Shadow

இமைக்கா நொடிகள் விமர்சனம்

imaikka-nodigal-movie-review

கொலையை ரசித்துச் செய்யும் ஒரு கொலைக்காரன், அவனைப் பிடிக்க நினைக்கும் ஒரு பெண் சி.பி.ஐ. அதிகாரி என இருவருக்கு இடையில் நடக்கும் ஆடுபுலியாட்டம்தான் இமைக்கா நொடிகள் படத்தின் கதை.

ருத்ராவெனும் சைக்கோவாக அனுராக் கஷ்யப் அதகளப்படுத்தியுள்ளார். அனுராகின் அட்டகாசமான உடற்மொழியுடன், மிரட்டும் முகபாவனையுடன், மகிழ் திருமேனியின் கம்பீரமான குரல் செம்புலப் பெயல் நீர் போல் ஒன்றிக் கொள்கிறது. ட்ரெய்லரிலேயே அந்த ரசவாதத்தினை உணரலாம். படத்திலேயோ, அது தொடக்கம் முதல் கவ்விக் கொள்கிறது. வில்லனாக அனுராக் கஷ்யபையும், அவருக்கு டப்பிங் தர மகிழ் திருமேனியையும் தேர்வு செய்ததற்காகவே இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதை முழுதும் ரசிக்க முடியாதளவுக்கு, குறுக்கும் நெடுக்குமாக அதர்வா – ராஷி கண்ணாவின் காதல் அத்தியாயம் குறுக்கிடுகிறது. படத்தின் நீளமோ அயர்ச்சித் தருமளவுக்கு இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்களாக உள்ளது. நாயகன் என்றால் காதல் அத்தியாயம் இருக்கவேண்டும் என்ற இலக்கணத்தை இயக்குநர் மீற விரும்பாவிட்டால், அதற்கு த்ரில்லர் வகைமையைத் தொட்டிருக்கவே கூடாது. தொட்டதுதான் தொட்டார், அதைச் சுருங்கச் சொல்லிச் சிக்கனத்தையாவது கடைபிடித்திருக்கலாம். அபிஷேக் வரும் காட்சிகளை எல்லாம் திரைக்கதையிலேயே ஓப்பன் பண்ணாமல் இயக்குநர் தடுத்திருக்க வேண்டும்; அல்லது, அங்குத் தப்பிப் பிழைத்ததைப் படத்தொகுப்பிலாவது புவன் ஸ்ரீனிவாசன் கத்திரித்திருக்க வேண்டும்.

சி.பி.ஐ. அதிகாரி அஞ்சலி விக்கிரமாதித்யனாக நயன்தாரா. அனுராக் கஷ்யப்பிற்கும், நயன்தாராவுக்குமான முதற்பாதி கண்ணாமூச்சி விறுவிறுப்பாக உள்ளது. இவர்களுக்கு இடையில், அதர்வா கதைக்குள் வந்ததும் விறுவிறுப்பு சற்றே குறைந்தாலும், படத்தின் சுவாரசியம் எங்கும் மட்டுப்படவில்லை. நேர்க்கோட்டில், சைக்கோ Vs சி.பி.ஐ. அதிகாரி என ஒரே கதையாக இருந்திருந்தால், படம் மிகச் சிறந்த த்ரில்லராக இருந்திருக்கும். இரண்டு காதல் கதைகள், இரண்டு பழிவாங்கும் கதைகள் என நான்கு கிளைக்கதைகள் படத்தில் முளைக்கின்றன. உதாரணம், விஜய் சேதுபதியின் ஃப்ளாஷ்-பேக் என்ன தான் இதமாக இனிமையாக இருந்தாலும், க்ளைமேக்ஸ்க்கு முன் ஒரு த்ரில்லர் படத்தில், அது ஒரு திணிப்பாகவே உள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பின்னணி இசை, பல காட்சியில் த்ரில்லர் படத்துக்கான மனோநிலைக்குக் கொண்டு சென்றாலும், மெளனிக்க வேண்டிய இடத்திலும் உச்சஸ்துதிதில் உற்சாகமாக ஒலிக்கிறது,

இரண்டாம் பாதியில் அதர்வா சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். இரண்டு முறை நயன்தாராவால் சுடப்படுகிறார். மருத்துவர், குண்டுகளை அதர்வா உடம்பில் இருந்து எடுத்ததும், அதர்வா ஓடுகிறார் தவ்வுகிறார் குதிக்கிறார் பாய்கிறார், நரம்புகள் முறுக்கேறச் சண்டையிடுகிறார். காரிலும், பைக்கிலும் துரத்தும் பெங்களூரு போலீஸிடம் இருந்து சைக்கிளில் இலகுவாகத் தப்பிக்கிறார். குண்டடிப்பட்ட உடலாச்சே எனப் பார்வையாளர்களுக்கு இருக்கும் பதற்றம் அதர்வாவிற்குக் கொஞ்சம் கூட இல்லை.

‘அப்பாவிகளைப் பிடித்து அடித்து உதைப்பீங்களா?’ எனப் போலீஸைச் சாடும் சி.பி.ஐ., ‘கேள்வி கேட்டா தேசத் துரோகியா?’ என சி.பி.ஐ.-யைக் கேட்கும் வில்லன் என்று படத்தில் ஆங்காங்கே பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் பளீச்சிட்டாலும், எதுவும் தனித்து மனதில் நிற்காத அளவு திரைக்கதை நீளமாக உள்ளது. கற்றுக் கொண்ட மொத்த வித்தையும் இறக்கிவிட்டதைப் போல, கதை சம்பந்தமாக யோசித்த அனைத்தையும் திரைக்கதையாக்கி, திரைக்கதையில் எழுதிய அனைத்தையும் படமெடுத்து, படமெடுத்த அனைத்தையும் திரையில் உலாவ விட்டுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.