வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.
இசை வெளியீட்டு விழாவில் இமைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில், “எனக்கும் பா.விஜய்க்கும் இருபது வருட பழக்கம். எங்கள் கூட்டணியில் வெளியான பாடல்கள் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. பாடல் ஆசிரியராகத் தொடங்கி, இன்று இயக்குநராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் அவருடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதற்குப் பின்னணியில் அவரும், அவருடைய தந்தையாரின் உழைப்பும் இருக்கிறது.
இந்தப் படத்தில் அவரை நான் பாடகராகவும் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டுகிறேன். இந்தப் படத்தில் அவர் சொல்லியிருக்கும் கருத்து, அவரின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது. இன்றைய சமூகத்திற்குத் தேவையான விசயத்தைக் கவிநயத்துடன் சொல்லியிருக்கிறார். இதற்காக நான் அவரைத் தலைவணங்குகிறேன். வர்ஷா என்ற இளம்பெண்ணையும் பாடகியாக நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்” என்றார்.