

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில், உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
படத்தொகுப்பாளர் ஷ்யாம், “இந்தத் திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் உதயாவும், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸும் ஒன்றிணைந்து பணியற்றிருக்கிறார்கள். நாங்கள் இந்தப் படத்தின் திரைக்கதையின் வேகத்தைக் குறைப்பதற்காக சில உத்திகளைக் கையாண்டிருக்கிறோம். ஏனெனில் இந்தப் படத்தின் திரைக்கதை மிக வேகமாக இருக்கும்” என்றார்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், ”கன்னடத்தில் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் என்னுடைய திரையுலக வாழ்க்கை தமிழில் தான் தொடங்கியது. சுந்தர்.சி, தனுஷ், அர்ஜுன் ஆகியோர் நடித்த படங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறேன். கிட்டத்தட்ட 400 பாடல்களுக்கு மேல் நடன இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, கன்னடத்தில் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அங்குச் சென்று படத்தை இயக்கினேன். ஒரே தயாரிப்பாளருடன் தொடர்ந்து ஐந்து திரைப்படங்களை இயக்கினேன். அதன் பிறகு சொந்தமாக ஒரு படத்தைத் தயாரித்து இயக்கினேன். இது என்னுடைய இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம். ஆனால் தமிழில் முதல் படம்.
கன்னடத்தில் ஆக்ஷன் ஃபிலிம் டைரக்டர் என்ற பெயரைச் சம்பாதித்து இருக்கிறேன். தமிழில் அறிமுகமாகும் போது மிகப் பிரம்மாண்டமான படத்தை இயக்க வேண்டும் என்று தான் எண்ணியிருந்தேன். இதற்காக லாரன்ஸ், விஷால் போன்ற சில ஹீரோக்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தத் தருணத்தில் என் குடும்ப உறுப்பினர்கள், ‘நீங்கள் அப்படி நினைக்க கூடாது. நீங்கள் கன்னடத்தில் படத்தை இயக்கும் போது சின்ன படமாகத் தான் இருந்தது. ஆனால் அந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனால் நீங்கள் இயக்கும் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என நினைத்து உருவாக்குங்கள்’ என ஆலோசனை சொன்னார்கள். அதன் பிறகு ஆறு மாதம் அமெரிக்காவிற்குச் சென்று விட்டேன்.
அதன் பிறகு பிஆர்ஓ நிகில் முருகன் தான் இந்த அக்யூஸ்ட் படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார். அவர்தான், ‘உதயா கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரைச் சந்தித்துக் கதையைச் சொல்லுங்கள்’ என்றார். அதன் பிறகு அவரைச் சந்தித்து கதையைச் சொன்னேன். கதையை முழுவதுமாகக் கேட்டுவிட்டு, ‘கதை நன்றாக இருக்கிறது. குறிப்பாக என்னுடைய கேரக்டர் நன்றாக இருக்கிறது. நாளை தயாரிப்பாளரை சந்திக்கிறோம்’ என்றார். தயாரிப்பாளர்களுக்கும் கதை பிடித்திருந்தது. இந்தக் கதையில் நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்தார். அவருக்குக் கதை சொன்ன தருணத்திலிருந்து தற்போது வரை முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
கதையில் இடம்பெறும் மற்றொரு கதாபாத்திரத்திற்கு யோகி பாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். கதையைக் கேட்ட அவர் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கத் தொடர்ந்து 14 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒத்துழைப்பு அளித்தார். இந்தப் படம் அனைவரையும் மெஸ்மரைஸ் செய்யும். இந்த படத்தைப் பற்றிய ஏதேனும் எதிர்பார்ப்பு இருந்தால் அதைவிட அதிகமாகவே இருக்கும். திரைக்கதையில் யாரும் யூகிக்காத திருப்பங்கள் இருக்கும். படம் தொடக்கம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் பார்க்கும் படி இருக்கும்” என்றார்.
நடிகர் அஜ்மல், “’அஞ்சாதே’ படத்தில் பணியாற்றிய போது எனக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது. ‘கோ’ படத்தில் பணியாற்றிய போதும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது. அதேபோன்று பாசிட்டிவ் எனர்ஜி இந்தப் படத்தில் பணியாற்றிய போதும் எனக்குக் கிடைத்தது. அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
நாயகன் உதயா, “சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவை நிறைய நேசித்ததன் காரணமாக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம். அதற்காக நல்ல கன்டென்டுக்காகக் காத்திருந்தேன். நான் இன்று வரை எந்தப் படமாக இருந்தாலும் தியேட்டருக்குச் சென்று பார்த்து ரசிப்பவன். எது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது, பிடிக்கும் என்பதனை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் தான் கதையைக் கேட்கத் தொடங்கினேன்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் முதலில் கன்னடத்தில் வெளியான படம் ஒன்றைத் தமிழில் ரீமேக் செய்யலாம் என்று சொன்னார். ‘அது டார்க் காமெடி, எனக்கு ஒத்து வராது’ என்று சொல்லி, ‘புதிதாக கன்டென்ட் இருந்தால் அதைச் சொல்லுங்கள்’ என்றேன். அத்துடன் எனக்கான பட்ஜெட் இதுதான் என்றும் சொன்னேன். ஆனால் அவர் சொன்ன அக்யூஸ்ட் கதை பெரிய பட்ஜெட் படம். இதைத் தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவர்கள் தான் இதற்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால் தான் இந்தப் படம் உருவானது.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் கிளாரிட்டியான டைரக்டர். அவருக்குத் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. அத்துடன் பிரபு ஸ்ரீநிவாஸ் தயாரிப்பாளர்களின் இயக்குநராகவும் இருக்கிறார்” என்றார்.
ஆகஸ்ட் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


