Shadow

ஆக்‌ஷன் விமர்சனம்

action-tamil-movie-review

தலைப்பிற்குத் தகுந்தாற்போல் படம் முழுவதும் விஷாலின் முழு நீள ஆக்‌ஷன் மட்டுமே! சுநதர்.சி படங்களின் வழக்கமான கலகலப்பை எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றமே மிஞ்சும்.

தேர்தலில் நின்று முதல்வராக வேண்டிய அண்ணனையும், தனது காதலியையும் கொன்றவர்களைத் தேடி லண்டன், இஸ்தான்புல், அங்கிருந்து தரை மார்க்கமாகப் பாகிஸ்தான் வரை சென்று பழி தீர்க்கிறார் இந்திய ராணுவத்தின் கர்னலான சுபாஷ்.

படம் தொடங்கியதுமே, ‘அட!’ போட வைக்குமளவு டட்லியின் ஒளிப்பதிவில் இஸ்தான்புலின் நிலப்பரப்பு ஈர்க்கிறது. விஷால் யாரை ஏன் அடிக்கிறார் என்று தெரியாவிட்டாலும், இஸ்தான்புல்லின் குன்றுகளாலான ஏரியாவும், அந்த அடுக்கி வைத்தாற்போல் இருக்கும் குடியிருப்புகளும்,

மர்டர் மிஸ்ட்ரி போல் தொடங்கும் படம் நாயகனின் புஜபல பராக்கிரமத்தை மட்டுமே நம்பிப் பயணிக்கிறது. படத்தின் முக்கியமான திருப்பங்களை எல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் கடந்துள்ளது மிகக் கடியாக உள்ளது. ஆக்‌ஷன் ஜானரென முடிவெடுத்த பின், சா ரா வின் மொக்கை நகைச்சுவைக் காட்சிகளை எல்லாம் தவிர்த்திருக்கலாம் சுந்தர்.சி. அல்லது அவரது அளவுக்கு நகைச்சுவையினை யோசித்திருக்கலாம்.

பாகிஸ்தானின் பாதுகாப்பில் இருக்கும் வில்லன், தமிழ்நாட்டில் சுலபமாகக் குண்டுவெடிப்பு நடத்துகிறார். இருக்கும் இடத்தில் இருந்து, அது அவருக்கு எப்படிச் சாத்தியமானதென்ற வில்லத்தனத்தை இன்னும் வலுவாகக் கட்டமைத்திருக்கலாம். விஸ்வரூபம் படத்தின் வில்லன் ஓமர் பயமுறுத்தியிருப்பார். ஆனால், இந்தப் படத்திலோ, கபீர் துஹான் சிங், தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான ஆஜானுபாக வில்லன். ஒரே வித்தியாசம், ஹீரோக்களிடம் எகிறுவதற்குப் பதில் பாகிஸ்தானின் ராணுவ ஜெனரலிடம் எகிறிக் கொண்டிருக்கும் வில்லன்.

மீராவாக நடித்திருக்கும் ஐஸ்வர்ய லக்‌ஷ்மியும் சரி, தியாவாக நடித்திருக்கும் தமன்னாவும் சரி, நாயகனின் மேல் காதலில் விழும் கதாநாயகிகள். கைராவாக நடித்திருக்கும் அகன்க்ஷா பூரிக்கு மட்டும் சொல்லிக் கொள்ளும்படியான ஆக்‌ஷன் ரோல். ஆனால் ஜன்னல் வெளியில் வைக்கப்பட்டிருக்கு ஏசி மெஷின்களில் குதித்துக் குதித்துத் தப்பிக்கும் அந்த சண்டைக் காட்சியெல்லாம் ஹாலிவுட் படங்களில் பார்த்துப் பழகிய ஒரு ஸ்டன்ட்டாக உள்ளது.

பின்லேடன் போன்றதொரு கெட்டப்பில் விஷாலைப் பார்த்ததும் திரையரங்கில் பார்வையாளர்கள் ஒரே ஆரவாரம் செய்கின்றனர். விஷாலின் உயரத்திற்கு அவ்வேடம் கச்சிதமாகப் பிருந்துகுறது. கிராக் ஜாக்காக, யோகிபாபு ஒன்றிரண்டு காட்சிகளில் வந்தாலும், தனது கவுன்ட்டர் வசனங்களால் கலகலக்க வைக்கிறார். ஆனால், ஹேக்கிங்கில் பெரிய ஆளான கைரா, யோகிபாபு வீட்டுக் கதவிலோ அல்லது எதிர்வீட்டிலோ ஒரு கேமிரா பொருத்தி, அவரே நேரடியாகக் கண்காணிக்கக் கூடிய வல்லமை பொருந்தியவர். எதிர்வீட்டு முதியவர்கள், ஒவ்வொரு முறையும் கதவைத் திறந்து பார்த்து கைராவிற்கு ஒற்றேவல் புரிவது நல்ல காமெடி.

படத்தின் காட்சிகள் பரபரப்பாக நகர்ந்து கொண்டே இருப்பது மட்டுமே ஆக்‌ஷனின் ஒரே ஆறுதல்.