Shadow

ஆண் தேவதை விமர்சனம்

Aan-Devathai-movie-review

முன்னாள் பத்திரிகையாளரான இயக்குநர் தாமிரா, இயக்குநர் இமயத்தையும் சிகரத்தையும் ஒன்றாக நடிக்க வைத்து ரெட்டச்சுழி எனும் படத்தை 2010 இல் எடுத்தவர். எட்டு வருடங்களுக்குப் பிறகு அவர் தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார்.

சிறகுகள் உதிர வெண்ணிற இறக்கைகள் மேகத்தினூடே பறக்க, ஆண் தேவதை என்ற பெயர் திரையில் வருகிறது. படத்தின் தொடக்கமே, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் பற்றிய சமுத்திரக்கனியின் விளக்கத்தோடு, “தீதும் நன்றும் கற்றுத் தருவோம்”என படம் தொடங்குவது சிறப்பு. அந்தச் சிறப்பு, படம் முழுவதும் நீள்கிறது. எது சரி, எது தவறென விளக்கிக் கொண்டே இருக்கிறார் சமுத்திரக்கனி. ஒரு கட்டத்தில் கடுப்பாகும் நாயகி, “என்னை அட்வைஸ் பண்ணியே கொன்னுடாத!” எனக் கதவை டமாலென மூடுகிறார்.

நாயகி ரம்யா பாண்டியனும், சமுத்திரக்கனியும் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆதிரா, அகரமுதல்வன் என இரட்டைக் குழந்தைகள் அத்தம்பதிக்குப் பிறக்கின்றன. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் சூழலில், பிள்ளைகளைக் கவனிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ரம்யா வேலையை விட மறுக்க, சமுத்திரக்கனி வேலையை விட்டுவிட்டு “ஹெளஸ் ஹஸ்பண்ட்” ஆகப் பதவியேற்கிறார். சிறு சிறு பிணக்குகள், பெரும் ஈகோ மோதலாகி, சமுத்திரக்கனி மகளோடு வீட்டை விட்டு வெளியேறுகிறார். மகனோடு ரம்யா பாண்டியன் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறார். இந்த ஈகோ அவர்களை எங்குக் கொண்டு சென்று நிறுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை.

தேவதை என்பது பெண்பால் சொல் என்ற பொழுது, முரணாக ஆண் தேவதை எனத் தலைப்பிட என்ன காரணம்? குடும்பம், பந்தம், பாசம் முதலிய மிருதுதன்மைக்கு எல்லாம் பொருந்தாக் குணவார்ப்பைப் பெற்றவர்கள் வானிலுள்ள இறவாத் தேவன்கள். தேவதை என்றாலோ அன்பு, காதல், குளிர்ச்சி முதலிய குணத்துடன் பொருத்திக் கொள்ள இயலும். நாயகனாகப்பட்டவன், அப்படியொரு மிதுதுவான அரவணைக்கும் குணத்தினன் என்பதன் குறியீட்டுத் தலைப்பாகப் பொருள் கொள்ளலாம்.

ஆனாலும் இந்தப் படம், ஆண்வயச் சிந்தனையைச் சற்று உரக்கவே பேசுகிறது. கணவன் நல்லவன், மனைவிக்கோ பொருளாசையும் பிடிவாதமும் அதிகம், அதனால் அவள் சிக்கலில் ஆழ்கிறாள் என்பது போல் திரைக்கதை நீள்கிறது. அதாவது, ‘தனக்கு யாருமே இல்லை’ என்ற குறை நீங்க தான் நாயகனைக் கைபிடிக்கிறார் நாயகி. உறவுகளின் அருமை உணர்ந்து விரும்பித் தனக்கென ஓர் அழகான குடும்பத்தை உருவாக்குகிறாள். விருப்பு வெறுப்புகள் காலந்தோறும் மாறும் என்றாலும், வேலையில்லாக் கணவன் கையில் போதுமான பணமில்லாமல் வெளியேறும் பொழுது, கூடவே மகளையும் அழைத்துச் செல்கிறான். அதைத் தடுக்காமல் சிலையென இருக்கிறார் ரம்யா பாண்டியன். குழந்தையின் அடுத்த வேலை உணவே கேள்விக்குறி என்ற சூழலில், எந்த ஒரு தாயாலும் அவ்வளவு கல் நெஞ்சத்துடன் சிறு பதற்றமுமின்றி இருக்கமுடியாது. நாயகிக்குப் புத்தி கற்பிக்கவேண்டுமென்ற தீர்மானித்துடன் கதையைத் தொடங்கியது ஓகே. அதற்காக ரெடிமேடாகக் காரணிகளை அடுக்காமல், இன்னும் யதார்த்தமாகக் கதையைக் கொண்டு போயிருக்கலாம்.

புத்தி கற்றுக் கொள்ள வேண்டிய நாயகி என்ன வேலை பார்க்கிறாள்? இயக்குநர் ராமிடமிருந்து அதைக் கடன் வாங்கிக் கொள்கிறார் தாமிரா. டேக் ஹோம் 75000/- சம்பாதிக்கும், சோஷியல் ட்ரிங்கைத் தவறில்லை எனக் கருதும் ஐ.டி. ஊழியை. ‘பெண்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்தால் என்னாகும்? அவர்கள் கெட்டுப் போகமாட்டார்களா? அந்தக் குடும்பம் உருப்படுமா?’ போன்ற கேள்விகளுக்கு ஆண் தேவதை எத்தகைய வரத்தை வழங்குகிறார் என்பதே படத்தின் முடிவு.

“பி.எம்.டபிள்யூ.” காரே தான் வாங்க வேண்டுமென பெலிட்டோவிற்கும் ஜெசிகாவிற்கும் ஆசை. பெலிட்டோவாகச் சுஜா வருணியும், ஜெசிகாவாக ரம்யா பாண்டியனுன் நடித்துள்ளார்கள். அதனால் சுஜா வருணி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். வங்கியின் சார்பாகப் பணத்தை வசூலிக்க வரும் ஹரீஷ் பெராடி அச்சுறுத்துகிறார். அவர்களது நிறுவனத்தில் பணி புரியும் அபிஷேக், பெண்களை அடைய நினைக்கும் வழக்கமான ஐடி ஊழியர் பாத்திரத்தில் வருகிறார். பாபநாசம் படத்தில் கெளதமியின் தம்பியாகக் குணசித்திர வேடத்தில் அறிமுகமான அவருக்கு, அவரது ஆகிருதி காரணமாக ஒரே மாதிரியான பாத்திரத்தைக் கொடுத்து வருகிறது தமிழ் சினிமா.

ஆதிராவாக பேபி மோனிகாவும், அகரமுதல்வனாக மாஸ்டர் கவின் பூபதியும் நடித்துள்ளனர். இரண்டு குட்டீஸ்களும் கதைக்குக் கச்சிதமான தேர்வு. லாட்ஜில், பக்கத்து அறையில் இருந்து எழும் ஓசையில் இருந்து மகளின் கவனத்தைத் திருப்ப சமுத்திரக்கனி படும்பாடு எவருக்கும் நேரக்கூடாத ஒன்று. இப்படியான சீரியஸ்னஸைக் கிண்டல் செய்யும் விதமாகவே அறந்தாங்கி நிஷா வரும் காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளன. ‘நல்லது பண்ணலைன்னா புல்லட் ரெளத்தருக்குத் தூக்கமே வராது’ என்ற புகழ்ச்சியடன் கெளரவத் தோற்றத்தில் அறிமுகமாகிறார் ராதாரவி. உள்ளபடிக்கு, அனைவரையும் வாரி அணைத்துக் கொள்ளும் அவர்தான் உண்மையான ஆண் தேவதை. வெளியில், சில மணி நேரம் விழாவிற்குச் செல்லும்பொழுது கூட குழந்தைகளுக்கு டயபர் போடக்கூடாது எனப் பிடிவாதம் பிடிக்கும் சமுத்திரக்கனிக்கு அட்வைஸ் சாத்தான் எனும் பட்டம் வேண்டுமானால் பொருந்தும் (pun intended).

ஜிப்ரானின் இசை, ஆண் தேவதையான குடும்பத் தலைவன் சுமக்கும் சிலுவையின் ஓசையையும், குழந்தைகளின் குதூகலத்தையும் தேவைக்கேற்ப ஒலிக்கிறது. உத்தியோகம் புருஷ லட்சணம் என்றும், பெண் “ஹெளஸ் வொய்ஃப்”பாகத் தன் வேலையை ஒழுங்காகத் தொடர்ந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்ற அரிய கருத்துடன் படம் சுபமாக முடிகிறது.