Shadow

ஆதி 2 குறும்பட விமர்சனம்

aadhi-2-shortfilm-review

ஆதி என்ற குறும்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார் இயக்குநர் அரவிந்த். ஆதி என்பதை ஆதி மனிதன் என்பதற்கான குறியீட்டுச் சொல்லாகக் கொள்ளலாம். Man from Earth என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் பாகத்தில், நாயகன் ஆதி, பல்லாயிரம் வருடமாக இறப்பின்றி வாழ்வதாக நிறுவி இருப்பார்கள்.

பத்து வருடத்திற்கு ஒருமுறை அடையாளத்தையும் இடத்தையும் மாற்றிக் கொள்ளும் ஆதி, இம்முறை அடையாளத்தை மாற்றிக் கொள்ளாமல் இடத்தை மட்டும் சிங்கப்பூருக்கு மாற்றிக் கொள்கிறார். அவரிடம் பயிலும் மாணவர்கள் ஆதியின் உண்மையான அடையாளத்தைத் தெரிந்து கொள்கின்றனர். அவர்களுக்குள் நடக்கும் சுவாரசியமான உரையாடல்தான் இரண்டாம் பாகத்தின் கதை.

வரலாற்று ஆசிரியராக முதல் பாகத்தில் வந்த மொஹிதீனிடமிருந்து படம் தொடங்குகிறது. அவர் ட்யூஷன் எடுக்கும் குழந்தைகளிடம், லெமூரியா என்கிற குமரிக்கண்டம் பற்றி விவாதிக்கிறார். ஆதி, குமரிக்கண்டத்தில் தான் வாழ்ந்த அனுபவம் பற்றிப் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியது. ஆனால், ஆதியுடனான உரையாடல்கள் வேறு திசையில் பயணிக்கிறது. கிருஷ்ணரென முதற்பாகத்தில் சொன்னவர், தஞ்சைக் கோயிலின் கட்டுமானத்தில் ஒருவராக அதைப் பற்றி விவரிக்கிறார்.

இந்தப் படத்தில் என்ன சிறப்பு என்றால், தஞ்சைக் கோயிலின் கட்டுமானத்தைப் பற்றி உரையாடுவதோடு மட்டுமல்லாமல், அனிமேஷனாகவும் விளக்குகின்றனர். எளிமையான 2டி அனிமேஷன்தான் என்றாலும், அனிமேட்டர் ஜெகன்னாதன் படத்திலிருந்து விலகாமல் அதை நேர்த்தியாகச் செய்துள்ளார். சாரம் கட்டி ஏற்றப்பட்ட ஒற்றைக் கோபுரக் கல் என்ற பரவலான ‘மித்’தை உடைத்து, எப்படி அது நிகழ்ந்ததென விளக்கியுள்ளனர். ட்யூஷன் குழந்தைகளுடன் மொஹிதீன் பேசுவது மட்டும் கொஞ்சம் இயல்பற்று அமெச்சூராகத் தொடங்கினாலும், ஆதியிடம் கதை வந்த பின் அக்குறை மறைந்து விடுகிறது.

ஆத்மா ராமா‘ டீசர் பாடல், ஆதி – 2 படத்திற்கான எதிர்பார்ப்பைத் தூண்டும் டீசராக இல்லாவிடினும், ஆதியின் புகழைப் பாடிச் சிலாகிக்கும் பாடலாக ரசிக்கும்படி உள்ளது. படத்தைப் போல் அறைக்குள் மட்டுமே எடுத்தாக வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், பாடலில் ரசனையான தரமான விஷுவல்ஸ் உள்ளது.

நகைச்சுவை என்ற பெயரில் போடும் கழுத்தறுப்பு மொக்கைக் காட்சிகளுக்கு, திரையரங்கில் வெளியாகும் சமகால தமிழ்ப்படங்களைப் போல் இப்படமும் விதிவிலக்கில்லை. சலீம் என்ற பாத்திரம் படத்தின் சீரியஸ்னஸை நன்றாகக் குறைக்க உதவியுள்ளது. இக்குறையைத் தவிர்க்க, மொஹிதீனைப் போலவே முதற்பாகத்து ‘பூகோளம்’ கரிகாலன் பாத்திரத்தையும் கொண்டு வந்திருக்கலாம். உரையாடல்கள் இன்னும் ஆழ்ந்த தத்துவத் தேடலுக்கோ, அறிவியல் புரிதலுக்கோ இட்டுச் செல்லும்படி இயக்குநர் அரவிந்த் மெனக்கெட்டிருக்கலாம். வாட்ஸ்-அப் ஃபார்வேர்ட்களில் சிக்கிக் கொண்ட உணர்வு லேசாய் எட்டிப் பார்த்தது.

முதல் பாகத்தில், வைதேகி மேடத்தித்கு, தனது நம்பிக்கை பொய்க்கும்படி ஆதி சொல்வது எரிச்சலை மூட்டினால், இப்பாகத்தில் கண்ணாவிற்கோ, வேறு மாதிரியான உளவியல் சிக்கல். புத்தசமகால சமூக ஊடகத்தைக் கவனித்து வருபவர்களுக்கு, அந்தச் சிக்கலின் ஆழம் சுலபமாகப் புரியும். அதற்குத் தீர்வெதையும் மெனக்கெடாமல், பார்வையாளரின் யூகத்திற்கே விட்டது சிறப்பு. முதல் பாகத்தில், பிடி மாஸ்டராக க்றிஸாக வருபவர், திடீரென போலி பாஸ்போர்ட் கிடைக்க ஆதிக்கு உதவுகிறார். க்றிஸ் சிங்கப்பூர் வந்தாரா, ஆதி இந்தியா சென்றாரா என்பதில் எல்லாம் தெளிவில்லை. இந்த இரண்டாம் பாகத்தோடு, ஆதியை முடித்துவிடுவார்கள் என்பதை மட்டும் உணர்த்தினர். ஆகா, பத்தாயிரம் வருடத்துக் கதைக்கான பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருந்தாரே ஜெரோம் பிஸ்பி, இயக்குநர் ஏன் இத்தோடு நிறுத்திக் கொள்கிறார், நிறைவாக இல்லையே என்ற எண்ணம் எழும்போது, திணிக்கப்பட்டதாய் வந்தாலும் படத்தின் கடைசி ஃப்ரேம், அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை வெகுவாக எகிறச் செய்துள்ளது.

லெமூரியா கண்டம், அடுத்த பாகத்திற்கான ‘லீட்’ போன்றவற்றை வெள்ளித்திரைக்காக வைத்துள்ளார் போலும் இயக்குநர். அரவிந்த் போன்ற சுயாதீன படைப்பாளிகள், இது போன்ற சோதனைப் படங்களை எடுத்துத் தங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது மிக அவசியம். இது தரும் அனுபவம், அவர்களது அடுத்தடுத்த முயற்சிகளைச் செம்மையாக்கும். அரவிந்திடம், இன்னும் முழுமையான படத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.

(ஆதி 2 குறும்பட ட்ரெய்லர்: https://www.youtube.com/watch?v=-QE0l42iVak )