராடிப் பெற்ற நீதியை, நடைமுறைப்படுத்த இந்தச் சாதீயச் சமூகம் எத்தனை முட்டுக்கட்டைகளைப் போடுகின்றன. ‘நண்பேன்டா’ என்பது போல் மனுஷங்கடா என்பது பெருமைக்குரிய தொனியோ, மகிழ்ச்சியான சிலாகிப்போ இல்லை. என்று மாறும் இந்த நிலை? படம் சில கசப்பான உண்மைகளைப் பட்டவர்த்தனமாக்கினாலும், பெரும் அவநம்பிக்கையை விதைக்கிறது.
கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் ரசிகனுக்கும் தான் பேசுவதோ பாடுவதோ கேட்க வேண்டுமென்ற அக்கறை மேடை நாடக நடிகர்களுக்கு இருக்கும். அதுவும் காலர் மைக் போன்ற தொழில்நுட்ப வசதி மிகுந்து விட்ட காலத்தில், அதற்கான அவசியமும் மேடை நாடகங்களில் தற்போது இல்லாமல் போய்விட்டது. ஏனோ அம்ஷன் குமாரின் பிரதான கதாபாத்திரங்கள் அத்தகைய நாடக பாணி வசன உச்சரிப்பைக் கைகொள்கின்றனர். ஆனால், படத்தின் பேசுபொருள், குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியின் கனம், அனைத்துக் குறைகளையும் நீர்த்துப் போகச் செய்கிறது.