Shadow

100 – காவல்துறை அதிகாரியாக அதர்வா

100---Atharvaa

ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம் ‘100’. அதர்வா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். மே 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்தப் படத்தை குரு ஸ்ரீ மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் சிஎஸ் பதம்சந்த் ஜெயின்.

“சாம் ஆண்டன் உடன் நான் இணையும் மூன்றாவது படம் 100. முந்தைய இரண்டு படங்களும் நகைச்சிவைப் படங்கள். இந்தப் படம் கதை எழுதப்படும் போதே மிகவும் சுவாரசியமாக இருந்தது. சீட்டின் நுனிக்கு வரவைக்கும் ஒரு த்ரில்லர் படம். திரைக்கதை மிகச்சிறப்பாக இருக்கும்” என்றார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த்.

விக்ரம் வேதா, அடங்க மறு, 100, அயோக்யா என அடுத்தடுத்து போலீஸ் படங்களாக நான் இசையமைத்து வருகிறேன். வெளியில் இருந்து பார்த்தால் எல்லாப் படங்களும் ஒரே மாதிரியாக தோன்றும். ஆனால் திரைக்கதையில் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. ஒரு நல்ல திரைக்கதை தான் பின்னணி இசையைக் கோரும். எனக்கு நகைச்சுவைப் படங்கள் பண்ணனும்னு ஆசை, சாம் எனக்கு கதை சொல்ல வந்தபோது எனக்கு ஒரு நல்ல காமெடி படம் மாட்டிகிச்சு என சந்தோஷப்பட்டேன். ஆனால் இதுவும் ஒரு போலீஸ் படம், சீரியஸ் படமாகவே இருந்தது. அவர் காமெடியை விட த்ரில்லர் படங்களை தான் மிகச்சிறப்பாக எடுக்கிறார். அவர் எனக்கு மிகவும் சுதந்திரம் கொடுத்தார். அது தான் என் வேலையை மிகச்சிறப்பாக செய்ய ஊக்கப்படுத்தியது. அதர்வா உடல் உழைப்பு அபாரம். சண்டைக்காட்சிகளில் கலக்கி இருக்கிறார். இது சமூகத்தில் தற்போது நடக்கிற விஷயங்களைப் பேசும், கண்டிப்பாக இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான ஒரு படம். இந்தப் படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நிச்சயம் அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக அமையும்” என்றார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.

“அதர்வா சாரிடம் கதை சொல்ல போன போது என்னை நம்பி சீரியஸான கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார். கதைக்கு ஏற்ற வகையில் ஒரு மீட்டரில் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் மகேஷ் என் கல்லூரி சீனியர். அவர் எனக்கு இந்தப் படத்தைக் கொடுத்தார். எந்த தயக்கமும் இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ எல்லாவற்றையும் கொடுத்தார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தான் திரில்லர் படம் பண்ணுங்க என ஆரம்பத்திலேயே என்னை ஊக்கப்படுத்தினார். பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதைப் பேசும் ஒரு படமாக இருக்கும்” என்றார் இயக்குனர் சாம் ஆண்டன்.

“தமிழ் சினிமாவில் நிறைய போலீஸ் படங்கள் வருகின்றன. அதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இது காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் பின்னணியில் நடக்கும் ஒரு கதை. இந்த மாதிரி ஒரு படத்தில் நடித்தது எனக்குப் பெருமையான விஷயம். சாம் ஆண்டன் ஆக்ஷன் படங்களை மிகச்சிறப்பாக எடுக்கிறார். அவர் தொடர்ந்து ஆக்ஷன் படங்களை இயக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். சமூகத்தில் சமகாலத்தில் நடக்கும் விஷயங்களை இந்தப் படம் பேசும். நிச்சயம் இது என் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்” என்றார் நடிகர் அதர்வா.