Shadow

ஆருத்ரா விமர்சனம்

Arudra-movie-review

குழந்தைளுக்கு எதிரான வன்முறையைப் பேசும் படமென பா.விஜயே, இசை வெளியீட்டில் படத்தின் ஒரு வரிக் கதையைச் சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு, இல்லையில்லை பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர்களே போலீஸாக இருந்து பாதுகாக்கவேண்டும் என்பது தான் படம் முன் வைக்கும் அழுத்தமான கருத்து.

படம் ஆகாயவதத்தில் தொடங்கி, நிலசதுக்கத்தில் முடிகிறது. அதாவது பஞ்சபூதங்களைக் கொண்டு, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்களைப் பழிவாங்குகிறார் படத்தின் நாயகனான சிவமலை. ஜல சமாதி, அக்னி சாபம், காற்றுப்படலம் என இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் வைத்துக் கொல்கிறார்.

ஆனால், படத்தின் முதற்பாதியில் பா.விஜய் மிகவும் இம்சிக்கிறார். நான் கடவுள் இராஜேந்திரனையும் கே.பாக்யராஜையும் கொண்டு மிக அசட்டுத்தனமான மலிவான நகைச்சுவை, திணிக்கப்பட்ட கவர்ச்சி, ஐட்டம் சாங் என அநியாயத்திற்கு ஒப்பேத்தி நெளிய வைத்துவிடுகிறார். எதிர் வீட்டுப் பெண்ணை நான் கடவுள் இராஜேந்திரன் சைட்டடிப்பது, டிடெக்டிவான பாக்யராஜின் அசிஸ்டென்ட்டாக வரும் அவரது மைண்ட்-வாய்ஸ் என ஒருவழி செய்துவிடுகிறது படத்தின் முதற்பாதி.

இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்-பேக் தான் வயிற்றில் பாலை வார்க்கிறது. அதிகம் பேசாத எஸ்.ஏ.சந்திரசேகர்க்கு அந்தக் கதாபாத்திரம் மிக அழகாய்ப் பொருந்தியுள்ளது. நாயகனின் தங்கை ஆருத்ராவாக அம்மா கணக்கு யுவலட்சுமி நடித்துள்ளார். விக்னேஷ் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றிக் கிலியை ஏற்படுத்துகிறார். பா.விஜய் செய்யும் பிரம்மாண்டமான ருத்ராமூர்த்தி சிலை கம்பீரமாய் அழகாய் உள்ளது. கலை இயக்குநர் ராம் பிரசாதின் உழைப்பு, படத்தின் முதல் ஃப்ரேம் முதலே அட்டகாசமாய் வெளிப்படுகிறது.

பா.விஜய், இன்னும் பொறுப்பாய்த் திரைக்கதையை அமைத்திருக்கலாம். எத்தனை பேர் வந்தாலும் வெட்டும் ஹீரோயிசம் தான் பிரதானமாக இருக்கிறதே தவிர, எடுத்துக் கொண்ட கருவிற்கு நியாயம் கற்பிக்க மிக மோசமாகத் தவறியுள்ளார் பா.விஜய்.