
வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், “நான் மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில் நான் நடிகனில்லை. ஆனால் எனக்கு பா.விஜயைப் பிடிக்கும். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா.விஜய் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் எந்தக் கேரக்டரில் நடித்தாலும், அந்தக் கேரக்டரில் ஒரு காட்சியிலாவது அதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தோன்றிவிடுவார். ஆனால் இந்தப் படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் என்னுடைய எபிசோடில் ஒரு காட்சியில் கூட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தோன்றவேமாட்டார். அந்தக் கேரக்டர் மட்டுமே இருக்கும். அந்த வகையில் இந்தக் கேரக்டரை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் பா.விஜய்.
நான் பெற்றோர்களை உடன் வைத்துக் கொள்வதில் பெருவிருப்பு உடையவன். அதே போல் இயக்குநர் பா.விஜயின் வளர்ச்சிக்காக அவருடைய தந்தையார் உழைப்பதைக் கண்டு ஆனந்தமடைந்திருக்கிறேன். இந்தப் படத்தின் படபிடிப்பிற்காகக் கும்பகோணத்திற்குச் சென்றிருந்த போது அங்கு பதிமூன்று தலைமுறைகளாகச் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தோம். அங்குள்ளவர்கள் என்னுடைய கெட்டப்பைப் பார்த்துவிட்டு அவர்கள் வியந்து போய் உரிமையுடன் எங்களுடைய தந்தையாரைப் பார்த்தது போலிருக்கிறது என்று சொன்னார்கள். அப்போதே இயக்குநரிடம் இந்தப் படம் பெரிய அளவிற்கு வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் சொன்னேன்” என்றார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “என்னுடைய உதவியாளராக பா.விஜய் சேரும் போது பாடல் எழுதுவதற்காகத்தான் வந்தேன் என்றார். ஆனால் அவரிடத்தில் ஏரளாமான திறமைகள் இருந்திருக்கிறது. அதைப் பற்றி என்னிடம் சொல்லவேயில்லை. இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அவருடைய உதவியாளர் இங்குப் பேசும் போது, பாடல் எழுதும் பயிற்சி பெறும் போதே பகுதி நேரமாக அவர் இசைப்பயிற்சியையும் எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டார். இந்தப் படத்தின் கதையை ட்ரைலரிலேயே பா.விஜய் சொல்லிவிட்டார். இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும், என்னுடைய உதவியாளர் விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதற்காக அவரைப் பாராட்டுகிறேன். அதே போல் விஜயின் கனவுகளை நனவாக்குவதற்காக அவருடைய தந்தையார் அளித்து வரும் ஒத்துழைப்பு மறக்க முடியாது.
இந்தப் படத்திற்காக பா.விஜய் உழைத்த உழைப்பு எனக்குத்தான் தெரியும். கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு எப்போதும் வீணாகாது என்பது என்னுடைய நம்பிக்கை. அதே போல் பா ல்விஜய், பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, அதற்கு பின் இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இருந்தாலும் பாடல் எழுதுவதையும், கவிதை எழுதுவதையும் அவர் விட்டுவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
பாடலாசிரியரும் நடிகரும் இயக்குநருமான பா.விஜய் பேசுகையில், “1996 ஆம் ஆண்டில் என்னுடைய குருநாதர் கே.பாக்யராஜ் அவர்களின் ஆசியுடன் ஞானப்பழம் என்ற படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானேன். இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு பிறகும், கடந்த வாரம் வெளியான மோகினி என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரம்மாண்டமான பாடலாசிரியர்கள் வாழும் இந்தத் திரையுலகில் 22 ஆண்டு பயணமென்பது எளிதானதல்ல. இதற்குக் காரணமான என்னுடைய குருவிற்கும், ஆதரவளித்து அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தமிழ்த் திரையுலகில் பழைய படத்தில் யார் நடித்திருந்தாலும் அந்தப் படத்தில் ரீமேக் செய்துவிடலாம். ஆனால் என்னுடைய குருநாதர் கே.பாக்யராஜ் நடித்த எந்தப் படத்தையும் தற்போது எந்த ஹீரோவை வைத்தும் ரீமேக் செய்ய முடியாது. சில்மிஷம், குறும்புத்தனம், ஹீரோயிஸம் இல்லாத ஹீரோயிஸம், புத்திசாலித்தனம் எனப் பல நுணுக்கமான விசயங்களைத் தன்னுடைய திரைக்கதையில் வைத்திருப்பார். அவரை இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறேன்.
எஸ்.ஏ.சி என்னுடைய திரையுலக ஆசான் மற்றும் நண்பர். அவரை இந்தப் படத்தில், வித்தியாசமான கெட்டப்புள்ள கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறேன்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களுடன் பா.விஜய், இயக்குநர் கே.பாக்யராஜ், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,மேகாலி, யுவா, சோனி சிரிஸ்டா மற்றும் பாடகியாக அறிமுகமாகியிருக்கும் வர்ஷா, பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், ஒளிப்பதிவாளர் பி.எல்.சஞ்சய், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.